• SPARKLES | மினுமினு

சஸ்பென்ஸ் திரில்லர் சக்ரா பட விமர்சனம்!


- ராகவ்குமார்





ஹாலிவுட் சினிமாவில் ஒரு இலக்கணம் உண்டு. ஒரு சினிமாவில் முதல் பத்து நிமிடத்திற்குள் நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்திவிட வேண்டும், இது படத்தின் வெற்றிக்கு மிக பெரிய அளவில் உதவும் என்று சொல்வார்கள். அதே ஃபார்முலாதான் ‘சக்ரா’ படத்திலும் கடைபிடிக்கப் பட்டிருக்கிறது. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து தயாரித்து உள்ள சக்ரா படத்தில் முதல் பத்து நிமிடங்களில் பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு வரவைத்துவிட்டார் டைரக்டர்.

சுதந்திர தினத்தன்று சென்னையில் ஒரு சில மணிநேரங்களில் ஐம்பது வீடுகளில் கொள்ளை நடக்கிறது. விஷால் தந்தையின் மெடலும் கொள்ளை போயிருப்பதால் விஷாலும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். எந்த துப்பும் கிடைக்காமல் போலீஸ் திண்டாடுகிறது. ஒரு தொலைபேசி நம்பரின் உரிமையாளர் தான் இதற்கு காரணம் என்று கண்டுபிடித்து, வீட்டிற்கு சென்றால் அவர் இரண்டு வருடத்திற்கு முன்பே இறந்தவர் என்று தெரிய வருகிறது.

ஒரு கட்டத்தில் கொள்ளைக்கு மாஸ்டர் மைண்டாக இருப்பது ஆண் அல்ல ஒரு பெண் என்று தெரிய வருகிறது. யார் இந்த பெண், பின்புலம் என்ன,இந்த கொள்ளை பெண் பிடிபட்டாரா என்று திரைக்கதை விரிகிறது.

ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதைக்கே தேவையான பரபரப்பும் விறுவிறுப்பும் போதுமான அளவில் படத்தில் உள்ளது. கொள்ளையர்கள் பிடிபட்டு விடுவார்கள் என்று என்னும்போது, ஒரு புள்ளியில் தப்பி செல்வது படபடப்பை அதிகமாக்குகிறது. சென்டிமெண்டாக உருகுவதும், விசாரணையில் டீடெய்லாக புரிய வைப்பதும் என வித்யாசமான விஷால் திரையில் தெரிகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பூ பூகம்பம் ஆனது போல் நடிப்பை காட்டியுள்ளார். ரெஜினா காசென்ட்ரா வேறொரு தளத்தில் நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரம் பற்றி சொல்லிவிட்டால் திரையில் சுவாரஸ்யம் குறைந்து விடும்.

படத்தின் மற்றும் ஒரு ஹீரோ பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு. லைட்டிங் காட்சியின் உணர்வை காட்டுகிறது. யுவனின் இசை சஸ்பென்ஸின் உணர்வை உணரவைக்கிறது. வீட்டு பராமரிப்பு வேலைகளுக்கு தெரிந்தவர்களை வைக்காமல் செயலிகளையும், கம்ப்யூட்டர் நிறுவனங்களையும் நாடுவது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று நேரிடையாக சொல்கிறது இந்த படம்.

"மக்கள் என்னைக்கு ஆன்லைன்க்கு அடிமை ஆனார்களோ அன்னைக்கே கார்பொரேட் ஆள ஆரம்பிச்சிட்டான் ", புத்தி கம்மியா இருக்குறவங்க மட்டும் முட்டாள் இல்லை அதிகமா கோபப்படுறவங்களும் முட்டாள்தான் "போன்ற நறுக் வசனங்கள் திரையரங்கை விட்டு வெளியே வந்து பலமணி நேரம் கடந்தும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சக்ரா - பார்த்து உணர வேண்டிய பாடம்.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :