• இதர

காற்றில் கலந்த கணினித் தமிழ்!


- எம்.கோதண்டபாணி





பிரபல தமிழ் நாளிதழ் `தினமலர்` பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியரும் நாணயவியல் அறிஞருமான இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று (மார்ச் 4) இயற்கை எய்தினார். அவருக்கு வயது 88. நாகர்கோவில் அருகில் உள்ள வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்த இவர், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், வறுமை ஒழிய வேண்டும் என்பது போன்ற சமூக சிந்தனைகளுடன் செயல்பட்டவர் ஆவார்.

சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்திய நாணயங்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்த, இரா.கிருஷ்ணமூர்த்தி, அதுதொடர்பான பல நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். பாண்டிய மன்னன் பெருவழுதி அறிமுகப்படுத்திய நாணயம் குறித்து 1985-ம் ஆண்டு காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வாசித்த பெருமை இவருக்கு உண்டு.

பெரியார் அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்து சீர்மை முறையை முதன்முறையாக 1966-ம் ஆண்டே `தினமலர்` நாளிதழில் ஒரு பத்தி செய்தியாக அச்சு கோர்த்து வெளியிட்டு அறிமுகப்படுத்தியவர் இவரே. அதன் பிறகே தமிழக அரசும் மற்ற பத்திரிகைகளும் தமிழ் எழுத்து சீர்மை முறையை பின்பற்றத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் என்ற கிராமத்தில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்காக, `காஞ்சி மக்கள் மன்றம்` என்ற சேவை அமைப்பு உருவாக்கிய படிப்பகத்துக்கு பொருளுதவி செய்த சமூக நல சிந்தனையாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி. பின்தங்கிய ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிகப்பெரும் அக்கறையோடு செயல்பட்ட இவர், தமது நாளிதழின் மூலம் `ஜெயித்துக் காட்டுவோம்` என்ற நிகழ்ச்சியை நடத்தி பல மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கியவர்!

கணினித் தமிழுக்கும் இரா.கிருஷ்ணமூர்த்தி பெரும் பங்காற்றியுள்ளார். இவரது இந்தப் பணியைப் பாராட்டி, `கணினி தமிழ்ச் சங்கம்` இவருக்கு விருது வழங்கி கெளரவித்தது நினைவுகூரத்தக்கதாகும். இதுபோன்ற இவரது சமூக சிந்தனைகள் பலவற்றையும் பாராட்டும்விதமாக இந்திய, தமிழக அரசுகளும், பல்கலைக்கழகங்களும் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.






Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :