• கலை

அந்த மழைக்கால இரவொன்றில்.. !


- மைக்கேல் சுந்தரராஜ் து





மழை ஜோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. மாலை 6 மணிக்கே நன்றாக இருட்டிக் கொண்டிருந்தது. மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்தது. விரைவில் பெருமழை ஏற்படலாம். வீட்டில் தனியாக இருப்பதால் நான் சோர்வாக ஒரு குழம்பிய உணர்வோடு இருந்தேன். சரியான பசி வேறு!

எதிர்பாராதவிதமாக ஒரு பெரும் இடி முழக்கம் என் படுக்கையிலிருந்து என்னை உலுக்கித் தூக்கியது. போச்சு.. மீண்டும் சடசடவென மழைத்துளிகள் இறங்கத் தொடங்கின. நான் என் குழம்பிய உணர்வுகளிலிருந்து விடுபட, டிவி பார்ககலாம் என்றால், அதற்கும் வழியில்லை! கரண்ட் கட்! மொபைலிலும் சார்ஜ் இல்லை! வாழ்க்கையே இருண்டுவிட்டது போல் மனதில் சோகம் கவ்வியது!

மின்னல் கொடிகள் மேகங்களைப் பிளந்து கொண்டிருந்தன. ஆஹா, அதோ.. அங்கே என்ன? என் தோட்டத்தில் மழைத்துளிகளின் மத்தியில் ஒரு மனித உருவம்? நான் கண்டதை உறுதி செய்ய மழையினூடே உற்றுப் பார்த்தேன். அந்த நபரை நோக்கி, “யாரது?” என்று குரலை உயர்த்தினேன். ஆனால் பெரிய இடி என் கூச்சலையெல்லாம் விழுங்கிவிட்டது.

பயம் என்னை ஆட்கொண்டது. உண்மையில் இந்த வீட்டை நான் வாங்க இருந்தபோது இந்த வீட்டில் ஆவிகள் இருப்பதாகப் பலர் என்னை எச்சரித்தனர். மிகவும் சல்லிசான விலையில் கிடைத்ததால் என் மனைவியின் ஆட்சேபணைகளையும் புறந்தள்ளிவிட்டு இந்த வீட்டை வாங்கினேன்.

நான் இப்படி தனியாய் இருக்கும் நேரத்தைத்தான் இந்த ஆவிகள் தேர்ந்தெடுக்குமோ! நடுக்கத்துடன் இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்து சென்றூ படுக்கையில் போய் உட்கார்ந்து ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.! ’எந்த மூலையிலிருந்தாவது ஏதாவது ஒரு பேய் என் மீது பாயக்கூடும்’ என்று கிலி படர்ந்தது.

திடீரென்று கதவுகளைப் பற்றி யோசனை வந்தது. முன்பக்கக் கதவை மூடியது நன்றாக ஞாபகம் இருக்கிறது. பின்பக்கக் கதவு? அய்யோ.. நான் நினைத்தது சரிதான்! மூடவில்லை. கதவு திறந்து கிடந்தது. திடீரென்று எங்கிருந்தோ என் மனைவி உள்ளே அடியெடுத்து வைத்தாள். அப்பாடா என்றிருந்தது. “பயந்துவிட்டீர்களா?” என்று கேட்பதுபோல ஒரு பார்வையை வீசினாள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை ஆனால் அவளைப் பார்த்ததும் எனக்குப் பெருத்த நிம்மதி ஏற்பட்டது.

ஆனால், ’ஐயையோ.. மறந்தே போனேனே.. அவள் – அதாவது என் மனைவி சென்ற வருடம் இதே நாளில்தானே இறந்தாள்’ என்பது இப்போது என் நினைவுக்கு வந்தது.




Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

வித்தியாசமான திக் திக் ........................

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :