• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

36. வேடிக்கை விவகாரம்!


அமரர் கல்கி

அநாவசியமான காரியங்களை எல்லாரும் செய்யத் தயாராயிருக்கிறார்கள். ஆனால் அவசியமான காரியங்களை ‘நம்மை’த் தவிர யாரும் செய்ய முன் வருவதில்லை. இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் அனுபவத்தில் கண்டறிந்திருக்கிறோம்.

இதற்கு உதாரணம் காட்டுவதற்காக, ஒரு பொதுக்கூட்டத்தில் ஒருவரை மூர்ச்சை போட்டு விழச் செய்யலாம். வெயில் காலமாகையால், புழுக்கம் அசாத்தியமாயிருக்கிறது. பெயர் பெற்ற பிரசங்கியாகையால், கூட்டம் அபரிமிதம். இந்த நிலைமையில், பிரசங்கி வெகு ஆத்திரமாக அபிஸீனியாவில் நடக்கும் அநியாயத்தைப் பற்றிப் பேசுகிறார். ஐரோப்பிய தேசத்தினர் எல்லாரும் வாய் அனுதாபம் காட்டுகிறார்களே தவிர, காரியத்தில் ஒத்தாசை ஒன்றும் செய்யவில்லையே என்று கதறுகிறார். அந்தச் சமயத்தில், கூட்டத்தில் ஒருவர், புழுக்கமும் உணர்ச்சியும் சேர்ந்து தாக்கியதன் காரணமாக மூர்ச்சையடைந்து விழுகிறார். அப்போது பக்கத்திலுள்ளவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்?

“தண்ணி கொண்டா, தண்ணி கொண்டா” என்கிறார் ஒருவர்.

“ஜலம், ஜலம்” என்று கதறுகிறார் இன்னொருவர்.

“யாராவது கொஞ்சம் ‘வாட்டர்’ கொண்டுவரப்படாதா?” என்று வேறொரு வர் கேட்கிறார்.

“இன்னும் ஜலம் வரவில்லையா?” என்று அதிகாரமாய் வினவுகிறார் முதல் மனிதர். மூர்ச்சை போட்டவனைச் சுற்றிக் காற்று வர இடமில்லாமல் நூறு பேர் நிற்கிறார்கள். ஒருவராவது தண்ணீர் கொண்டுவரப் போவதில்லை. கடைசியில் நீங்களாவது, நானாவது போய்த்தான் கொண்டுவர வேண்டி யிருக்கிறது.

இம்மாதிரிச் சந்தர்ப்பங்கள் சில சமயங்களில் கல்யாண வீடுகளிலேகூட ஏற்படுவதை நாம் கவனித்திருக்கிறோம். ஒரு கல்யாணத்தில், திருமாங்கல்ய தாரணம் ஆவதற்குச் சற்று முன்பு ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

“பிரம்பு எங்கே?” என்று முதலில் வாத்தியார் ஒரு கூச்சர் போட்டார். “அடே, பிரம்பு எடுத்துண்டு வா” என்று பெண்ணின் மாமா கத்தினார். “பிரம்பு... பிரம்பு”. “பிரம்பு எங்கே?” “பிரம்பு வரவில்லையா?” என்று கொஞ்ச நேரம் அமர்க்களப்பட்டது. மாப்பிள்ளையோ திருதிருவென்று விழிக்கிறார். கல்யாணம் என்று அழைத்துக்கொண்டு வந்து பிரம்பினால் வெளுத்துவிடப் போகிறார்களா என்னவென்று அவர் பயந்து போனார். அப்படி நேர்ந்தால், அம்மாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு விடுவது என்றும் அவர் தீர்மானித்திருந்தார். கடைசியாக, அரை மணி நேரம் காத்திருந்தும் பிரம்பு வராமற்போகவே, கல்யாணப் பெண் குடுகுடுவென்று ஓடிப்போய்க் குதிர் இடுக்கிலிருந்த பிரம்பைக் கொண்டுவந்து வாத்தியாரிடம் கொடுத்தது. வாத்தியார் அதை மாப்பிள்ளையிடம் கொடுக்க, மாப்பிள்ளை காசி யாத்திரை கிளம்பினார்.

இதுபோன்ற நெருக்கடியான நிலைமைகளில், செய்ய வேண்டியதைச் செய்ய அநேகர் முன்வராததற்கு ஒரு முக்கிய காரணம், வேடிக்கை பார்ப்பதில் அவர்களுக்கிருக்கும் விருப்பந்தான் என்று நினைக்கிறேன். குளத்தில் யாராவது விழுந்தால் அது ஒரு வேடிக்கை. குளத்தில் விழுந்தவனை இன்னொருவன் காப்பாற்றினால் அதைப் பார்ப்பதும் ஒரு வேடிக்கை. ஆனால் நாமே அதைச் செய்வதில் வேடிக்கை என்ன இருக்கிறது? அசௌகரியந்தானே?

- ‘கல்கி களஞ்சியம்’ வானதி வெளியீடு

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

சர்வ சாதாரண விஷயத்தை ரசனையாக எழுத கல்கி அவர்களால்தான் முடியும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :