• சினிமா – சின்னத்திரை

காட்டைக் காப்பாற்றும் யானைகள்! ’காடன்’ பட விமர்சனம்!


- ராகவ் குமார்





கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து காட்டையும் நிலத்தையும் நீரையும் காப்பாற்றுங்கள் என்ற ஒன் லைனில் சினிமா வருவது இப்போதைய ட்ரெண்ட் ஆக உள்ளது. அதே வகையைச் சேர்ந்ததுதான் இப்போது ரிலீசாகியுள்ள ’’காடன்’’ திரைப்படமும்!

கொஞ்சம் வித்தியாசமாக, இந்த கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டத்தில் யானைகளும் சேர்ந்து கொண்டுள்ளது. அசாம் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு காடன் திரைகதை உருவாக்கபட்டு உள்ளது.

காட்டையும், அங்குள்ள யானைகளையும் பாதுகாக்கிறார் ஹீரோ ‘’காடன்’’. அங்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துடன் கைகோர்த்து, அக்காட்டில் பெரிய டவுன் ஷிப் கட்ட முயல்கிறார் அமைச்சர் ஒருவர். இதற்கு காட்டு யானைகள் பிரச்சனையாக இருப்பதால், யானைகளை தடுக்க யானை வழிப்பாதையில் பெரிய சுவர் ஒன்றை எழுப்புகிறார் அமைச்சர். இந்த சுவரை உடைக்க சட்டத்தின் உதவியை நாடுகிறார் ’காடன்’. இந்த சுவர் உடைபட்டதா? கார்ப்பரேட் செய்யும் பிரச்சனைகள் என்ன, யானைகளின் அழிவு ஏற்படுத்தும் இயற்கை பிரச்சனைகள் என்ன என்பவற்றை சொல்லும் வகையில் படம் விரிகிறது.

பல்லுயிர் சுழற்சியில் யானைகளின் பங்களிப்பு பற்றி புரிய வைத்த டைரக்டர் பிரபு சாலமனுக்கு ஒரு சபாஷ் போடலாம். யூகிக்க முடிந்த திரைக்கதை சற்றே அலுப்பு ஏற்படுத்தி இருந்தாலும், ஹீரோவாக அசத்தியிருக்கும் ராணாவின் நடிப்பு இதை மறக்க செய்கிறது. ஒரு காட்டுவாசிக்கு உரிய உடல்மொழி, வேகம், சமூக கோபம், யானைகளின் மீதான கருணை என வெவ்வேறு உணர்வுகளை அருமையாக பிரதிபலித்திருக்கிறார் ராணா. இறுதி காட்சியில் யானைகள் கட்டி தழுவும் போது யானைகளின் நண்பனை போன்று ஒரு உணர்வை வெளிபடுத்துவார் ராணா.

சபாஷ் பல்பார் தேவா. விஷ்ணு விஷால் துள்ளல் நடிப்பும், காதலும் கலந்து நடித்து உள்ளார் சீரியஸ் கதையில் விஷ்ணுவின் காமெடி ஒரு ஸ்பீட் பிரேக்கர். தான் வளர்த்த கும்கி யானை இறந்து போகும்போது கதறுவது நமக்கு தெரிந்த யானை இறந்தது போன்று உணர்வை ஏற்படுத்துகிறது.

இப்படத்தில் பலர் நடித்திருந்தாலும் நம்மை கவர்வது யானைகளின் நடிப்புதான். தன் வழிதடத்தை அடைக்கும் சுவரை முட்டி மோதி உடைக்க பார்ப்பது, ராணா மீது சந்தேகம் கொள்வது, சக யானை இறக்கும் போது கண்ணீர் விடுவது, சுவர் உடை பட்டு பாதை மீண்டும் உருவான பின்பு நன்றி உணர்வுடன் ராணாவை பார்ப்பது என யானைகள் பெரிய உடம்பில் பல்வேறு உடல் மொழிகளை காட்டி உள்ளன. இந்த பெரிய உருவத்தின் சிறிய உணர்வுகளை கேமராவில் அருமையாக பதிவு செய்திருக்கிறார் கேமராமேன் அசோக்.

"எழுபது வருசமா நீங்க பண்ணின நல்லது போதும், இனிமே நாங்க பாத்துக்கிறோம்.. "மழை பெய்யணும்னா யானைகள் இருக்கணும்" என்பது போன்ற ஷார்ப் வசனங்கள் படத்துக்கு பெரிய பலம் சேர்கின்றன. பாடல்களை விட பின்னணி இசையில் இமான் தெரிகிறார்.

மொத்தத்தில் சமூக உணர்வுடன் கூடிய, வழக்கமான மசாலா கதை!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :