• விளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் : நேரடி ரிப்போர்ட்!


சிவா, மெல்போர்ன்

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல்நாள் ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் சனிக்கிழமையன்று (டிசம்பர் 26)..

தோனியின் ஓய்வுக்குப் பிறகு எனக்கு கிரிக்கெட்டில் சற்றே ஆர்வ குறைவு தோன்ற ஆரம்பித்தது. இந்த நேரத்தில்தான் இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை துவங்கியது. முதலில் ஓரிரு போட்டிகளில் தோல்வி அடைந்ததும்... ஆர்வமே இல்லாமல் போகும்போதுதான் அந்த செய்தி வந்தது.

தமிழ் நாட்டிலிருந்து பந்து வீச்சாளர் நட்ராஜ் யார்க்கர் பாலில் மிகப் பிரபலம் அடைந்தவர் என்று. ஆஸ்திரேலிய தமிழர்களிடையே மீண்டும் ஆர்வம் தொற்றிக் கொள்ள தொடங்கியது. அந்த ஆர்வம் நட்ராஜ் பங்கு பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றதும் பின்பற்ற காரணமாக அமைந்தது.

20-20 போட்டிகளும் ஒரு நாள் போட்டிகளும் முடிந்த தருவாயில் டெஸ்ட் தொடரில் நட்ராஜை சேர்த்துக் கொள்வார்கள் என்ற ஒரு நப்பாசை எங்களிடத்தில் இருந்தது. நட்ராஜ் இல்லை என்றவுடன் ஏமாற்றம் கலந்த சோர்வு ஏற்பட்டது. வரலாறு காணாத 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இவர்கள் எப்போதுமே இப்படித்தான். நம்பி ஆர்வமாக பார்க்கும்போது ஏமாற்றத்தையே கொடுப்பார்கள் என்று நினைக்கத் தோன்றியது.

அப்போது வந்த செய்தி விராட் கோலி முதல் டெஸ்ட்டுடன் தாயகம் திரும்புகிறார் என்று... இந்திய கிரிக்கெட்டில் இருந்து வெகு தூரம் வந்து விட்டதால் எனக்கு அவ்வளவாக தெரியவில்லை, அடுத்த கேப்டன் யாராக இருப்பார் என்று... என் மனதுக்குள் அருமையான பந்து வீச்சாளர்; அனுபவம் வாய்ந்தவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அந்த பதவி கிடைக்கும் என்று நம்பினேன்.

என்னுடைய நண்பர் சாமி கிரிக்கெட் விக்டோரியாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட டிஸ்டிரிக் லெவல் அம்பயர். சைமன் டோ பிலால் ட்ரெய்னிங் கொடுக்கப்பட்டவர். ஆஸ்திரேலிய அம்பயர் பால் ரைபிளுடன் அம்பெயரிங் செய்துள்ளார். அவருக்கு பொதுவாக கிடைக்கும் இரண்டு காம்ப்ளிமெண்டரி டிக்கெட்டுகள் இரண்டாவது பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு கிடைத்தது.

முதல் டெஸ்ட்டின் மோசமான தோல்வியால் அவர் அதை எனக்கு அனுப்பிவிட்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலங்களில் எல்லோரும் செல்வதுபோல் ட்ரிப்புக்கு சென்றுவிட்டார். நட்ராஜ் கண்டிப்பாக இரண்டாவது டெஸ்டில் இருப்பார் என்ற அதிக அதீத நம்பிக்கையுடன் நான் செல்வதற்கு தயாரானேன்.

ஏமாற்றம் தொடர்ந்தது... ரவிச்சந்திரன் அஸ்வினும் கேப்டன் இல்லை நட்ராஜும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் பாக்சிங் டே முதல் நாள் எம்.சி.ஜி. கிரிக்கெட் கிரவுண்டில் பார்ப்பது மிக மிக விசேஷமான ஒன்று. பலமுறை பார்த்திருந்தாலும் புத்துணர்வு கொண்டு சென்றேன்.

ஆஸ்திரேலியாவிற்கு உல்லாசமாக வரும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் எம்.சி.ஜி. கிரிக்கெட் கிரவுண்ட். ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய அற்புதமான விளையாட்டரங்கம். ஒவ்வொரு செக்ஷனிலும் ஒவ்வொரு புளோரிலும் ஒவ்வொரு ஃபுட் கோர்ட் பலப்பல சானிடைசர் ஸ்டேஷன்கள்... வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்...

பாக்சிங் டே டெஸ்ட் 2

26 டிசம்பர் காலை 9 மணிக்கு கேட்டை திறக்க உள்ளே சென்றேன். இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் ஒவ்வொரு பகுதியில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டிருந்தனர். ரவி அஸ்வினை கண்டு மகிழ்ச்சியுற்ற நான் நட்ராஜை என்னை மீறி தேடிக் கொண்டிருந்தேன். பார்க்க முடியவில்லை. மண்ணின் மகளின் (aboriginal elder) சிற்றுரையுடன் துவங்க... இரு நாடுகளின் நேஷனல் அனந்தம் பாடி முடித்த பிறகு இரண்டாவது டெஸ்ட் தொடங்கியது.

முதல் டெஸ்டில் பெற்ற தோல்வி அதிக எதிர்பார்ப்புகளை தரவில்லை எனக்கு அன்றைய தினம். யார் நன்றாக ஆடினாலும் ரசிப்பவன் நான். தொடக்கம் முதலே இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு கொடுத்த நெருக்குதல் ஏனோதானோ என்று பார்க்காமல் உன்னிப்பாக பார்க்க வைத்தது.

அன்றைய தினம் இருந்த கூட்டத்தில் என்னுடைய கணிப்புப்படி 60- 65 சதவிகிதம் இந்திய அணியின் சப்போர்ட்டர்களே. அதில் 95% விசிறிகள் எப்போதும் போல் உணர்ச்சிகரமாக இந்திய அணியின் பந்து வீச்சின் ஒவ்வொரு ஓவரையும் ஆரவாரத்துடன் அமர்க்களமாக ரசித்தனர். இவைகளையெல்லாம் நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருப்பீர்கள்.

ஆனால் என்னைப் போன்ற இங்கு குடியேறியவர்கள் மிகவும் வருத்தத்துடன் கூற சில விஷயங்களும் நடந்தது. நான் அமர்ந்திருந்த பிளாக்கிற்கு பக்கத்து ப்ளாக்கில் ஒரு ஆறு நபர்கள் ஒரே விதமாக ஆரஞ்சு கலரில் உடையணிந்து துவக்கத்தில் இந்திய அணிக்கு சாதகமான கோஜங்களை மற்றவர்களைப் போல் தான் எழுப்பினார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல கிரிக்கெட்டுக்கு சம்பந்தமில்லாத கோஷங்களை எழுப்ப துவங்க... கண்காணிப்புக்கு மிகவும் பேர் போன எம்.சி.ஜி. கிரிக்கெட் கிரவுண்டின் பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆறு போலீஸ் வந்து அவர்களை வளைத்து அழைத்துச் சென்று வெளியேற்றியது

என்னைப் போன்றோருக்கு மிகவும் அவமானமாக இருந்தது. இதேபோன்று ஆனால், கிரிக்கெட்டுக்கு சம்பந்தமாக இருந்தாலும் மிகவும் அநாகரிகமாக நடந்ததாக மேலும் இரு இந்திய குழுக்களையும்... இரு ஆஸ்திரேலிய குழுக்களையும் போலீசார் வெளியேற்றினர். பொதுவாக anti-social எலிமெண்ட்ஸை இதுபோன்று வெளியேற்றுவது சாதாரணம்தான்.

வேறொரு குழு சுமார் ஐந்து அல்லது ஆறு நபர்கள் மஞ்சளும் சிவப்பும் உள்ள கொடிகளை ஏந்தி ஆக்ரோஷமாக கோஷங்களை நாள் முழுவதும் எழுப்பிக் கொண்டிருந்தனர். இன்று தான் தெரிந்தது அது கர்நாடக மாநிலத்தின் கொடி என்று... இதுபோன்று விளையாட்டை அதுவும் வெளிநாடுகளில் அரசியல் ஆக்குவது மிகவும் ஆபத்தானது. ஆஸ்திரேலிய போலீசார் நம்மூர் போல் அல்ல... இத்தகைய வீடியோ பதிவுகள் தீவிரமாக அலசப்படும். நம் நாட்டவர் குடியேறிய நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது அவர்களுக்கு மட்டுமல்லாமல் நம் நாட்டுக்கும் நல்லது.

Comments

Chandran says :

Real true storey Wonderful

Shan Krishna says :

யாரையும் புண்படுத்தாமல் ஒரு அழகான செய்தி. பல விஷயங்கள் உண்மையானதாக மாற வேண்டும். காகிதம் மற்றும் மீடியாவில் மட்டுமல்ல

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :