• GLITTERS | பளபள

அமெரிக்க டிவி-யில் இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் அதிர்ச்சிப் பேட்டி!


சுமுகா நாராயணன்

பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம் டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய நேர்காணலில் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்த கையோடு தன் மனைவி மேகன் மார்க்கல் மற்றும் மகனுடன் அமெரிக்காவில் குடியேறி விட்டார்.

இதையடுத்து கடந்த மாதம், ஹாரியும் அவரது மனைவியும் இங்கிலாந்து அரச குடும்ப உறுப்பினர்களுக்கான பொறுப்புகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், அமெரிக்க டிவி-க்கு ஹாரியும் அவர் மனைவி மேகனும் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை மனம்விட்டுப் பேசினர். அதிலிருந்து சில..

’’அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலக என்ன காரணம்?’’ ஓப்ஃரா கேட்டார்.

‘’அது மிகவும் அவசியமாகப் பட்டது, மிகவும் யோசித்துதான் இந்த முடிவை எடுத்தோம்" என்றார் ஹாரி.

’’பிரிட்டிஷ் மகாராணியுடன் மேகனுக்கு முதல் சந்திப்பு அனுபவம் எப்படி இருந்தது?”

"முதல்முறையாக மகாராணியை நேரில் பார்த்தபோது அது ஒரு பெரிய சம்பிரதாயமாக எனக்கு தோன்றவில்லை," என்ற மேகன் தொடர்ந்தார்.. ‘’ஆனால், அவரை எப்படி மரியாதை செய்வது என்று ஹாரி சொல்லித் தந்தார்.

உண்மையில் வெளிப்புற சம்பிரதாயத்தில்தான் அப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்தேன். அரண்மனைக்கு உள்ளே குடும்ப உறுப்பினர்களுக்குள் தினப்படி சம்பிரதாயங்கள் எதுவும் இருக்காது என்றே நினைத்தேன். ஆனால், அப்ப்டியில்லை என்பதை உணர்ந்தேன். முதன்முதலில் மகாராணீயை சந்தித்தபோது முழங்கால் மண்டியிட்டு நானும் ஹாரியும் வணங்கினோம். அரண்மனைக்குள் கடைபிடிக்க வேண்டிய பல சம்பிரதாயங்கள் உண்டு. அவை எனக்கு கடினமாகப் பட்டன’’ என்ற மேகன் மார்கல் தொடர்ந்தார்.

’’ஆனால் மகாராணி எனக்கு மிகவும் அற்புதமானவராக இருந்தார். அவருடன் இருப்பதை மிகவிம் நேசித்தேன். 2018-ல் அவரை முதலாவதாக பார்த்தபோது எனக்கு தனது பவள காதணிகளையும் நெக்லஸையும் பரிசாக வழங்கினார். எப்போதுமே அவர் உள்ளார்ந்த அன்பையும் வரவேற்பையும் எனக்கு வழங்கினார்’’ என்கிறார்.

’’அப்புறம் ஏன் அரச குடும்பத்திலிருந்து விலக முடிவு?’’

"அதற்குக் காரணம் எனக்குத் தனிமை உணர்வு மேலோங்கியது..அரச குடும்ப உறுப்பினர்கள், தாம் நினைத்தபடி சட்டென்று வெளியில் செல்ல முடியாது. அரண்மனைக்குள்ளும் பல கட்டுப்பாடுகள்! அதனால், தனிமையில் இருப்பது போன்ற உணர்வில் தவித்தேன்’’ என்ற மேகன்,

’’எங்கள் திருமணம் முடிந்தவுடன், அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர், நான் சிறிது காலம் வெளியில் எங்கும் செல்லாமல் இருக்குமாறு அறிவுறுத்தினார். அதனால், மாதக்கணக்கில் அரண்மனைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தேன். அதனால் மன அழுத்தம் அதிகரித்தது’’ என்றார்.

‘’இந்த காரணங்களால்தான் அரச வாழ்க்கையைத் துறக்க விரும்பினார்களா?’’ ஓப்ஃரா கேட்க, ஹாரி பதிலளித்தார்.

"இல்லை.. அப்படி ஒரு முடிவெடுக்க மற்றொரு முக்கியமான காரணம் – எங்கள் மகன் ஆர்ச்சிக்கு பட்டத்து உரிமை கிடைக்கச் செய்யாததுதான்! ஆர்ச்சி எங்கள் மகனாக பிறந்தவுடன் அவரை இளவசராக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அந்த விஷயத்தை கிரகித்துக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. காரணம் அது பட்டம் பற்றியது மட்டுமல்ல. என் மகனின் பாதுகாப்பு சம்பந்தப் பட்டதும்கூட என்பதால்தான்! அவருக்கு அரசரீதியான அதிகாரபூர்வ பாதுகாப்பு கிடைக்காது! என் குடும்பத்தின் முதல் வாரிசு, மற்ற பேரப்பிள்ளைகளைப் போல பட்டத்துடன் அழைக்கப்படாதது வருத்தமாக இருந்தது. என் மனைவி மேகன் கர்ப்பமாக இருந்தபோதே- பிறக்கப் போகும் எனது பிள்ளைகளுக்கு இளவரசர் பட்டமோ இளவரசி பட்டமோ வழங்கப்படாமல் இருப்பதற்கேற்ப விதிமுறைகள் மாற்றப்பட்டன. இவை சட்டரீதியானவை அல்ல.அப்படி செய்ய அவர்களூக்கு உரிமை கிடையாது. ஆனாலும் அதுதான் நடந்தது. அடிப்படை உரிமையையே தட்டிப் பறிப்பது என்ன நியாயம்?’’ ஹாரி.

’’ஆர்ச்சிக்கு ஏன் இளவசர் பட்டம் கிடைக்கவில்லை? அது இன ரீதியிலானதா, நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?’’ என ஓப்ரா கேட்டபோது,மேகன் பதிலளித்தார்.

‘’இதற்கு உண்மையான பதிலை நான் தெரிவிக்கிறேன். நான் கர்ப்பமாக இருந்தபோதே என் மகனுக்கு இளவரசர் பட்டமோ அரசகுடும்ப பாதுகாப்போ கிடைக்காது என்று உணரத் துவங்கினேன். என் மகன் பிறந்ததும் அவனது கருப்பு நிறம் பற்றிய கவலைகளும் பேச்சுகளும் எழுந்தன," என்றார் மேகன்.

’’மொத்தத்தில் தங்க கூண்டுக்குள் அடைபடுக் கிடப்பதைவிட சுதந்திரமாக வானில் சுற்றிப் பறப்பதையே நானும் என் மனைவியும் விரும்பி, பிரிட்டிஷ் அரச்ச குடும்பத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தோம்’’ என்கிறார் ஹாரி.

(நன்றி: பிபிசி).
Comments

G.Ravindran says :

Well, the interview would certainly have sent shockwaves through the Royal household. But, more to the point, the British monarchy though merely titular and ceremonial is an absurd anachronism in these times...

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :