• விளையாட்டு

53 ஆண்டு கால தவம்: யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்றது இத்தாலி!

லண்டனில் நடந்த யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்று, தங்களது 53 ஆண்டுகள் தாகத்தை தீர்த்துக் கொண்டது இத்தாலி அணி.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (Euro) போட்டி, கடந்த மாதம் 11-ம் தேதி தொடங்கியது. இதில் 24 அணிகள் இந்த சுற்றில் பங்கேற்றன.

இதில், லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றின் முடிவில் இங்கிலாந்து - இத்தாலி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த இரு அணிகளுமே லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்ததால், இதன் இறுதிப் போட்டி மீது பரபரப்பான பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷா, போட்டி தொடங்கிய 1 நிமிடம் 57 வது வினாடியில் முதல் கோல் அடித்து அசத்தினார். யூரோ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், மிகக் குறைந்த நேரத்தில் அடிக்கப்பட்ட கோல் இதுவேயாகும். இதனால், மிகுந்த தன்னம்பிக்கையுடன் இங்கிலாந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது.

இதனைத்தொடர்ந்து, நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமமானது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் வெற்றியாகவில்லை. மேலும் பெனால்ட்டி ஷூட் முறைக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக இங்கிலாந்து இரண்டாவது கோல் அடிக்க கடுமையாக போராடியும் பலனிருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் ஃபெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடிக்க, கோப்பை இத்தாலி கைவசம் சென்றது. இதன் மூலம், இரண்டாவது முறையாக, இத்தாலி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1968-ல் யூரோ சாம்பியன் கோப்பையை வென்ற இத்தாலி அணி, தற்போது 53 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், இத்தாலி அணிக்கு ரூ.89 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதேசமயம், பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கிய இளம் வீரர் கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி தங்களது கோப்பை கனவை பறிகொடுத்தது. இங்கிலாந்து அபாரமாக விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாததால், தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் ரசிகர்கள் கதறி அழுத சம்பவங்களும் அரங்கேறின.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :