• SPARKLES | மினுமினு

`6 Pack Band`: இந்தியாவின் முதல் திருநங்கைகளின் இசைக்குழு! கட்டுரை: ஷைனி.





இந்தியாவின் முதல் திருநங்கைகள் இசைக்குழு என்ற பெருமையை பெற்றுள்ள `6 Pack Band` குழு, பல தடைகளை கடந்து பாலிவுட் இசைத்துறையில் கலக்கி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இசைத்துறையில் காலடி எடுத்து வைத்த இந்த `6 Pack Band` குழு, தங்களின் விடா முயற்சியால் மக்களை ரசிக்க வைத்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் ஷமீர் தண்டன் முயற்சியால் 6 திருநங்கைகளைக் கொண்ட 6 பேக் பேண்ட் உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவில், பிதா கான், ரவீனா ஜக்டாப், ஆஷா ஜக்டாப், சந்தினி சுவர்ணாகர், கோமல் ஜகடாப் மற்றும் பவிகா பாட்டீல் ஆகியோர் உள்ளனர். இதுவரை 5 பாடல்களை வெளியிட்டுள்ள இந்தக் குழு, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் ஸ்டார்களான ஹிர்திக் ரோஷன், சோனு நிகாம், அர்ஜூன் கபூர், ஃபதே அலிகான் உள்ளிட்டோரும் 6 பேண்ட் குழுவின் பாடலில் நடித்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். பாலிவுட் நடிகர் சோனு நிகாம், ’’இசைத்துறையின் கேம் சேஞ்சர்களாக நிச்சயம் இந்த குழு இருக்கும்’’ என புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் திருநங்கைகளுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் குறித்து பேசப்பட்டு வரும், நிலையில் 6 பேண்ட் குழுவின் வளர்ச்சியானது, அவர்களுக்கான பாலின சமத்துவம், நீதி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக உருவெடுத்துள்ளது.

6 பேக் பேண்ட் இசைக்குழுவின் திருநங்கைகள் தற்போது இந்த நிலையை அடைய பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் கடந்து கடினமாக உழைத்துள்ளனர். இந்த சமூகத்தில் திருநங்கைகளுக்கு மதிப்பும், மரியாதையும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று வாதனையுடன் சொல்கிறார்கள்.

6 பேக் பேண்ட் குழுவில் ஒருவரான கோமல் ஜகதாப், தன்னுடைய இசை ஆர்வத்தின் காரணமாக யாஷ்ராஜ் பிலிம் நடத்திய பேண்ட் நேர்முகத்தேர்வில் 250 போட்டியாளர்களில் இறுதி வெற்றியாளராக இருந்ததாக மகிழ்ச்சயுடன் சொல்கிறார். அவரைப் போலவே மற்ற 5 பேரும்கூட பலகட்ட சோதனைகளைக் கடந்தே இந்த வெற்றிக் கூட்டணீயாக உருவாகியுள்ளனர். .

நர்சாக பணிபுரிந்த பவிகா பாட்டீல், திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக ஊதிய உயர்வு மற்றும் புரோமோசன் மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர், இசைத்துறையில் கவனம் செலுத்தி தற்போது முன்னேறி இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். சந்தினி சுவர்னாகர், திருநங்கையாக இருந்தபோதும் குடும்பத்தினர் தன்னை அங்கீகரித்ததாக தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற ஒரே இந்திய இசைக்குழு 6 பேக் பேண்ட் இசைக்குழுவாகும். பாலிவுட் படங்களிலும் கால்பதித்துள்ள இந்த இசைக்குழு, பலதரப்பில் இருந்தும் வரவேற்பை பெற்று வருகிறது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :