• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

39. என்ன செய்தி?


- அமரர் கல்கி

பிரயோசனம் இல்லை!

மகாத்மா காந்தியின் விடுதலையினால் இந்திய தேசமே ஆனந்தத்தில் முழுகியிருக்கும் சமயத்தில் “அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை” என்று இங்கிலாந்தில் ஒரு குரல் எழுந்தது. இந்தியாவினிடம் அனுதாபமுள்ள குரல் தான் அது. “பண்டித ஜவாஹர்லால் மௌலானா ஆஸாத் முதலியவர்களையும் விடுதலை செய்யவேண்டும். இல்லாவிடில் மகாத்மாவின் விடுதலையினால் மட்டும் அரசியல் துறையில் ஒரு பிரயோசனமும் ஏற்படாது” என்று அந்த இங்கிலாந்து அனுதாபி தமது அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

யார் சொன்னது?

ஆனால் மகாத்மா விடுதலையினால் அரசியல் பிரயோசனம் உண்டு என்று நம்பியோ, எதிர்பார்த்தோ இந்திய சர்க்கார் அவரை விடுதலை செய்தார்களா? கிடையாது. இந்திய அதிகார வர்க்கத்தார் மெனக்கட்டுப் பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டனுப்பி, “மகாத்மா காந்தியின் விடுதலை தேக அசௌக்கியத்தைக் குறித்த விடுதலைதான்; அதில் அரசியல் நோக்கம் ஒன்றுமே கிடையாது” என்று வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரையில் “இதே விதமான அரசியல் பிரயோசனமற்ற விடுதலையை ஜவாஹர்லால் ஆஸாத் முதலியவர்களுக்கும் அளித்து விடுங்கள்” என்று அதிகார வர்க்கத்துக்குச் சொல்ல விரும்புகிறோம். அரசியல் நோக்கமே வேண்டாம். நியாயத்தையும் தர்மத்தையும் கருதி விடுதலை செய்தால் போதும். நமது அரும்பெரும் தலைவர்கள் சிறையிலிருந்து தேக சௌக்யத்துடன் வெளியில் வருவதையே பெரிய பிரயோசனமாக் கருத நாம் தயாராயிருக்கிறோம்.

அர்த்தமில்லா வித்தியாசம்

இருபது மாதத்துக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ்வாதி களுக்குள்ளே சிற்சிலரை ஆங்காங்கே சர்க்கார் விடுதலை செய்து வருகிறார்கள். வேறு சிலரை விடுதலை செய்யவில்லை. இவ்வித வித்தியாசம் பாராட்டுவது அர்த்தமில்லாத காரியம். ஸ்ரீஅவிநாசிலிங்கத்தை விடுதலை செய்வானேன். ஸ்ரீபக்தவத்சலத்தைச் சிறையிலே வைத்திருப்பானேன்? வேலூர் சேர்மன் ஸ்ரீசோமசுந்தரத்தை விடுதலை செய்வானேன், காஞ்சி சேர்மன் டாக்டர் சீனிவாசனை விடாமல் வைத்திருப்பானேன்? ஸ்ரீஜகந்நாத தாஸை விடுதலை செய்துவிட்டு ஸ்ரீயக்ஞேசுவர சர்மாவை அடைத்து வைத்திருப்பது என்ன பொருத்தம்?

கொடுமை செய்யாதீர்

மதுரை ஸ்ரீ ஏ.வைத்திநாதய்யர் ஹரிஜன சங்கத்தின் தலைவர், அரசியல் தொண்டைக்காட்டிலும் நிர்மாணத் தொண்டில் அதிகமாக ஈடுபட்டவர் என்பதைத் தமிழ்நாடே நன்கறியும், அவரைச் சிறை செய்திருக்கவே கூடாது. இன்னமும் அவரை விடுதலை செய்யாதிருப்பது என்ன நியாயத்தைச் சேர்ந்தது என்பது ஆண்டவனுக்கும் ஆண்டவனைவிடப் பெரிய அதிகார வர்க்கத்துக் குந்தான் தெரியும். ஸ்ரீ எம்.பக்தவத்ஸலம் முதலிய தமிழ்நாட்டுக் காங்கிரஸ் வாதிகள் சிலர் இன்னமும் மத்திய மாகாணச் சுடுகாட்டுச் சிறை ஒன்றிலே வைக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். இந்தக் கடும் கோடை காலத்தில் அவர்களை அவ்விதக் கொடிய வெயில் பிரதேசத்தில் வைத்து வதைப்பது மகா அநீதி. பெருங்கொடுமை. அவர்களை விடுதலை செய்யாவிட்டால் தமிழ்நாட்டி லுள்ள சிறை ஒன்றுக்காவது உடனே மாற்ற வேண்டும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :