• SPARKLES | மினுமினு

தண்டனை!


- மதுர சாந்தன்

தன் வீட்டு வாசலில் வந்து நின்ற இன்னோவா காரையும் அதிலிருந்து இறங்கிய நாகராஜன மற்றும் தேவிராணியைக் கண்டு திகைத்தாள் 11 வயது சிறுமி சுஷ்மிதா.

“நீங்க யாரைப் பார்க்கணும்?” என்று கேட்டாள்.

“மேடம் நிர்மலா மேரி” என்றார், நாகராஜன்.

“ஆமா! எங்க அம்மாதான். நீங்க?”

“நாகராஜன். எஸ்.என். மெட்ரிகுலேஷன் ஸ்கூல், கரெஸ்பாண்டென்ட்.”

“அம்மா! அம்மா!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே ஓடினாள்.

அவள் குரல் கேட்டு வெளிய வந்த நிர்மலா, இவர்களை கண்டு ஆச்சரியத்துடன் வரவேற்றாள். வீட்டினுள் நுழைந்து சோபாவில் அமர்ந்தனர்.

“நீங்க நல்லா இருக்கீங்களா மேடம்? உங்களுக்கு ஒரே மகளா?” என்று கேட்டார் நாகராஜன்.

“நல்லா இருக்கோம் சார். இரண்டு பசங்க! பையன், சின்னவன். அவங்க அப்பாவோட வெளில போயிருக்கான். உங்க பையன் எப்பிடி இருக்கார் சார்?” நிர்மலா.

நாகராஜன் கைகளைக் கட்டிக்கொண்டு, சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், நிமிர்ந்து, “எங்க பையன் ஜெயில்ல இருக்கான் மேடம்! கொலை குற்றத்திற்காக!” என்றார்.

*********

பத்து வருடங்களுக்கு முன்பு.

எஸ். என். மெட்ரிகுலேஷன் பள்ளி. 7-ம் வகுப்பு அறை.

காலாண்டுத் தேர்வு.

சலசலவென்று சத்தம் வந்த திசையைப் பார்த்து, ஸ்கேலால் மேசையைத் தட்டி, “சைலன்ஸ்” என்று கத்தினாள் நிர்மலா.

சிறிது நேரம் அமைதி நிலவியது.

மீண்டும் பேச்சு, சிரிப்புச் சத்தம். நிர்மலா இருக்கையிலிருந்து எழுந்து வந்து, “யார் இங்கே சிரிச்சு பேசிட்டிருக்கிறது?” என்று கோபமாகக் கேட்டாள்.

அருகிலிருந்தவர்கள் அனைவரும் மோகன்ராஜைப் பார்த்தனர்.

அவன் அலட்சியமாக டீச்சரைப் பார்த்து “மணி எத்தனை? எக்ஸாம் எப்ப முடியும்னு கேட்டேன்?” என்றான்.

“நீ எக்ஸாம் எழுதி முடிச்சிட்டேன்னா, உன்னோட பேப்பர கொடுத்திட்டு கிளம்பிடு மோகன்ராஜ்! டோண்ட் டிஸ்டர்ப் அதெர்ஸ்!” என்று நிர்மலா சொல்ல, மோகன்ராஜ் அதற்காகவே காத்திருந்தது போல, தன் ஆன்ஸர் பேப்பரை அவள் மேஜையில் வத்துவிட்டு வெளியேறினான்.

************

ஆசிரியர் ஓய்வறைக்குள் நுழைந்த உதவியாளர், நிர்மலாவின் மேசைக்கருகில் வந்து, “மேடம்! உங்கள ஹெச்.எம். வரச் சொன்னாரு” என்றான்.

அவள் சென்றதும் “எக்ஸாம் ஹாலில் என்ன நடந்துச்சு மேடம்? மோகன்ராஜ் கரெஸ்பாண்டென்ட் சாரோட பையன்னு உங்களுக்குத் தெரியாதா? அவன் எக்ஸாம் எழுதிக்கிட்டிருக்கும்போது, நீங்க பாதில பேப்பர வாங்கிட்டு வெளியில அனுப்பிச்சிட்டீங்கன்னு சார்கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணிருக்கான். சார் என்னைய கூப்பிட்டு ரொம்ப கோபமா பேசுறார் மேடம்!”

நிர்மலாவுக்கு கைகள் வியர்த்து, மூச்சு வாங்க ஆரம்பித்து.

“சார்! அவன் எக்ஸாம் ஹால்ல தேவையில்லாம பேசி சிரிச்சுக்கிட்டுருந்தான். எக்ஸாம் எழுதி முடிச்சிட்டேன்னா, பேப்பர கொடுத்திட்டு கிளம்புன்னேன். அவனேதான் பேப்பரை என் டேபிள்ல போட்டுட்டுப் போயிட்டான்!” என்றாள்.

‘’அது என்னவோ தெரியாது. இப்போ சார் நம்ம ரெண்டு பேரையும் அவர் அறைக்குக் கூப்பிடறார். வா” என்று அழைத்துச் சென்றார்.

நிர்மலாவைக் கண்டதுமே நாகராஜன் “என்னம்மா! என் பையனை பாதி எக்ஸாம்ல வெளியில அனுப்பிட்டியாமே? அவனுக்கு இன்னும் ரெண்டு கொஸ்டீனுக்கு ஆன்ஸர் தெரிஞ்சும் எழுதாம வந்துட்டேன்னு சொல்லி அழறான். அதனால், அவன் பேப்பரை திருத்தும்போது 15 மார்க் சேர்த்துப் போடு.. ஒகேவா?’’ என்றார்.

“மோகன்ராஜ் பொய் சொல்றான் சார்!” என்றாள் நிர்மலா.

துளசிராமன் பதற்றத்துடன் நிர்மலாவைப் பார்த்தார்.

நாகராஜன் கையிலிருந்த பேனாவைக் கோபமாக மேசையின் மீது வீசி எறிந்து, ஆவேசத்துடன் நிர்மலாவைப் பார்த்துக் கத்தினார்.

“நான்சென்ஸ்! கெட் அவுட்!”

பதிலே பேசாமல் துளசிராமனும் நிர்மலாவும் அவர் அறையை விட்டு வெளியே வந்தனர்.

********

தலைமை ஆசிரியர் அறையில் நிர்மலா கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். பிறகு நிதானமாக சொன்னாள்.

‘’நான் வேலைய ரிசைன் பண்றேன் சார்” என்றாள்.

’’பேசாம அவனுக்குப் பதினைஞ்சு மார்க் போட்டு விட்டுருங்க மேடம். சார்கிட்ட நான் திரும்பப் பேசிக்கிறேன்.” என்றார் துளசிராமன்.

“இல்ல சார்! இனிமே நா இங்க வொர்க் பண்ண மாட்டேன்!’’ என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.

*********

நாகராஜன் சோபாவில் சற்றே அசைந்து உட்கார்ந்து, நிர்மலாவைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.

“மேடம்! பதிமூணு வயசிலேயே நீங்க அவன் பண்ற தப்ப கண்டிச்சீங்க. ஆனா, நான் அன்னைக்கு அதிகாரத்திலயும், ஆணவத்திலேயும் உங்களோட நேர்மையையும், அக்கறையையும் உதாசீனப்படுத்திட்டேன். அதுக்கு நாங்க நல்லா பலன் அனுபவிச்சிட்டோம் மேடம். அவனை கண்டிக்காம வளர்த்ததோட பலன் - இந்த வருஷம் காலேஜ் கொஸ்டீன் பேப்பர, ராத்திரி திருடப் போயி, செக்யுரிட்டிக்கிட்ட மாட்டி, அவர படிக்கட்டில தள்ளிவிட்டுட்டான். அவர் தலையில பலமா அடிபட்டு, மூணு நாள் கோமால இருந்து, இறந்துபோயிட்டார். சி.சி.டி.வில இவன பார்த்து, அரெஸ்ட் பண்ணி, கோர்ட்ல நாலு வருஷம் கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்காங்க.

எங்களுக்கு அவன் ஒரே பையன்தான். இருந்தாலும், இந்த தண்டனைய ஏத்துக்கிட்டு அவன் அனுபவிக்கட்டும்னு முடிவு பண்ணிருக்கோம் மேடம்!”.

அதுவரை பேசாதிருந்த தேவிராணி கண்களைத் துடைத்துக் கொண்டு நிர்மலாவைப் பார்த்தாள்.

“ரொம்ப நாளாவே இவர் உங்களப் பார்த்து, இந்த விஷயத்தப் பத்தி பேசணும்னு சொல்லிக்கிட்டே இருந்தார் மேடம். எங்கள மன்னிச்சிருங்க மேடம்!” என்றாள்.

தேவிராணியின் அருகில் சென்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டாள் நிர்மலா. ‘’வருத்தப் படாதீங்க மேடம்.. கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க மேடம்! அவன் நிச்சயம் நல்ல பையனா திரும்பி வருவான்’’ என்றூ ஆறுதல் படுத்தினாள்.

சிறிது நேர கனத்த மௌனத்துக்கு பின், நாகராஜனும் அவர் மனைவியும் எழுந்து விடைபெற்றனர்.

நிர்மலா வெளி வாசல் கதவில் சாய்ந்தபடி, இன்னோவா கார் வளைந்து சென்று மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

Comments

கேஆர்எஸ். சம்பத் says :

ஒரு கதையை படிப்பதைவிட அது கூறும் நீதி முக்கியம்.

Yesudas says :

அயோக்கிய அப்பன் மகனை ஆண்டவன், தண்டனை எதுவுமே திருத்ததாது! நாகராஜன்-தேவிராணியின் மரபணுக்கோளாறு, பிள்ளபெக்கத் தெரிந்த மாதிரி இருவருமே -மாதா-பிதா-ஆசிரியர்களாக இருக்க் கற்றவில்லை! நிர்மலா வேண்டுதலை பரமபிதா மன்னித்தாலும் மாமூல் வாங்காமல்(கலியுக நரகம்) திருத்த முடியாத ,போலீசார் மன்னிக்க மாட்டார்கள்! தொடர்வருமானம் தடைபடலாமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :