• சமையல்

தீபாவளி பலகாரங்கள்!


சம்யுக்தா சரண்குமார்





நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது, அதாவது 80-களில் தீபாவளி பண்டிகை அமர்க்களப்படும். புது டிரெஸ், பட்டாசு, பட்சணம் என்று ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே பரபரக்க ஆரம்பித்து விடுவோம். ஸ்கூலில் இடைவேளையின்போதும் இதே பேச்சாக இருக்கும்.

எங்கள் வீட்டில் அம்மா பலவகை பலகாரங்கள் செய்தாலும், தீபவளியன்று கடவுள் படத்துக்கு முன்பு புது துணிகள், பட்டாசு ஆகியவற்றுடன் இனிப்பு உக்காரை மற்றும் தீபாவளி லேகியத்தை வைத்து படைத்து கும்பிடுவது வழக்கம். அந்தவகையில் முதலில் உக்காரை செய்முறை:

இனிப்புப் பலகாரங்கள்:

உக்காரை

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு: 1 கப்.

கடலைப் பருப்பு: 1 கப்

வெல்லம் - 2 கப்

நெய் -3 டேபிள்ஸ்பூன்.

முந்திரி, திராட்சை: தலா ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்த் தூள்- 1 டீஸ்பூன்.

செய்முறை:

வாணலியை சூடாக்கி, அதில் பாசிப் பருப்பையும் கடலைப் பருப்பையும் போட்டு சிவக்க வறுத்துக்கொள்ளுங் கள். பின்னர் அவற்றை இருமுறை தண்ணீரில் கழுவியபின், இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் கொரகொரப்பாக அரையுங்கள். பின்னர் அந்த மாவை இட்லிப் பானையில் வேகவைத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அடிகனமான வாணலியில் வெல்லத்தைப் போட்டு, ஒர் கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சி, அத்துடன் உதிர்த்து வைத்த பருப்புக் கலவையைச் சேர்த்து தேவையான நெய் விட்டுக் கிளறுங்கள். கலவை உதிர் உதிராக வந்ததும் ஏலக்காய்ப்பொடி சேர்த்து கிளறினால் கமகமக்கும் உக்காரை தயார். பின்னர் வேறொரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து உக்காரையில் சேர்க்கலாம்.

.

மைசூர் பாகு

தேவையான பொருட்கள் :

கடலை மாவு: 1 கப்,

சர்க்கரை: 2 கப்,

உருக்கிய நெய்: 2 கப்,

தண்ணீர்: 1 கப்.

செய்முறை:

கடலை மாவை கட்டியில்லாமல் சலித்தபின், வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். நெய்யை உருக்கி வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் ஒற்றைக் கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். பின்னர் அத்துடன் சிறிது சிறிதாக கடலை மாவைக் கொட்டிக் கிளறவும். அத்துடன் உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். கடலை மாவு நுரைத்துப் பொங்கி வரும். மேலும் அதுவரை நாம் சேர்த்த நெய் பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து விடவும். வாணலியிலிருந்து மைசூர்பாகு கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டவும். சூடு சற்று ஆறியதும் செவ்வக வடிவில் துண்டுகள் போடவும். டிரெடிஷனலான சூப்பர் மைசூர்பாக் தயார்.

.

முந்திரி கத்லி

தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்பு - 1 கப்,

சர்க்கரைத் தூள் - 1 கப்,

ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,

சில்வர் பேப்பர் - அலங்கரிக்க,

நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

முந்திரிப் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். மிக்ஸியில் விட்டு விட்டு அரைக்க வேண்டும். அப்போதுதான் முந்திரி விழுது பதம் சரியாக வரும். பின்னர் ஒரு அடிகனமான கடாயில் சர்க்கரை, முந்திரி விழுது சேர்த்து கை விடாமல் கிளறவும். அவ்வப்போது நெய் சேர்க்கவும். கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது எசென்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும். சிறிது நெய் தடவிய தட்டில் முந்திரி விழுதைக் கொட்டி அதன் மேல் சில்வர் பேப்பர் ஒட்டவும். ஆறியதும் துண்டுகள் போட்டால், சுவையான முந்திரி கதலி தயார்.

.

இனிப்பு சோமாசி

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு...

மைதா: 250 கிராம்,

ரவை: 1/2 கப்,

நெய்: 1 டீஸ்பூன்.

உப்பு: தேவைக்கேற்ப.

பூரணம் செய்ய...

கசகசா - 1 டேபிள்ஸ்பூன், பொடித்த பொட்டுக் கடலை - 1/2 கப், பொடித்த சர்க்கரை - 1 கப், வறுத்து நறுக்கிய முந்திரி - தேவைக்கு, கொப்பரை தேங்காய் - 1 மூடி (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய் - தேவைக்கு, எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை:

மேல்மாவுக்கான பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து வையுங்கள். கசகசாவை வறுத்து பொடிக்கவும். அத்துடன் பூரணத்துக்குத் தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பிசைந்து வைத்த மேல்மாவை பூரிகளாக இட்டு, அதனுள் ஒரு டீஸ்பூன் பூரணம் வைத்து மாவை அரை வட்டத்துக்கு மடித்து ஒட்டவும். ஓரங்களை சோமாசி கட்டர் மூலம் வளைவாக கட் செய்யலாம். எல்லா சோமாசிகளையும் தயார் செய்துகொண்டபின், மிதமான தீயில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

.

பிரெட் குலாப்ஜாமூன்

தேவையான பொருட்கள்:

பிரட்: 1 பாக்கெட்.

ரெடிமேட் குல்கந்து: கால் கப்.

குங்குமப்பூ: 1 சிட்டிகை.

சர்க்கரை: 2 கப்.

ஏலக்காய் பொடி: 1 டீஸ்பூன்.

எலுமிச்சை சாறு: சில துளிகள்.

எண்ணெய்: பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:

ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவு தாண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். பாகு கெட்டிப்படாமலிருக்க சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் அத்துடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து கலக்கவும். விரும்பினால் ரோஸ் எசன்ஸும் சேர்க்கலாம்.

பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெண்ணிற நடுப்பகுதியை மட்டும் உதிர்த்து கொள்ளுங்கள். அத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து ஜாமூன் மாவு பதத்திற்கு தயாரித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் சிறிதளவு ரோஜா குல்கந்து வைத்து மூடி, மீண்டும் நன்கு உருட்டிக்கொள்ளவும். மிதமான தீயில் எண்ணை காய்ந்ததும் குல்கந்து உருண்டைகளை போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். பின்னர் அவற்றை நாம் தயாரித்து வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைக்கவும். சுவையான பிரெட் குல்கந்து ஜாமூன் தயார்.

.

வேர்க்கடலை முள்ளு முறுக்கு:

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்

அரிசி மாவு - 1 கப்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

எள் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

வெண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். பின்னர் அத்துடன் அரிசி மாவு, மிளகாய்த் தூள், எள், பெருங்காயம், இளக்கிய வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்துக்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து பிசையலாம்.

பிறகு, வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும் முறுக்கு அச்சில் மாவை நிரப்பி, எண்ணெய்யில் நேரடியாக பிழியவும். ஒருபுறம் வெந்ததும் முறூக்குகளை மறுபுறம் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வேகவைக்கவும். எண்ணையில் சலசலப்பு சத்தம் அடங்கியதும் முறுக்குகளை எடுக்கவும். மொறுமொறுப்பான முறுக்குகள் தயார்.

குறிப்பு: வாணலியில் எண்ணெய் சூடாக இல்லை என்றால் முறுக்கு பிழிந்ததும் எண்ணெயில் பிரிந்துவிடும். அதனால் எண்ணெய் சூடாக இருப்பது முக்கியம். ஆனால் முறூக்கு வேகும்போது அடுப்பு மிதமான தீயில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முறுக்கு சரியாக வேகாமல், கருகி விடும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :