• சமையல்

வெகுஜோரான வெண்டைக்காய் முந்திரி பொரியல்!


சாந்தி கார்த்திகேயன்





வெண்டைக்காய் என்றாலே எங்கள் வீட்டில் மகனும் மகளூம் காத தூரம் ஓடுவார்கள். ‘’அதென்ன குழகுழனு ஒரு காய்? எங்களுக்கு வேண்டாம்’’ என்று அடம் பிடிப்பார்கள்.

‘’வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை கூர்மையாகும். கணக்குல ஃபர்ஸ்ட் மார்க் வாங்கலாம்’’’ என்ரெல்லாம் சொல்லிப் பார்த்தும் பயனில்லை.

அப்புறம் ஒரு பஞ்சாபி தோழி வீட்டுக்குப் போனபோது, சப்பாத்தியும் முந்திரிப் பருப்பு போட்ட இந்த பிண்டி (அதாங்க.. வெண்டைக்காய்) மசாலவும் பரிமாற, நாக்கு சப்புகொட்டி சாப்பிட்டார்கள். அப்புறமென்ன?1 எங்கள் வீட்டிலும் பிண்டி மசாலா இஷ்ட தெய்வம் (ஸாரி.. பொரியல்) ஆகிவிட்டது. என் தோழியிடம் கற்ற ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/2 கிலோ

பூண்டு - 4

முந்திரி - 8

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்

வரமிளகாய் - 1

எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, முனை, நுனியை கட் பண்ணி கொள்ளுங்கள். அடுப்பில் வாணலி சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் முந்திரியைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து அத்துடன் வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடவும். வெண்டைக்காய் மொறுமொறுவென்று ஆகும்வரை அவ்வப்போது தட்டைத் திறந்து கிளறி வேகவிடவும்.

வெண்டைக்காய் நன்கு வெந்ததும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் முந்திரி பொரியல் தயார். இதைசாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

சப்பாத்தி, நான் வகையறா டிபன் ஐட்டங்களுக்கு சூப்பர் சைடு டிஷ். அவற்றுக்கு செய்யும்போது இந்த பொரியலில் சிறிது கரம் மசாலா சேர்த்தால் சுவை கூடும்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :