• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

37. ஆண்டவனைப் பிரார்த்தியுங்கள்!


அமரர் கல்கி





இந்தத் தென்னாட்டில் வழக்கமான பருவ மழைகள் பெய்து ஆறு ஆண்டு களுக்கு மேலாயின என்பது நேயர்களுக்கு நினைவிருக்கும்.

ஸ்ரீ ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல் மந்திரியாயிருந்த காலத்தில் மழை பொய்த்திருந்தபடியால் ஸ்ரீரெட்டியார் அவர்கள் “மக்களின் ஒழுக்கம் குன்றிவிட்டது. அதனால் மழை பெய்யவில்லை” என்பது பல பொதுக் கூட்டங்களில் எடுத்துக் கூறினார்.

காரணத்தை மட்டும் ஸ்ரீஓமந்தூர் ரெட்டியார் கூறினாரே தவிர, பரிகாரம் என்ன என்பதைத் தெளிவாக அவர் சொல்லவில்லை.

ராஜாஜி புது டில்லியில் கடைசியாக விடைபெற்றுக்கொண்டு சென்னைக்குத் திரும்பி வந்து விமான நிலையத்தில் இறங்கியவுடனேயே தமிழ்நாட்டில் தொடர்ந்து பல வருஷங்களாக மழை இல்லாமை பற்றித் தமது கவலையை வெளியிட்டார்.

சென்ற வருஷத்தில் முதன் மந்திரி பொறுப்பை ஒப்புக்கொண்டதிலிருந்து, “மற்ற காரியங்களையெல்லாம் மனிதனுடைய புத்தியைக் கொண்டு சாதிக்க லாம். ஆனால் மழை பொழியும்படி மனிதனால் செய்ய முடியாது. அதற்குக் கடவுளைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. எனவே ஆண்டவனைப் பிரார்த்தியுங்கள்” என்று கூறி வந்தார்.

அரசியல் கூட்டங்களை ஆஸ்திகப் பிரசாரக் கூட்டங்களாகச் செய்து வருகிறார் என்று அரசியல்வாதிகள் பலரும் புகார் செய்தார்கள்.

ஆனால் பொது மக்கள் ராஜாஜியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த் தார்கள். அவருடைய வார்த்தையை நம்பினார்கள். மழை வேண்டிக் கடவுளைப் பிரார்த்தித்தார்கள்.

கோயில்களிலும் கூட்டங்களிலும் வீடுகளிலும் அவரவர்களுடைய உள்ளங்களிலும் தத்தம் இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தனை செய்தார்கள்.

விநாயகர், சுப்பிரமணியர், இராமர், கிருஷ்ணன் போன்ற தெய்வங்களிடம் நம்பிக்கையுள்ளவர்கள் அந்தந்த தெய்வங்களைப் பிரார்த்தித்தார்கள்.

முஸ்லிம்கள் அல்லாவையும் கிறிஸ்துவர்கள் பரமண்டலத்திலுள்ள பிதாவையும் எண்ணிப் பிரார்த்தனை செய்தார்கள்.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற கொள்கையுடையவர்கள் அந்த ஒரே தேவனைப் பிரார்த்தனை செய்தார்கள்.

சிலர் வருண ஜபம் செய்தார்கள். சிலர் விராட பர்வம் வாசித்தார்கள். மற்றும் சிலர் மாரியம்மனுக்கு விழா எடுத்தார்கள்.

சென்ற ஒரு வருடத்தில் தென்னாட்டு மக்களிடையே பிரார்த்தனை மனப்பான்மை பரவியிருந்ததுபோல் பழைய ஆழ்வார்கள், நாயான்மார்கள் காலத்திலேகூடப் பரவியிருந்ததில்லை.

மக்களுடைய பிரார்த்தனையின் பலனைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இவ்வாண்டில் இரண்டு பருவ மழையும் அமோகமாகப் பெய்திருப்பதைக் காண்கிறோம்.

மேற்குக் கடற்கரையில் தென்மேற்குப் பருவமழை பொழிந்து மேட்டூர், பெரியாறு, பவானி தேக்கங்களிலும் தண்ணீர் நிறைந்து ததும்புகிறது.

வடகிழக்குப் பருவ மழையும் வழக்கத்துக்குச் சில தினங்களுக்கு முன்னாலேயே தொடங்கிப் பெய்திருக்கிறது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு உண்மையிலேயே நீர் வளமுள்ள நாடாகக் காட்சி தருகிறது.

ஆறு வருஷம் தொடர்ந்து மழையின்மையால் வறண்டு போய்க் கிடந்த ராமநாதபுரம், வடஆற்காடு மாவட்டங்கள், இன்று எங்கும் தண்ணீர்மயமாகக் காட்சி தருகின்றன.

ஆகையால் ராஜாஜியின் போதனைகளிலும் சாதனைகளிலும் பொதுமக்கள் வேறு எதை மறந்தாலும் பிரார்த்தனையை மட்டும் மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

தமிழகத்து அரசியல் நல்லபடியாக நடந்தாலும் மறுபடியும் குட்டிச் சுவரானாலும் பொதுமக்கள் நல்ல மழை பொழிந்து நாடு செழித்திருக்கச் செய்ய வேண்டும் என்று அவரவர்களுடைய இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தனை செய்யத் தவறமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

- கல்கி, நவம்பர் 15, 1953

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

சுவாரஸ்யம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :