• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

38. செல்லம்மாளின் கணவன்!


- அமரர் கல்கி

செல்லம்மாள் அன்றைக்கே கிளம்பி மறுநாள் தஞ்சாவூர் போய்ச் சேர்ந்தாள். சந்து பொந்துகளுக்குப் பேர்போன தஞ்சாவூரில், கடிதத்தில் கொடுத்திருந்த விலாசத்தைக் கண்டுபிடிப்பது ரொம்பவும் கஷ்டமாயிருந்தது. கடைசியில் எப்படியோ கண்டுபிடித்தாள். கிழ வேலைக்காரி ஒருத்தி செல்லம்மாளை அழைத்துக்கொண்டு போய் மச்சு அறையில் விட்டாள். அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலில் அனாதை ஸ்திரீயான அம்முலு படுத்திருந்தாள். உண்மையிலேயே அவள் சாகக் கிடக்கிறாள் என்பது பார்த்தவுடனே தெரிந்து போயிற்று. அந்த நிலைமையில் கூட அவள் முகத்தில் ஒரு களை இருந்தது. அதைக் காட்டிலும் அந்த முகத்தில் குடிகொண்டிருந்த சோகம் செல்லம்மாளின் உள்ளத்தின் அடிவாரத்தில் மறைந்திருந்த இரக்க உணர்ச்சியை எழுப்பிற்று. செல்லம்மாள் தான் சாபங்கொடுக்க வேண்டுமென்று வந்ததையெல்லாம் மறந்து அவள் சொல்வதைக் கேட்கச் சித்தமானாள்.

செல்லம்மாளைக் கண்டதும் அம்முலு படுத்தபடியே இரண்டு கையையும் கூப்பிக் கும்பிட்டாள். அவளைத் தன் அருகில் உட்காரச் சொன்னாள். மிகவும் ஈரமான குரலில், குழந்தைப் பிராயத்தில் சிறிய தாயாரின் கொடுமைகளுக்கு ஆளானதிலிருந்து தொடங்கி, தன்னுடைய துயரக் கதையை மளமளவென்று சொல்லி முடித்தாள். முடிப்பதற்குள் பல தடவை செல்லம்மாளின் கண்களில் ஜலம் துளிர்த்துவிட்டது.

கடைசியாக, உலக வாழ்க்கையின் கஷ்டங்களைப் பொறுக்க முடியாமல் அம்முலு ரயில் தண்டவாளத்தில் விழுந்து பிராணனை விடுவதென்று தீர்மானித்தாள். அவ்விதம் தண்டவாளத்தில் படுத்துக் கிடந்தபோதுதான் அனந்தராமன் வந்து அவளைத் தொட்டு எழுப்பினார். அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லி அழைத்துப் போனார். அவளுடைய நிர்க்கதியான நிலைமையைத் தெரிந்துகொண்டு தஞ்சாவூருக்கு அழைத்துப் போய்த் தனி வீட்டில் குடிவைத்தார். வாழ்நாள் முழுவதும் அன்பான வார்த்தையையே கேட்டறியாத அம்முலு, அனந்தராமனிடம் தன்னுடைய இருதயத்தை ஒப்புவித்தாள். அனந்தராமன் அடிக்கடி செல்லம்மாளைப் பற்றியும் அவளுடைய உயர்ந்த குணத்தைப் பற்றியும் அம்முலுவிடம் சொல்வதுண்டு. அப்போதெல்லாம் அம்முலுவின் மனம் படாத வேதனைப்படும் - அப்படிப்பட்ட உத்தமிக்குத் துரோகம் செய்கிறோமேயென்று. இப்படியே சில காலம் சென்றது. ஒருநாள் அனந்தராமன் செல்லம்மாளின் அத்தானை ரயிலில் சந்தித்தார். அவனுடன் பேசியதிலிருந்து அத்தானுக்குத் தன்னுடைய இரகசியம் தெரியு மென்று அறிந்து கொண்டார். அவன் போய்ச் செல்லம்மாளிடம் சொல்லி விட்டால் என்ன செய்கிறதென்று அனந்தராமன் பீதியடைந்தார். அம்முலுவிடம் “நானே போய் செல்லம்மாளிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன். அப்புறம் நடந்தது நடக்கட்டும்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

கொஞ்ச நாளைக்கெல்லாம் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ஊருக்குப் போய்ச் சேரும்போதே 104 டிகிரி சுரத்துடன் போனதாகவும் ‘காலாஹ ஸார்’ என்னும் விஷசுரம் தன்னைப் பிடித்திருப்பதாகவும், பிழைப்பது துர்லபம் என்றும் தெரிவித்திருந்தார். அதோடு செல்லம்மாளிடம் உண்மையைச் சொல்லத் தனக்குத் தைரியம் வரவில்லை என்றும், அவளுடைய மனதைப் புண்படுத்த விரும்பவில்லையென்றும், தனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அம்முலுவே எல்லாவற்றையும் செல்லம்மாளிடம் சொல்லிவிட வேண்டு மென்றும் அவள் அம்முவுக்கு உதவி செய்து காப்பாற்றுவாள் என்றும் எழுதி யிருந்தார்.

அதற்குப் பிறகு அனந்தராமனிடமிருந்து கடிதம் ஒன்றும் வரவில்லை. துடியாய்த் துடித்துக்கொண்டிருந்த அம்முலு ஒரு ஆளை அனுப்பி விசாரித்துக்கொண்டு வரச் சொன்னாள். ஆள் வந்து, அனந்தராமன் இம்மண்ணு லகை நீத்த விவரத்தைக் கூறினாள்.

“அக்கா, அந்த நிமிஷத்திலேயே நான் பிராணனை விட்டிருக்க வேண்டியது. ஆனால் அதோ தொட்டிலில் இருக்கிறானே, அவனுக்காக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். அவன் அப்போது என் வயிற்றில் இருந்தான்; ஆறு மாதம்” என்றாள் அம்முலு.

அம்முலுவின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது செல்லம்மாளின் கவனம் அடிக்கடி அதே அறையில் ஒரு மூலையில் தரையில் வைத்திருந்த தொட்டிலின் பக்கம் சென்று கொண்டிருந்தது. அந்தத் தொட்டிலில் ஒரு குழந்தை கிடந்தது. குழந்தை தூங்கிக்கொண்டிருந்தது. அம்முலுவின் கதை முடியும் சமயத்தில் குழந்தை தன் கண்களை மலர விழித்து அப்புறமும் இப்புறமும் பார்த்து அழத் தொடங்கியது. செல்லம்மாள் ஒரு பாய்ச்சல் பாய்ந்து தொட்டிலின் பக்கம் சென்றாள். குழந்தையின் முகம் அப்படியே அப்பாவை உரித்து வைத்ததுபோல் இருந்ததைக் கண்டாள்.

- ‘என் தெய்வம்’ சிறுகதையிலிருந்து…

‘கல்கி களஞ்சியம்’ வானதி வெளியீடு

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :