• அரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திரை நட்சத்திரங்கள்!


சீனிவாச மூர்த்தி





தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரமுகர்களும், பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர்.

`மக்கள் நீதி மையம்` கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். அதில் வெறும் 1,708 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-வைச் சேர்ந்த வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

நடிகரும், இயக்குநருமான சீமான் `நாம் தமிழர்` கட்சியின் சார்பில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.அவருக்கு 48,597 வாக்குகள் மட்டுமே கிடைக்கப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

நடிகை ஸ்ரீப்ரியா `மக்கள் நீதி மையம்` கட்சியின் சார்பில் சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்த வகையில் நடிகை ஸ்ரீப்ரியா 14,094 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் `திராவிட முன்னேற்றக் கழக`த்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு 93,285 வாக்குகள் கிடைக்கப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

நடிகை குஷ்பூ, `பாரதீய ஜனதா கட்சி`யின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டார். நடிகை குஷ்பூ 39,405 வாக்குகளைப் பெற்று திமுக-வின் வேட்பாளரான எழிலனிடம் தோல்வியடைந்தார்.

நடிகர் சினேகன் `மக்கள் நீதி மையம்` கட்சியின் சார்பில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதேபோல், நடிகர் மன்சூர் அலிகான் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியிலும் நடிகர் மயில்சாமி விருகம்பாக்கம் தொகுதியிலும் சுயேட்சைகளாக களமிறங்கி தோல்வியைத் தழுவினர்.

இதற்கிடையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் இறந்ததால், அத்தொகுதிக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடத்தப் பட்டது. அதில் `இந்திய தேசிய காங்கிரஸ்` கட்சியின் சார்பில் வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டு வெற்றிவாகை சூடியுள்ளார். இவர் 5,76,037 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரிடம் வெற்றியைப் பறிகொடுத்த பிரபலம் பாஜக-வின் பொன்.ராதாகிருஷ்ணன்.

அதேபோல, `ஜிப்ஸி` திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ். அம்பேத்குமார் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 1,02,064 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இப்படி தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், உதயநிதி ஸ்டாலின், எஸ்.அம்பேத்குமாரும் மட்டும் வென்றது குறிப்பிடத் தக்கது. அதேபோல் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தலில் விஜய் வசந்த் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

வெற்றி தோல்வி வாழ்க்கையில் சகஜம். வெற்றி கண்டவரும் தோல்வி கண்டவரும் உண்மையோடு மக்கள் சேவை செய்வதை தொடரட்டும்,

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :