• அறிவியல்

நிலவுக்கு போகலாம்..வர்றீங்களா?: ஜப்பான் தொழிலதிபர் அழைப்பு!





தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், 2023-ம் ஆண்டு நிலவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விண்கலம் அனுப்பவுள்ளது! இந்த விண்கலத்தில் பயணிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.

இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் நிலவுக்கு சுற்றுலா சென்று வர ஜப்பானியத் தொழிலதிபர் யுசாகு மெய்சாவா அந்நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்தினார். இதில் சுவாரஸ்யமான விஷ்யம் என்னவென்றால், நிலவுக்கு தான் மட்டும் பயணிக்க விரும்பாமல், தன்னுடன் சேர்த்து இன்னும் எட்டு நபர்களுக்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கிறார் மெய்சாவா.

அந்த டிக்கெட்டுக்கு உலகம் முழுவதிலுமிருந்து எட்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து இலவசமாக தன்னுடன் நிலவுக்கு அழைத்து செல்ல விரும்புவதாக மெய்சாவா தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டு நிலவுக்கு மேற்கொள்ளவிருக்கும் இந்த விண்வெளி பயணத்துக்கு முதன்முதலாகப் பதிவு செய்தவர் மெய்சாவாதான்! இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் செல்லவுள்ள விண்வெளி ராக்கெட்டில் நிலவுக்குச் செல்ல ஆர்வமாகவுள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விண்வெளி பயணத்தில் தன்னுடன் எட்டு நபர்களை அழைத்துச் செல்வதாக விரும்புவதாகவும், அதற்கான கட்டணத்தை தான் முன்கூட்டியே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு செலுத்தி விட்டதாகவும் மெய்சாவா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் அந்த வீடியோவில் பேசியதாவது:

’’நிலவில் கால் பதிக்கவேண்டும் என ஆர்வமாக உள்ள உலகப் பொதுமக்கள் இலவசமாக என்னுடன் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன். என்னுடன் எட்டு நபர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறேன். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல 2023-ம் ஆண்டு திட்டமிட்டுள்ளது. பூமியிலிருந்து நிலவுக்கு செல்ல மூன்று நாட்களும், அங்கிருந்து திரும்பி பூமிக்கு வர மூன்று நாட்களும் ஆகும்.

இந்த மொத்த பயணத்திற்கு நான் உலகம் முழுவதிலும் இருந்து தேர்வுச் செய்யும் எட்டு நபர்களுக்குப் பயணச் செலவு உட்பட அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்கிறேன். அப்படி என்னுடன் பயணிக்க இரண்டு தகுதிகள் தேவை! ஒன்று – நிலவுக்குச் செல்ல ஆர்வமாக இருக்கவேண்டும் அடுத்து – அதற்கான உடற்தேர்வு உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இந்த இரு தகுதிகளும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உங்களைப் பற்றி தகவலை எனக்கு அனுப்பலாம்’’ என்று மெய்சாவா தெரிவித்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :