• GLITTERS | பளபள

திஷாவின் திசை தவறானதா?


ஜி.எஸ்.எஸ்.

பெங்களூரில் பிறந்த திஷா ரவி இப்போது உலக அளவில் பேசப்படுகிறார், சிலரால் ஏசப்படுகிறார்.

பிப்ரவரி 13 அன்று இவரைக் காவல் துறை கைது செய்தவுடன் தலைப்புச் செய்தி ஆனார். இவர் ‘ஃப்ரைடேஸ் ஃபார் ஃப்யூச்சர்’ என்ற அமைப்பின் இந்தியக் கிளையை நிறுவியவர். இது ஒரு உலக அமைப்பு. பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வெள்ளிக்கிழமையன்று பள்ளிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பது இதன் கொள்கை. அதாவது சுற்றுச்சூழலை மேலும் சீர்குலைக்கும்படியான முடிவுகளை எடுத்து வரும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான போராட்டம் இது. உலகின் வெப்பநிலை அதிகரிக்கும் வண்ணம் நச்சுக்காற்றுக்களை வெளியிடும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் நீடிப்பதற்கும் ஆதரவாக செயல்படும் அரசியல்வாதிகளுக்கு எதிரான போராட்டம் இது.

இந்த அமைப்பை முதலில் தொடங்கியது கிரேட்டா தன்புர்க். ஸ்வீடனைச் சேர்ந்த மாணவி! தன் நாட்டின் நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு கையில் ‘வெப்பநிலையை பாதுகாப்பதற்கான பள்ளி வேலை நிறுத்தம்’ என்ற வார்த்தைகள் அடங்கிய கொடியை ஆட்டியபடி இவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். ஏற்கனவே பொது மேடைகளில் இவர் சுற்றுப்புற சூழலை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் அதைப்பற்றி கவலைப்படாமல் முடிவெடுக்கும் அரசியல்வாதிகளைக் கடுமையாகத் தாக்கியும் பேசிப் பிரபலமாகியிருந்தார்.

திஷா ரவியை ஏன் கைது செய்ய வேண்டும்? கிரேட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் திஷா ரவி அனுப்பியிருந்த ஒரு டூல்கிட்டை ஷேர் செய்திருந்தார். (ஒரு குறிப்பிட்ட செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய ஆவணம்தான் டூல்கிட் என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும், அதில் பங்கேற்பவர்கள் செய்யவேண்டிவை குறித்து இதுபோல டூல்கிட் உருவாக்கப்பட்டு பகிரப்படுவது வழக்கம். ஐ.நா. சபை கூட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த டூல்கிட் தயாரித்ததுண்டு என்றாலும் பெரும்பாலும் போராட்டங்கள் தொடர்பாகத்தான் டூல்கிட்கள் தயாரிக்கப்படுகின்றன).

கிரேட்டா பகிர்ந்த டூல்கிட்டில் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பவை குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் பின்னணியில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இயக்கம் இருப்பதாக டெல்லி சைபர் கிரைம் காவல்துறை சந்தேகிக்கிறது. விவசாயிகள் போராட்டம் என்ற போர்வையில் தனி காலிஸ்தான் தேவை என்று கோரும் தீவிரவாதிகளும் கலந்திருக்கிறார்கள். சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை இணைத்து காலிஸ்தான் என்ற தனி நாடாக வேண்டும் என்பதுதான் காலிஸ்தான் இயக்கத்தின் நோக்கம்.

திஷா ரவி பகிர்ந்த டூல்கிட் மற்றும் குடியரசு தினத்தன்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் ஆகியவற்றுக்குத் தொடர்பு உண்டு என்றும் இந்த டூல்கிட் காரணமாக வன்முறையாளர்கள் உத்வேகம் பெற்று வன்முறையை நிகழ்ச்சி இருக்கக்கூடும் என்பது காவல்துறை வாதம். (வன்முறையாளர்களில் ஒருவர்தான் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியைப் பறக்க விட்டார் என்கிறார்கள். அது சீக்கிய மதக் கொடிதான் என்பவர்களும் உண்டு).

திஷா ரவி 22 வயதுப் பெண். மவுண்ட் கார்மல் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தவர். அவரது தாத்தா விவசாயி. பருவ நிலை மாறுதல்களால் அவர் விவசாயத்துக்கு நேர்ந்த பாதிப்புகள் திஷாவை யோசிக்க வைத்திருக்கின்றன. கிரேட்டா துன்பர்கின் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன் இந்திய கிளையை துவக்கினார். உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாவலர் என்ற கோணத்தில் அவருக்கு பலத்த ஆதரவு உண்டு.

இந்திய நாளிதழ் ஒன்று திஷாவை ‘பெங்களூருவின் கிரேட்டா’ என்று வர்ணித்தது. இதன் இதழுக்கு அளித்த பேட்டியில் ‘நாங்கள் வருங்காலத்திற்காக போராடவில்லை. நிகழ்காலத்துக்குப் போராடுகிறோம்’ என்றார். அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தங்கள் வீடுகளை இழந்து விட்டு வேறு இடத்துக்கு குடியேறும் அவலத்தை சுட்டிக்காட்டினார்.

‘’இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவித்தார், வன்முறையைத் தூண்டி விட்டார்’’ என்பது திஷா ரவியின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. சுற்றுச்சூழலியல் ஆர்வலரான திஷா தீவிரவாதிகளின் பிடிக்குள் சென்று விட்டாரா? அல்லது அரசுக்குத் எதிராக தீவிர எதிர்வினையாற்றும் எல்லோரையுமே தீவிரவாதிகள் என்ற ஒரே வார்த்தையில் அடக்கும் அரசின் உத்தியா இது? என்று பல கேள்விகள் எழுகின்றன.
Comments

Yesudas says :

22-23 வயதான பின்தான் ப்ஃரண்டல் லோஃப் (Frontal Cortex) என்ற முன் மண்டை மூளைப் பகுதி முதிர்ச்சியடையும். அதுவே "எது சரி -எது தவறு, நீண்டகால திட்டமிடல் போன்றவற்றை" அறிய உதவும். அந்த முதிர்ச்சி இல்லாதாலேயே, தான் ஏதோ மாற்றம் சாகசம் செய்வதாக எண்ணி வம்பில் மாட்டிக் கொண்டாள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :