• GLITTERS | பளபள

வருமான வரிக் கணக்கு முகமற்ற மதிப்பீடு!


ஜி.எஸ்.எஸ்.





தற்போது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதில் ‘முகமற்ற மதிப்பீடு’ (Faceless Assessment) என்ற புதிய நடைமுறை ஒன்றை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. அதையடுத்து தற்சமயம் வரி செலுத்துவோர் மற்றும் ஆடிட்டர்களுக்கிடையே இந்த விஷயம் தான் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதென்ன முகமற்ற மதிப்பீடு முறை? விரிவாகப் பார்ப்போம்.

வருமான வரி செலுத்துபவர்களுக்கான சாசனம் ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார். இதன்படி இனி வரி செலுத்துவோருக்கும் அவரது வருமான வரிக் கணக்கை மதிப்பிடும் அதிகாரிக்கும் எந்த தொடர்பும் இருக்காது.

இதற்கு முன்னால் இருந்த நடைமுறைப்படி வருமான வரி தாக்கல் செய்பவரை வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வரவழைத்து அவர்களது கணக்கை ஆய்வு செய்து வரி மதிப்பீடு செய்து வந்தார்கள். ஆனால் இனிமேல் இதெல்லாம் மின்னணு முறையில் நடக்கும். அதனால் யாருடைய கணக்கை எந்த வருமான வரித்துறை அதிகாரி ஆய்வு செய்கிறார் என்பதே தெரியாது. அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நேரில் வந்து தாக்கல் செய்யும்போது, சில சமயம் வருமானவரி அதிகாரிகளுக்கும் வரி தாக்கல் செய்யும் நபர் அல்லது நிறுவனத்துக்குமிடையே ஒருவித புரிதல் இருக்கும். இதன் காரணமாக சில லாபங்களுக்காக வரியை குறைத்து மதிப்பிட நேரிடலாம். இனி அப்படி செய்ய வாய்ப்பில்லை. நேர்மையான முறையில் மட்டுமே வரி கணக்கிடப்பட முடியும்.

நம் நாட்டு வரிகளில் முக்கியமானது வருமான வரி. நம் நாட்டின் வளர்ச்சியில் இந்த வரி முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். நாடுமுழுவதும் வருமான வரியை வசூலிக்கும் பொறுப்பு என்பது Central board of direct taxes எனப்படும் மத்திய வாரியத்தின் வசம் உள்ளது. பின்னர் இந்த அமைப்பு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நேரடி வரிகளுக்கு ஒரு வாரியமும் மறைமுக வரிகளுக்கு மற்றொரு வாரியமும் உருவாக்கப்பட்டது.

வரிகளில் நேரடி வரி, மறைமுக வரி என்று இரண்டு பிரிவுகள் உண்டு. வருமான வரி என்பது நேரடி வரி. ஏனென்றால் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை அரசுக்குச் செலுத்த வேண்டும். மறைமுக வரி என்பது - நாம் ஒரு சோப்பு அல்லது மருந்து வாங்கும்போது அதற்கான வரியையும் சேர்த்துத்தான் செலுத்துகிறோம். இதை மறைமுக வரி என்பார்கள்.

வருமான வரித்துறையில் பலவித புதிய வகை தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஆகிவிட்டன. செயற்கை நுண்ணறிவு, கணினிமயமாக்குதல், டேட்டா அனலிட்டிக்ஸ் ஆகியவை இந்த புதிய தொழில்நுட்பங்களில் சில.

இந்த நிலையில் வருமான வரித்துறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக அறிமுகமாகியுள்ள திட்டம்தான் முகமற்ற மதிப்பீடு அதாவது ஃபேஸ்லெஸ் அஸெஸ்மெண்ட்.

அப்படியானால் நம்முடைய வருமான வரிக் கணக்கு யாருக்குச் செல்கிறது என்பதை யார் தீர்மானிப்பார்கள்? எந்த தனிநபரும் தீர்மானிப்பதில்லை. தானியங்கி கம்ப்யூட்டர் தொடர்பற்ற முறையில் (random) இவற்றை நாடுமுழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு பிரித்து வழங்குகிறது.

இதன்படி ஒரு வருமான வரி ரிட்டர்னை சரிபார்க்க மூன்று வரித்துறை அதிகாரிகள் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் நம் நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருக்கலாம். ஒருவர் யார் என்பதே மற்றவருக்கு தெரியாது. முதலில் ஒருவருக்கு உங்களது வருமான வரி ரிட்டனைக் கணினி அனுப்பும். அதைப் பார்க்கும் அந்த அதிகாரி சில கேள்விகளை எழுப்பக் கூடும்.

பின்னர் அது இன்னொரு அதிகாரிக்கு அனுப்பப்படும்போது அவர் அந்த முதல் அதிகாரியின் கேள்விகளை மதிப்பீடு செய்வார். கூடவே தாக்கல் செய்துள்ள வருமான வரியையும் மதிப்பீடு செய்வார். மூன்றாவதாக இருக்கும் அதிகாரி முதலில் செய்த இருவரின் பணிகள் சரிதானா என்பதை மறு சரிபார்ப்பு செய்வார்.

அதற்குப் பிறகு மதிப்பீடு அனுமதிக்கப்படும் அல்லது விளக்கம் கேட்கப்படும். இந்த மூன்று அதிகாரிகளுக்குமிடையே தகவல் தொடர்பு இருக்கும். ஆனால் யாரிடம் தொடர்பு கொள்கிறோம் என்பது அவர்களில் யாருக்கும் தெரியாது. கணினி மூலமாக மட்டுமே இந்தத் தகவல் பரிமாற்றம் நடக்கும்.

இந்த திட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மீது வரி விதிக்க முடியாது. தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்ப முடியாது. உயர் அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும். தேசிய அல்லது மண்டல மதிப்பீட்டு மையம் மூலமாகத்தான் அதை அனுப்ப முடியும்.

தவிர வரி மதிப்பீட்டை மூன்று அதிகாரிகள் செய்வதால் ஒரு அதிகாரி தவறு செய்தாலும் அதை மற்றொரு அதிகாரி கண்டுபிடித்து விடுவார். இதன்மூலம் முறைகேடுகள் நடைபெறுவது தவிர்க்கப்படும். தவிர இந்த நடைமுறையில் வரி செலுத்துபவரின் எல்லாத் தகவல்களும் சேகரிக்கப்படுவதால் அவரால் வரி ஏய்ப்பு செய்ய முடியாது.

இந்த முகமில்லா மதிப்பீட்டுக்கு என்ன அவசியம்? கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் ஏதோ ஒரு மட்டத்தில் ஊழல் நிலவுகிறது என்பதுதான் உண்மை. அந்த வகையில் வருமான வரித்துறையும் விதிவிலக்கல்ல. அங்கும் `மேல் வருமானம்` பார்க்கும் நபர்கள் உண்டு. இதைக் களைய முகமில்லா மதிப்பீட்டு முறை உதவும்.

இந்த புதிய நடைமுறை குறித்து சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. ’’என் வருமான வரியை மதிப்பிடும் அதிகாரி யார் என்பதே எனக்குத் தெரியாதபோது நான் சமர்ப்பிக்கும் வருமான வரி ரிட்டன் தொடர்பான சில விளக்கங்களை நான் யாரிடம் அளிக்க முடியும்? தவிர உள்ளூர் நிலவரம் தெரிந்தவர்களால்தானே சரியான முறையில் வருமான வரியை மதிப்பிட முடியும்? சில சமயம் வருமானத்தையும் தாண்டி இந்த சூழல்களையும் கணக்கெடுத்துக் கொள்வார்களே!’’ என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கு எழுந்துள்ளது.

எந்தவொரு புது விஷயத்தையும் அமல்படுத்தும்போது ஆரம்பகால சவால்கள் இருக்கும்தான். நம் நாட்டில் வியாபார பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், மொழி என்று மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். வரிக்கணக்கு போன்றவற்றை நேரடியாகவோ தொலைபேசியிலோ விளக்குவது வேறு. அதை ஈமெயில் வாயிலாக சொல்லிப் புரியவைப்பது என்பது தொடக்கத்தில் சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். இதன் காரணமாக தொடக்க காலத்தில் அதிக அளவில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புகள் இருக்கும். ஆனால், அந்த மேல்முறையீடும் கூட முகமற்ற மதிப்பீடாகத்தான் இருக்கும். தொலைநோக்குப் பார்வையில் இது மனிதர்களுக்கு மிகுந்த பயனளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஆக ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது முகமற்ற மதிப்பீடு எனப்படும் இந்த நடைமுறை மிகவும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருகிறது ஊழல் குற்றங்கள் நடைபெறுவதை தவிர்க்கிறது. அந்த விதத்தில் இது வரவேற்க வேண்டிய ஒரு திட்டமாகவே தோன்றுகிறது.

Comments

கே. ஆர். எஸ். sampath says :

மடியில் கனம் இல்லாதவரை பயம் இல்லை. நேர்மையாக வரி செலுத்துவோர் நிம்மதியாக தூங்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :