• விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிறவிப் போராளிகள்!


கட்டுரை: சோனா பார்த்திபன்

இந்தியா –ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தஒடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று புகழ்மிக்க சாதனை படைத்தது. இந்திய அணிக்கு எப்படி இது சாத்தியமாயிற்று?

பிரிஸ்பேன் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டம் தொடங்கும் முன்னர் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் (Fox Sports) நிகழ்ச்சித் தொகுப்பாளர் டொம் வில்சன், குயின்ஸ்லாந்தின் பிரபல கிரிக்கெட் விமரிசகரான ராபர்ட் கிரெடாக் என்பவரிடம் கேள்வியெழுப்பினார்..

இந்திய வீர்ர்களிடம் அண்மைக்காலமாக வெளிப்படும் வலிமையான அந்த போராட்ட குணத்துக்கு காரணம் அவர்கள் பிறந்து வளர்ந்த பின்னணிதான் என்று கிரெடாக் குறிப்பிட்டார்.

அதாவது இந்திய கிரிக்கெட் மரபுவழி தேர்வு முறையில் வீரரகள் இதுவரை நகரப்புற பகுதிகளிலிருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது நகரங்களுக்கு வெளியே சென்று சிறு கிராமங்களிலும்கூட திறமையாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அப்படி சிற்றூர்களிலிருந்து வரும் இளைஞர்கள் இயற்கையிலேயே மனவலிமை கொண்டவர்கள். ஆனால் மிக எளீமையானவர்கள்! அதற்குக் காரணம் – கீழ்நடுத்தரத் தட்டிலிருந்து அவர்கள் பிறந்து வளர்ந்த சூழ்நிலை!

உதாரணமாக சார்துள் தாக்கூர்! இவர் மும்பை நகரிலிருந்து நூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் அவர் பயிற்சிகளுக்காக ரயிலில் தனது பிரயாணப் பைகள் உபகரணப் பைகளை சுமந்தவாறு மும்பை நகருக்கு வந்து போவார், அவர் தனது முதலாவது சர்வதேசத்தொடர் முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது சாதாரணமாக பொதுமக்களோடு ஒருவராக ரயிலில்தான் சென்றார். இந்தியாவின் சூப்பர் கிரிக்கெட் ஸ்டார் ஒருவர் சாதாரணமாக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்ததை இதற்குமுன் கேள்விப் பட்டிருக்க முடியாது!

இது ஒரேயொரு விஷயத்தைத்தான் தெளிவுபடுத்துகிறது அதாவது – இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்கள் பெரிய நட்சத்திர அந்தஸ்திலான வீரர்களாக இருந்தாலும், மிகவும் எளிமையான பின்புலத்திலிருந்து வந்த தங்கள் இயல்பான வாழ்க்கை முறையை மறக்கவில்லை என்பதுதான்!

மற்றொரு வீரரான ரோகித் சர்மாவும் அப்படித்தான்! மிகவும் ஏழ்மையான பின்புலம் கொண்டவர்! பெற்றோரால் அவரை வளர்ப்பதற்குக்கூட வசதி இருக்கவில்லை அதனால் தன் தாத்தா – பாட்டியிடம் வளர்ந்தார் ரோகித். இவர்கள் சிறுவயதிலிருந்தே கடினமான பின்னணியிலே வாழ்ந்து கடின வாழ்க்கைக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்ட இளைஞர்கள்.

முந்தைய தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் அப்படியல்ல.. நாகரீகமான நகர்ப்புறங்களிலிருந்து தேர்வானவர்கள்! சவுரவ் கங்குலி ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர். இவர்களின் நாசூக்கான குணாதிசயங்களை கணிக்க முடியும்.

ஆனால் இப்போதைய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் வறிய சூழ்நிலையில் போராட்டங்களுக்கும் சவால்களூக்கும் நடுவே போராடி உருவானவர்கள். அதனால் அவர்கள் இயற்கையாகவே அசாத்திய மனவலிமையும் உடற்திறனும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய இந்தியா கிரிக்கெட் மாபெரும் வெற்றியின் மிகப்பெரிய பலமும் சக்தியும் இதுவேயாகும்.

-இவ்வாறு கிரெடாக் தெரிவித்த கருத்துக்கள் நூறு சதவீதம் உண்மைதானே?!

பும்ரா சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் வளர்ப்பில் கீழ்நடுத்தரதக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், ஹார்திக் பாண்டியா வியாபாரத்தில் தோல்வியுற்ற தந்தையின் மகன். அன்றாட செலவுகளுக்கே போராட்டம்தான்! தமிழகத்தின் செல்லப் பிள்ளை ’’யார்க்கர்’’ நடராஜன் பற்றிச் சொல்லவே தேவையில்லை! திருச்சி அருகே பின்தங்கிய கிராமப்புறத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து போராடியவர், முகமது சிராஜ் னிலமையும் அப்படித்தான்! மூன்று சக்கர வண்டியில் பொருட்களை விற்ற வியாபாரியின் மகன்!

ரவீந்திர ஜடேஜா தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியின் மகன்! ரிஷாப் பண்ட் தொலைதூர சிற்றூரிலிருந்து வார இறுதி நாட்களில் தாயுடன் ரயிலில் பயணீத்து வந்து கிரிக்கெட் பிராக்டீஸ் செய்தவர்! விலை மலிவான விடுதிகளில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து கிரிக்கெட் பயிற்சி நிலையத்துக்கு வந்து பயிற்சி பெற்று முன்னேறியவர்.

இவ்வாறு போராடியே வாழ்க்கையை நடத்தியவர்களுக்கு மைதானத்தில் போராடுவது ஒன்றும் புதிய விசயமல்ல. அதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் அபார வெற்றிக்கு காரணம்!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :