• TRENDING | பர பர

சைக்கிள் ஓட்ட ஹெல்மட் போட்ட சிறுவன்! ஆச்சரியப்பட்ட கமிஷனர்!





சைக்கிளில் பயணம் செய்ய ஹெல்மட் போட்ட 12 வயது சிறுவனை நேரில் அழைத்து போலீஸ் கமிஷனர் பாராட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருச்சியில் வரப்போகும் தேர்தல் பணிக்காக, பொதுமக்கள், மத்திய காவல் படையினர் மற்றும் மாநகர காவலர்கள் என அனைவரும் எந்தவித அச்சமுமின்றி தங்கள் கடமையை ஆற்ற வேண்டும் என்ற குறிக்கோளை வலியுறுத்தி புத்தூர் சாலையில் கொடி அணிவகுப்பு நடந்தது.

அச்சமயம், அந்தப் பகுதி வழியாக சிறுவன் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிள் ஓட்டி வருவதைக் கண்ட காவல் அதிகாரி ஒருவர், அவனை நிறுத்தி எதற்கு இந்த தலைக்கவசம் அணிந்துள்ளாய் என்று கேட்டுள்ளார்.

அதற்கு, தலைக்கவசம் அணிவது நமக்குப் பாதுகாப்பு, விபத்து நடக்காது என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். அதனால் நான் எப்போது சைக்கிள் ஒட்டினாலும், தலைக்கவசம் அணிந்துதான் செல்வேன் என்று பிள்ளை மொழியில் கூறியுள்ளான் லோகநாதன் என்ற அந்த சிறுவன்.

மேலும், நான் மல்லிகை புரத்தைச் சேர்ந்தவன் என்றும், நான் 6ஆம் வகுப்பு படித்து வருவதாகவும், தனது தாயார் நடத்தும் பெட்டிக்கடையில், பொருட்கள் வாங்கச் செல்வதாகவும் கூறியுள்ளான். இதுபற்றி அறிந்துகொண்ட போலீஸ் கமிஷனர், லோகநாதன் என்ற சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுவனுக்கு இன்று பிறந்தநாள் என்பதும் தெரியவந்த நிலையில், கமிஷனர் அலுவலகத்திலேயே, சிறுவனுக்கு பிறந்தநாள் கேக் வெட்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், அந்த சிறுவனின் செயலை பாராட்டி அவருக்குப் புதிதாகச் சைக்கிளையும், தலைக்கவசத்தையும் பரிசாக அளித்ததோடு, அச்சிறுவனுக்கு ‘நற்கருணை வீரன்’ என்ற சான்றிதழையும் போலீஸ கமிஷனர் வழங்கி பாராட்டியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :