• சினிமா – சின்னத்திரை

ஆஸ்கார் 2021: காணொலிக் காட்சி மூலம் விருது விழா!


சுமதி தேவராஜன்





கொரோனா 2-ம் அலை அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் தீவிரம் எடுத்திருப்பதால், இந்த வருட ஆஸ்கர் விருது வழங்கும் விழா கடந்த ஆண்டு போலவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது.

ஆஸ்கார் விருது விழா ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெறும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த விழா கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுரைகளுக்கு உட்பட்டு நடந்தது. அதேபோல, இந்த வருடம் பிப்ரவரி 28-ம் தேதி நடக்கவிருந்த ஆஸ்கர் விழா பின்னர் ஏப்ரல் 25-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால், பிப்ரவரி 28-ம் தேதி வரை வெளியான படங்கள் போட்டியில் பங்கேற்கவும் விதியில் மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் முதன்முறையாக இந்த வருட ஆஸ்கார் போட்டிக்கு நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியான படங்களையும் அனுப்பலாம் என்று அறிவிக்கப் பட்டது. அதன் காரணமாகவே, சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படம் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதோடு, பரிந்துரைக்கு தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்ட 366 திரைப்படங்களில் பட்டியலிலும் அந்தப் படம் இடம்பெற்றது.

வழக்கமாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் டால்பி தியேட்டரில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழா, இந்த ஆண்டு மற்றொரு அரங்கிலும் நடைபெற உள்ளது. மேலும் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட கலைஞர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களிலும் விருது விழா நிகழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டைப் போலவே தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறும் இந்த வருட ஆஸ்கர் விழாவில், விருது பெற்றவர்கள் மட்டுமே நேரடியாக விழாவில் கலந்து கொண்டு, விழா மேடைக்கு வருவார்கள் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி, விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மற்ற கலைஞர்கள் அனைவரும், ரிமோட் லொகேஷன்கள் எனப்படும் தனித்தனி இடங்களில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக இந்தமுறை விருது விழாவில் பங்கேற்க உள்ளனர்.

-இவ்வாறு ஆஸ்கார் கமிட்டி தகவல் தெரிவித்துள்ளது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :