• SPARKLES | மினுமினு

சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதை: அசத்திய பிரதமர்!


கட்டுரை: மின்னல் ராணி





சட்டங்களில் காலத்துக்கேற்ப அவ்வப்போது மாறுதல்கள் கொண்டு வராவிட்டால், சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதை மாதிரி ஆகிவிடும் என்று பிரதமர் மோடி ஒரு சம்பவம் சொல்லி எம்.பி.க்களை சிரிப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தினார்.

நேற்று புதன்கிழமை (பிப்ரவரி10) நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது பிரதமர் மோடி பதிலளிக்கையில் கூறியதாவது:

சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் ஒருவர் சொன்ன கதையை உங்களுக்கு நான் சொல்கிறேன். 1960-களில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் அதிகாரிக்கு ஒரு ரகசியம் கடிதம் வந்தது. அந்த கடிதத்தை எழுதிய நபர் தான் பல ஆண்டுகளாக நேர்மையாக வேலை செய்தும் தனது சம்பளம் உயர்த்தப்படவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து அந்த ஆணையத்தின் தலைவர், அந்த கடிதம் எழுதிய நபரின் வேலை விபரங்களைத் தெரிவிக்குமாறு பதில் கடிதம் எழுதினார்.

இதனையடுத்து அந்த நபர் மாநில அரசின் தலைமை செயலாளர் அலுவலகத்தில் சி.சி.ஏ. பதவியில் பணிபுரிவதாக பதில் கடிதம் எழுதினார். அது என்ன சி.சி.ஏ பதவி? குழம்பிப் போன ஆணையத்தின் தலைவர் மீண்டும் விபரம் கேட்டுக் கடிதம் எழுதினார். அதற்கு வந்த பதிலைப் படித்து அசந்து போனார் ஆணையத் தலைவர்!

சி.சி.ஏ. பதவி என்பது இங்கிலாந்தின் முன்னாள் முதல்வரான சர்ச்சிலின் சிகார் (சுருட்டு) உதவியாளர் (Churchill Cigar Assistant) என்று அந்த ஆணையருக்கு விளக்கம் அளித்து கடிதம் எழுதினார்.

அதாவது, இந்தியா சுதந்திரம் பெறுமுன்பு ஆங்கிலேய ஆட்சிகாலத்தில், திருச்சியிலிருந்து சிறந்த சுருட்டு பாக்கெட்களை வாங்கி அவற்றை இங்கிலாந்து பிரதமர் இல்லமான 10 டவுனிங் தெருவுக்கு அனுப்ப வேண்டியது சர்ச்சிலின் சிகார் உதவியாளர் பணியாகும்.

அந்த பதவி இங்கிலாந்தில் 1945-ம் வருட தேர்தலில் சர்ச்சில் தோல்வியடைந்த பிறகும் தொடர்ந்தது. சர்ச்சிலுக்கு இந்தியாவின் சி.சி.ஏ. தொடர்ந்து சுருட்டு அனுப்பி வந்தார். சரி..இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகாவது இந்த பணி முடிந்ததா என்றால், அதுதான் இல்லை!

சி.சி.ஏ பதவியும் நீடித்தது. பணியும் தொடர்ந்து நடந்தது. ஆனால் பாவம்.. அந்த சி.சி.ஏ-வுக்கான சம்பளம் மட்டும் ஏறவில்லை! இதுபற்றித் தெரிய வந்ததும் அசந்து போனார் ஆணையத் தலைவர்!

ஆக, சட்டங்களிலும் பதவிகளிலும் காலத்துக்கேற்ப சில மாற்றங்கள் செய்யாவிட்டால் இப்படி சர்ச்சிலின் சுருட்டு உதவியாளர் கதைதான் நீடிக்கும்

-என்று பிரதமர் மோடி மக்களவையில் சர்ச்சிலின் சிகரெட் உதவியாளர் கதையை சொல்லி முடிக்க, அவை எம்.பி.க்களின் சிரிப்பொலியில் அதிர்ந்தது! .

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

இது போல எப்போதும் மக்களவை கல-கல- வென இருக்கட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :