• GLITTERS | பளபள

அரசியல் புதிர்களுக்கு தேர்தலில் விடை தருவோம்!


ச.பாலசுப்ரமணியன், பொதுத்துறை வங்கி ஊழியர் (ஓய்வு)

தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது! அனைத்து கட்சிகளும் கலர்கலராக வாக்குறுதிகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டன! 10 ஆயிரம்வாலா பட்டாசு மாதிரி, மானாவாரியாக சாத்தியமில்லா வாக்குறுதிகளும் அறிவிப்புகளும் வரத்தொடங்கி விட்டன. நம் நாட்டில், இந்த அரசியல் படுத்தும் பாடு மிக அதிகமாகவே உள்ளது. அரசியல்வாதிகள், தங்களை முடிசூடா மன்னர்களாகவே எண்ணிக்கொண்டு, வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், இலவசங்களை வாரி வழங்குவதும் நாம் இன்றும் முடியாட்சிக் காலத்தில்தான் இருக்கிறோமென்று எண்ண வைத்துவிடுகிறது. அரசு கஜானா என்பது இவர்களது பரம்பரைச் சொத்தா?!

மக்கள் நலனுக்கான திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அரசு நிதியை,ஆளும் கட்சி தம் விருப்பம்போல் செலவழிக்கலாம்; அதனை யாரும் கேள்விக் கேட்க முடியாது என்ற எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதேகதிதான்! அதில் மட்டும் கட்சிகளுக்குள் பூரண ஒற்றுமை! உண்மையில் மக்கள் நலனுக்காக சிந்தித்து செயல்படும் அரசு ஏதேனும் உண்டா என்பது கேள்விக்குறி!

ஆரோக்கிய அரசியல், ஆட்சி பற்றி எந்தக் கட்சியும் கவலைப்படுவதில்லை.

நாடு அல்லது மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்துவது, நிர்வாகத்தினைச் சீர்படுத்துவது, நல்ல வளர்ச்சிக்கான தொழிற்கொள்கையை முன்னிறுத்துவது, சுகாதாரத்திற்கான கட்டமைப்பை பலப்படுத்துவது, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாகப் பராமரிப்பது, பாரபட்சமற்ற நீதி நிர்வாகம், லஞ்ச, லாவண்யமற்ற சிறப்பான ஆட்சியைத் தருவது போன்றவை குறித்து எந்த அரசியல் கட்சிகளும் கவலைப்படுவதில்லை.

மக்கள் எல்லோரும் தங்கள் தயவில்தான் இருக்க வேண்டும் என்ற இவர்களது அதிகார மமதை; அதன் வெளிப்பாடாக, அள்ளி வீசப்படும் பொய் வாக்குறுதிகள்; தேர்தலில் தோற்று விட்டால் நடத்தப்படும் அரசியல் டிராமாக்கள் – இதையெல்லாம் சகித்துகொண்டு பொதுமக்களாகிய நாம் மீண்டும், மீண்டும் அவர்களது வார்த்தை ஜாலங்களில் மயங்குகிறோமே.. அதுதான் அரசியல்வாதிகளின் பலம்!

ஜனநாயக நாட்டில், அரசியல்வாதிகள் வைத்ததுதான் சட்டமா? பாகுபாடு இல்லாமல், அனைத்து கட்சிகளின் பொதுவான செயல்பாடுகள் மற்றும் தகுதிகள் பற்றி நமக்கு விடையே கிடைக்காத சில புதிர்கள்:

1. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகளில் நாட்டில் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியினை இதுவரை உறுதி செய்து தரப்படவில்லை! ஆனால், அடிப்படைக் கல்வி தகுதி கூட இல்லாமல் தேர்தலில் நின்று ஜெயித்து அரசாள அனுமதியளிப்பது சரியா?

2. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும், தங்களது ஜாதிகள் இன்னும் முன்னேறவில்லை எனக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் – தேர்தல் சமயத்தில் அதே ஜாதியை முன்னிறுத்தி அரசியல் செய்ய இனியும் அனுமதிப்பது சரியா?

3. குற்றப்பின்னணி உடையவர்கள், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, தேர்தலில் நிற்க தடை செய்யப்படுமா?

4. அரசு கஜானாவிலிருந்து தகுதியற்றவர்களுக்கு இவர்களால் வழங்கப்படும் நிதி உதவிகள் தடை செய்யப்படுமா?

5. அரசு அமைக்கும் அனைத்துக் கட்சிகளும், அரசுப் பணிகள், கட்டிடங்கள் போன்றவற்றிற்கு அந்தந்த கட்சித் தலைவர்கள் பெயர்களைச் சூட்டுவது, அரசு செலவில் அவர்களுக்கு சிலைகள், நினைவிடங்கள் அமைப்பது, அதுவும் கடற்கரை போன்ற பொது இடங்களில் நிலம் எடுத்து அமைப்பது, போன்றவை எந்த விதத்தில் நியாயம்? அதிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களக்கும் அவ்வாறு செய்வது, எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது?

6. பொது இடங்களை மக்கள் பயன்படுத்தமுடியாமல் கட்சி பெயரால் ஆக்ரமிப்பதற்கு தடை விதிக்கலாகாதா?

7. ஜாதி, மத துவேஷங்களைத் தூண்டும் அரசியல்வாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட மாட்டார்களா?

8. அரசு நிதி உதவி, அரசுப்பணிகளை ஆளுங்கட்சி எவருக்கு வேண்டுமானாலும் வழங்கக்கூடிய அதிகாரங்கள் வரைமுறைப்படுத்த முடியாதா?

9. தேவையற்ற இலவசங்களை, தகுதியற்றவர்க்கும் வாரி வழங்கி நிதி சுமையைக் கூட்டும் அரசு திட்டங்கள் கேள்விமுறைகளுக்கு அப்பாற்பட்டவையா?

10. சில அரசியல்வாதிகள் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் வெளிப்படையாக தெரிய வந்தாலும், அவற்றின் மீதான நடவடிக்கைகள் ஏன் தாமதப்படுவதும், அந்த ஊழல்வாதிகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுவதும் ஏன்?

இந்த மாதிரியான பல கேள்விகள் சராசரி பொதுமக்கள் மனதில் எழுகின்றன. இதோ.. இன்னும் சில நாட்களில் தேர்தல் திருவிழா வந்து விடும். அன்று ஓட்டு போடுமுன் சற்றே சிந்தித்து நாம் செயல்பட்டால், ஓரளவாவது நல்லவர்களைத் தேடித் தேர்ந்தெடுக்க முடியும்! அதுவே மேற்கண்ட கேள்விகளுக்கான விடை தேடலின் முதல் படியாக அமையும்.
Comments

Apsara begam n says :

ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஓட்டினை வெறும் ₹200விற்பனை செய்யாமல் கொரானா தொற்று காலத்தில் நாம் எதிர்கொண்ட இன்னல்களை நினைத்து பார்த்தாலே போதும் சரியான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கலாம்.

Kalyanaraman n says :

Excellent write-up Let us think and vote

Gowribai says :

Absolutely correct thinking. Excellent. Awareness created should reach people. Let`s wait and see.

Sukhavana Vidhya V says :

Nice. Thought provoking Right Questions to people at large, at the Right time. Reason for deteriorating day by day is simple. "Money minded ; Not Service minded - anywhere and everywhere, including 99% General Public" -. V. Sukhavana Vidhya

Yesdus says :

தெற்கில் யார் ஓட்டுக்கு அதிக ரேட் தந்து, தன் ஜாதி-இனத்தவரோ அவரையே 70-80% கிராம மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்! அதிமுக மட்டுமே அதை செய்ய முடியும்! மத்தியில் லஞ்சம் வாங்காத பிஜேபியையே இதர மாநில மக்கள் தேர்வு செய்வார்கள்!

MAS says :

மிக அருமையான பதிவு. We shall teach a lesson to those fascist people in this State elections and bring new governance that will take care if people

R Bala says :

ஏற்கனவே ஒவ்வொரு வரின் தலையில் அரசு ஏற்றியுள்ளகடன் சுமை கொரோனா காலத்தில் நாமே ஏற்றிக் கொண்ட சொந்தக் கடன் சுமை இனி கைச்செலவுக்குன்னு கொடுக்கிறது வாங்கி ட்டு ஓட்டுப் போட்டுட்டு கோடியக்கரை புதைகுழிகள்.அங்கங்கே மொத்தமாகப் தோண்டப்படும் உள்ளே ஒரேயடியாகப்.புதையுண்டு வேண்டியதுதான் . என்ன பரவாயில்லை யா ?

G.Ravindran says :

Unfortunately democracy in India is still a `work in progress`. Surely we will get there but it will take time: 10, 20 or30 years? Your guess is as good as mine!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :