• SPARKLES | மினுமினு

விமானக் கண்காட்சி! போர் விமானங்கள் சாகசம்!


ஷோபா ஆதித்யா





பெங்களூருவில் நேற்றுத் (பிப்ரவரி 3) தொடங்கிய விமான கண்காட்சியில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின.

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் 13-வது பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி நேற்று (பிப்ரவரி 3) பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் இந்திய எல்லையில் கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் படைகள் குவிப்பு தொடர்பாக சீனா மீது குற்றம்சாட்டினார். மேலும், ‘’பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியா மீதான மற்ற நாடுகளின் அத்துமீறல்களை எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் இந்தியா விழிப்புடன் உள்ளது’’என்று ராஜ்நாத்சிங் கூறினார். அதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கர்நாடக அரங்கினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, இந்திய விமானப்படைக்கு ரூ.48 ஆயிரம் கோடி செலவில் 83 தேஜஸ் இலகுரக விமானங்களை வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

விமான கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு ரக போர் விமானங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பங்கேற்று, வானில் சாகசங்கள் நிகழ்த்தி வருகின்றன.

இந்த கண்காட்சியில் 457 இந்திய நிறுவனங்களின் அரங்கங்களும், 74 வெளிநாட்டு நிறுவன அரங்கங்களும் பங்கேற்றுள்ளன.

கர்நாடகத்தில் விமானத்துறை மற்றும் பாதுகாப்புத் துறைக்கு வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு இன்று (பிப்ரவரி 4) நடந்தது. இந்த கண்காட்சியின் கடைசி நாளான நாளை (பிப்ரவரி 5) போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. புதிய அறிவிப்புகளும் வெளியிடப்படுகின்றன.

கொரோனா பரவல் காரணமாக இந்த முறை போர் விமானங்களின் சாகச காட்சிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. வணிக ரீதியிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. வழங்கப்படுகிறது. அப்படி முன்பதிவு செய்தவர்களுக்கும்கூட 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா பாதிப்பு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கண்காட்சிக்கு வருபவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அரங்கினுள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த சர்வதேச விமான கண்காட்சி வழக்கமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பெங்களூருவில் நடக்கிறது. மேலும் இந்த கண்காட்சி ஒவ்வொரு முறையும் 5 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :