• SPARKLES | மினுமினு

உத்தரகண்ட் வெள்ளம் விடுக்கும் எச்சரிக்கை!


ஜி.எஸ்.எஸ்.

நைனிடால், டார்ஜிலிங் என்று குளுகுளுப் பிரதேசங்களால் நிறைந்த உத்தரகண்ட் மாநிலம் இப்போது நெருப்பை வாரி இறைத்திருக்கிறது. நதிகளில் வெள்ளப் பெருக்கு என்பது நமக்கு அதிசயச் செய்தி அல்ல. ஆனால் சமீபத்தில் உத்தரகண்டில் தவுலி கங்கா மற்றும் அலகானந்தா ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்திருக்கிறது.

இந்த நதிகளின் ஓரமாக அமைந்த நீர் மின்நிலையங்களில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வெள்ளம் புகுந்து விடவே உள்ளே வேலை பார்த்துக்கொண்டிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார்கள். (தப்பிக்க அவர்களுக்கு முப்பது நொடிகள் கூடக் கிடைக்கவில்லையாம்). அவர்களில் பலரும் சடலங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறார்கள்!

பனிச் சரிவு ஏற்பட்டதால் இந்த விபரீதம் நடந்திருக்கிறது. அதுவும் 5,600 மீட்டர் உயரத்தில் அமைந்த பனிப்பாறை என்பதால் மிகுந்த விசையுடன் கீழே விழுந்திருக்கிறது. இதில் சுமார் 3 கோடி கியூபிக் மீட்டர் தண்ணீர் வெளியானதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். `பனிப் பாறைகளுக்குள் ஏரிகள் இருக்கின்றன` என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் கற்பனை செய்து பார்க்கவே கலக்கமாக இருக்கிறது அல்லவா?

உத்தரகண்ட் பல மலைகளுக்கு நடுவே அமைந்த மாநிலம். இந்த மலைகளில் பலவும் உறுதியற்றவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடும் மழை பொழியக் கூடிய இடம் வேறு. எனவே வெள்ளம் என்பது இந்தப் பகுதிகளில் இயல்பானது. ஆனால் ஆற்றின் இரு கரைகளிலும் வீடுகளையும் ஹோட்டல்களையும் தொடர்ந்து கட்டுவது, மலைப்பகுதிகளில் போக்குவரத்து அதிகரித்த வண்ணம் இருப்பது போன்றவை வெள்ள சேதத்தை அதிகப்படுத்தும்.

ஆனால் ஒரு விஷயம் நெருடலை ஏற்படுத்தியிருக்கிறது. இது உத்தரகண்டில் கடும் குளிர் காலம். பனிப்பாறைகள் மிகவும் இறுகிப் போய் கல் பாறைகளை விட உறுதி கொண்டதாக இருக்க வாய்ப்பு உண்டு. அப்படியிருக்க எப்படி ஒரு பனிப்பாறை வெடித்தது? உருகியது?

இது புவி வெப்பமடைதலால் ஏற்பட்ட தாக்கம் என்கிறார்கள். இமயமலைப் பகுதியில் பொதுவாக வெப்ப நிலை அதிகரித்து வருவதாகவும் அதுதான் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த விதத்தில் அனுபவத்தில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதேபோல 2013-ம் வருடம் ஜூன் மாதத்திலும் உத்தரகண்ட் மாபெரும் வெள்ளத்தையும் நிலச்சரிவையும் சந்தித்தது. பனிப்பாறை உருகி மந்தாகினி ஆறு பெரும் வெள்ளத்தில் மூழ்கியது. பெரும் உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்தன.

நதிகளைச் சார்ந்துதான் நீர்மின் நிலையங்கள் அமைய முடியும். என்றாலும் பனிப் பாறைகள் நிரம்பிய இமயமலையிலிருந்து தோன்றும் ஆறுகளின் வழித்தடங்களில் நீர்மின் நிலையங்களை அமைப்பது புத்திசாலித்தனமா என்ற கேள்வி வலுப்பெற்று வருகிறது.

பனிப்பாறைகள் வெடித்தாலும் கரைந்தாலும் அதனால் சுற்றுப்புறத்துக்கு பலவித பாதிப்புகள் ஏற்படலாம். வெள்ளத்தினால் உண்டாகும் சேதம் என்பதையும் தாண்டி பலவித சிக்கல்களை உலகம் சந்திக்கும்.

சூரிய ஒளியை பூமியிலிருந்து பனிப்பாறைகள் பிரதிபலிக்கின்றன. இப்படிப் பிரதிபலிக்கவில்லை என்றால் சூரிய ஒளி கடல் பகுதியில் அதிகமாக விழுந்து அதன் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். வெப்பம் காரணமாக தண்ணீர் விரிவடைவதால் கடல் மட்டம் உயரும்.

பனிப்பாறைகள் உடைந்து தண்ணீர் கடலில் கலக்கும்போதும் கடல் மட்டம் அதிகமாகும். வெள்ளத்தில் மூழ்கிப் போன லெமூரியா கண்டம், பூம்புகார் போன்றவை இதற்கு உதாரணம்! அதன்படி கடல் மட்டம் அதிகமானால் பல நாடுகளே இல்லாமல் போகலாம்.

பனிப்பாறைகள் வெடிப்பதை தடுக்க ஒரே வழி உலகம் வெப்பமயமாதலைக் குறைப்பதுதான். இது எப்படி சாத்தியம்? இதற்கு என்ன வழி சொல்கிறார்கள் சுற்றுசூழலியல் வல்லுனர்களூம் ஆராய்ச்சியாளர்களும்?!

அவர்கள் சொல்லும் வழிமுறைகள் இவைதான்: சுற்றுச்சுழல் சீர்கேட்டுக்கு முக்கிய வில்லன் கரியமிலவாயு. பெட்ரோல், கரி போன்றவை மின்சாரத் தயாரிப்புக்காக எரிக்கப்படும்போது கரியமிலவாயு காற்றில் அதிகம் சேர்கிறது. வீடு, கார், செல்போன் என்று எல்லாவற்றிற்குமே மின்சாரம் தேவைப்படுகிறது. மின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது உங்கள் வீட்டு பட்ஜெட்டுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நல்லது.

தண்ணீரைக் குறைவாக செலவழியுங்கள். ஏனென்றால் தண்ணீரை உங்கள் வீட்டுக்கு எடுத்து வரவும் அதை சுத்திகரிக்கவும் நிறைய மின்சாரம் தேவைப்படுகிறது. எரிபொருள் குறைவாகத் தேவைப்படும் வண்டிகளுக்கு மாறுங்கள். பைக் கார் போன்றவற்றில் உள்ள டயர்களில் காற்று எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் (காற்று குறிந்தால் அதிக எரிபொருள் செலவாகும்). அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்லுங்கள்.

காற்றாலை, சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். எல்இடி விளக்குகள், சூரிய சக்தியால் ஒளிரும் விளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். துணிகளைத் துவைக்க வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம். இன்வெர்ட்டர் ஏசிக்களைப் பொருத்திக் கொள்ளலாம். தேவையில்லாதபோது தொலைக்காட்சி, கணினி, ஸ்டீரியோ போன்றவற்றை அணைத்து வைக்கலாம்.

எல்லாவற்றுக்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல், உலக வெப்பமயமாதலைக் குறைக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசித்து நடைமுறைப் படுத்த வேண்டியது இத்தருணத்தில் மிக அவசியம். உத்தரகண்ட் வெள்ளம் இதைத்தான் நமக்கு எச்சரிக்கிறது.

Comments

TIRUVARANGA VENKATESAN says :

இது மனிதன் செய்த பெரும் பிழை! பனிமலை பகுதியில் சுரங்கப்பாதை அமைத்திருப்பது அறியாமையா?‌அலட்சியமா? மேலும் தண்ணீர் கடவுள் தந்த வரம்! மிகை நீரை பாதைகள் அமைத்தும் இராட்சத குழாய்கள் புதைக்கும் பரவலாக இந்தியா முழுவதும் தண்ணீர் கிடைக்க முனைந்து ஆய்வுகள் செய்ய வேண்டும்! முனைந்தால் முடியாதது எதுவும் இல்லை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :