• ஆன்மிகம்

திருமணத் தடை நீக்கும் திருவிடைக்கழி முருகன்!


ஆர்.வி.ராமானுஜம்





நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன் திருத்தலம் முகவும் சக்திவாய்ந்தது. இங்கு முருகப் பெருமான் சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். இவரை தரிசித்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு : சூரபத்மனை முருகர் வதம் செய்தபின்பு, சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்து கொண்டான் சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகர் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகப் பெருமானுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க திருவிடைக்கழி திருத்தலத்திலுள்ள குரா மரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் `திருக்குராவடி` என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.

சிவனுடன் முருகன் : இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடியும் உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்திலும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளன. இங்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். இங்கு வந்து தரிசிப்பவர்கள் குராமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால், மனத்தெளிவு, அறிவுக்கூர்மை ஆகியவை உண்டாகும். இத்தலத்தில் சரவண தீர்த்தம், கங்கை கிணறு என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஏழுநிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது.

நிச்சயதார்த்த தலம் : முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை, தவம் செய்த தலம் இது. இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. தெய்வானையின் முகம், வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத்தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். முதல்படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடை பெற்றதாலும், முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் `விடைக்கழி` எனப்படுகிறது.

நடைப்பயணம்: திருமணத்தடை நீங்க வைகாசி, புரட்டாசியில் நடைப்பயணம் வருகின்றனர்.

செல்வது எப்படி: திருக்கடையூரில் இருந்து 6 கி.மீ., மயிலாடுதுறையில் இருந்து 21 கி.மீ தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.

விசேஷ நாட்கள் : தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை ஆகியவை!

தரிசன நேரம்: காலை: 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

.

தொடர்புக்கு :

04364 - 285 665, 95666 23777

அருகிலுள்ள தலம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்

திருவிடைக்கழி




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :