• GLITTERS | பளபள

அதிர்ச்சி ரிப்போர்ட்! நஞ்சுக் கொடியிலும் நச்சுத்துகள்கள்!


பி.ரியாஸ் அகமது

உலகமெங்கும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு காற்றைப் போல் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிவிட்டது. மண்ணில் மட்கிப் போகாத தன்மை கொண்டது என்பதால் பிளாஸ்டிக்கினால் ஆபத்து நேரக்கூடும் என்று ஆரம்பம் முதலே சமூக அக்கறையுடன் கூடிய எதிர்ப்புக் குரல்களும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது.

நெகிழிகளால் ஏற்படக்கூடிய பல்வேறு ஆபத்துகளை ஆய்வின் அடிப்படையில் எச்சரிக்கை செய்து வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதன் உச்சபட்ச அதிர்ச்சி – பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடி ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டு உலகையே அதிர வைத்துள்ளது. இதுதான் இப்போது, கொரோனா பெருந்தொற்று அதிர்ச்சியைவிட உலகின் ஒட்டுமொத்த மனித குலத்தின் பேராபத்தாக இருக்கிறது.

இதுகுறித்து, குழந்தைப்பிறப்பு மற்றும் பாலூட்டுதல் பயிற்சியாளரான டீனா அபிஷேக்கிடம் பேசினோம். டீனா அபிஷேக் ஒரு சர்வதேச சான்றிதழ் (CAPPA USA) பெற்ற மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர் ஆவார். இளம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் திட்டத்திற்கான யுனிசெஃப் (UNICEF) மற்றும் தாய்ப்பால் தொடர்பான பயிற்சிகளில் HUG Your Baby (USA) சான்றிதழ் பெற்றவர்.

கொரோனா காலகட்ட நெருக்கடியின் போது சமூகத்திற்கு அவர் செய்த மனிதாபிமான செயல்களுக்காக பிரிட்டனில் உலக மனிதாபிமான இயக்ககத்தின் (World Humanitarian Drive, United Kingdom ) விருது வென்றவர் மேலும் கொரோனாவுக்கு எதிரான செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த உலக சுகாதார அமைப்பு (WHO) சான்றிதழும் பெற்றுள்ளார்

‘‘பிளாஸ்டிக்கினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நடத்தப்ப்டும் ஆராய்ச்சிகளில் லேட்லஸ்டாக தெரிய வந்த விஷயம் பற்றி சொல்லுங்களேன்?””

உலகில் பிளாஸ்டிக்கின் தீமை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் அண்மையில், இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஒரு மகப்பேறு மருத்துவமனையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு தன்னார்வலராக 12 கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தை பிறந்ததும் அதன் நஞ்சுக்கொடியை ஆராய்ச்சிக்காகக் கொடுக்க முன்வந்தனர். அப்படி அவர்களுக்கு பிரசவம் முடிந்தபின் சோதித்ததில், அவர்களில் ஆறு தாய்மார்களின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் நுண் நெகிழித் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 12 நெகிழி நுண் துகள்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதுதான் இப்போது உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.`` என்றார் டீனா அபிஷேக்.

‘‘இது மனித குலத்தை எந்த வகையில் பாதிப்புக்குள்ளாக்கும்... எவ்வாறு இது மனித உடலுக்குள் புக முடிகிறது?``.

‘‘வேர்ல்ட் மெடிக்கல் அசோசியேஷன்தான் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அப்படி ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போதுதான் முதலில் விலங்குகளின் உடலுக்குள் இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் எனும் நுண் நெகிழித் துகள்கள் புகுந்திருப்பதை அறிந்தனர். மைக்ரோ பிளாஸ்டிக் என்பது 0.3 மி.மீ. அளவுள்ள மிகச்சிறிய கண்ணுக்குப் புலப்படாத துகளாகும். எனவேதான், இது நாம் சுவாசிக்கிற காற்றிலிருந்தும் உண்ணும் உணவுகளின் மூலமாகவும் அலங்காரத்துக்காகவும் வாசனைக்காகவும் பயன்படுத்துகிற வாசனை திரவியங்கள், ஒப்பனைப் பொருட்கள் ஆகியவற்றோடு குடிக்கும் தண்ணீர், பால், கூல் டிரிங்க்ஸ் முதற்கொண்டு உடுத்தும் உடையிலிருந்தும்கூட இந்த நுண் நெகிழித் துகள்கள் உடலுக்குள் ஊடுருவிவிடுகின்றன.

அது எவ்வாறெனில், நமது தோல்களில் இயற்கையாகவே நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் தோலில் சின்னச்சின்ன துவாரங்கள் இருக்கும். நம் உடலின் வேர்வையே அந்தத் துவாரங்கள் வழியாகத்தானே வெளியேறுகிறது. அப்படிப்பட்ட துவாரங்களே மைக்ரோ பிளாஸ்டிக்குகள் உடலில் நுழைவதற்கான வாயிலாக அமைந்துவிடுகிறது.

அவ்வாறு நுழையும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் நம் ரத்தத்தில் கலந்து, விடுகிறது. பின்னர் மனிதக் கழிவுகள் மூலம் வெளியேறியும் விடுவது உண்டு. அப்படி வெளியேறிய கழிவுகளில்தான் முதன்முதலில் இந்த நெகிழித் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதன் பிறகுதான், இதுகுறித்த ஆராய்ச்சியை விரிவுபடுத்தினார்கள். அதில்தான் அந்த அதிர்ச்சி விஷய்ம் தெரிய வந்தது. அதாவது, தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பாலமாகவும் குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு சுவராகவும் உள்ள நஞ்சுக்கொடியிலேயே பிளாஸ்டிக் மைக்ரோ நுண்துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஆராய்ச்சியாளர்களே அதிர்ந்து போனார்கள்.

ஒரு வருடத்தில் சுமார் 320 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 40 சதவிகிதம் ஒரு தடவை மட்டுமே உபயோகப்படுத்தப்படக் கூடியவை. எனவே, அதிக பிளாஸ்டிக் வேஸ்ட்கள் உருவாகின்றது. அவை சுற்றுச்சூழலில் வீசி எறியப்படும்போது ஏற்படுத்தும் சீரழிவு ஒரு தீவிரமான பிரச்சினையாக உருவெடுக்கின்றது. வளிமண்டல முகவர்களான, அலைகள், புற ஊதா கதிர்வீச்சு மற்றும் புகைப்பட ஆக்சிஜனேற்றம் ஆகியவை பாக்டீரியாவுடன் இணைந்து பிளாஸ்டிக் துண்டுகளை மைக்ரோ மற்றும் நானோ மயமாக்கப்பட்ட துகள்களாக சிதைக்கின்றன.

உலகெங்கும் உள்ள கடற்கரைப் பகுதிகள் பிளாஸ்டிக்கினால் சூழப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஐந்து மில்லி மீட்டரைவிட குறைவான இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் கடல் உணவுகளிலும் கடல் உப்பிலும் குடிநீரிலும் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவடன் மட்டுமல்லாமல், நமது உடலிலும் தீவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

‘‘நஞ்சுக்கொடியில் நெகிழி நுண்துகள் இருப்பதாக இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டது குறித்தும் இதிலிருந்து நம்மையும் நம் சந்ததியினரையும் பாதுகாத்துக் கொள்ள என்னென்ன செய்யலாம்..?``

‘‘உலக மருத்துவக் கழகத்தின் அனுமதியோடு இத்தாலியில் இதுகுறித்து நடந்த ஆராய்ச்சி பற்றி சொல்லுங்களேன்?

’’இந்த ஆராய்ச்சியை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 21-ல் உலக மருத்துவக் கழகம் ரோம் நகரில் நடத்தியது. அதில் ஆறு கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களின் நஞ்சுக்கொடியையும் தானம் செய்வதாக அவர்கள் அனுமதி கொடுத்தனர். இந்த ஆய்வில் உபயோகிக்கப்பட்ட அனைத்துமே பிளாஸ்டிக் ஃப்ரீ உபகரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு காட்டன் க்ளவ், தொப்புள் கொடி க்ளிப் செய்ய மெட்டல் க்ளிப்பர் போன்ற சாதனங்களையே உபயோகித்தார்கள். தேர்வு செய்யப்பட்ட அனைத்து கர்ப்பிணிகளும் ஆரோக்கியமான நிலையிலேயே இருந்தார்கள். எந்தவித உபாதைகளும் இல்லை. அவர்களின் உணவு மற்றும் அனைத்து உபயோகப் பொருட்களையும் குறித்து வைக்க அவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தது.

பிரசவத்திற்கு பிறகு அவர்களின் நஞ்சுக்கொடியை பரிசோதித்தபோது 12 மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் துகள்கள் கண்டறியப்பட்டது. தாயின் நஞ்சுக்கொடி பகுதியில் நான்கும் குழந்தையின் நஞ்சுக்கொடி பகுதியில் ஐந்தும் பனிக்குட சவ்வில் மூன்றும் இருப்பது கண்டறியப்பட்டது.

நஞ்சுக்கொடியில் காணப்பட்ட மைக்ரோ பிளாஸ்டிக் மூலக்கூறுகள் பெரும்பாலும் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களிலிருந்து (pairrls, BB Crems, foundations, textile dying (cotton/polyster) and air freshers, lipstics, Mascara, eye shadow and other Makeup products) உடலுக்குள் ஊடுருவி இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

இந்த நெகிழி நுண் துகள்கள் மனித குலத்தினை பெரிதும் பாதிக்கும் ஆபத்து நிறைந்ததாகும். இவை அளவில் சிறியதாக உள்ளதால், நம் உடலில் உள்ள எல்லாவிதமான பாதுகாப்பு சுவர்களையும் கடந்து நம் ரத்தத்தில் பயணிக்கத் தொடங்கிவிடுகின்றன. அந்தவகையில்தான் தாயின் கருப்பையையும் சென்று அடைந்திருக்கிறது.

இந்த நெகிழி நுண்துகள்களால் குழந்தையின் வருங்கால ஆபத்து அங்கிருந்தே தொடங்கிவிடுகிறது. குழந்தை கருவிலேயே இந்த நுண்துகள்களுடன் போராடத் தொடங்கிவிடுவதால், குழந்தையின் எதிர்ப்பு சக்தி கருவிலேயே பாதிக்கும் நிலைக்கு ஆட்பட நேரிடலாம். மேலும், குழந்தையின் எடை மற்றும் வளர்ச்சியும் குறைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். அது மேலும், என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது ஆராய்ச்சியின் இறுதிநிலையில்தான் தெரியவரும்.

எனவேதான், நம் ஒவ்வொருவரின் நலனையும் கருத்தில் கொண்டு உடலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களையும் மற்றும் இதர பிளாஸ்டிக் கலந்த பொருட்களையும் தயாரிப்பதையும் பயன்படுத்துவதையும் நாம் கைவிடுதல் வேண்டும். அதோடு, உண்ணும் உணவுப் பொருட்களையும் உடுத்தும் புறப்பயன்பாட்டுக்கான பொருட்களையும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் தயாரித்தால் ஆரோக்கியமான சமுதாயத்தை நாம் உருவாக்கலாம்``

-என்று மனித குலத்தின் மீதான அக்கறையோடு சொன்னார் டீனா அபிஷேக்.

தாயின் வயிற்றிலுள்ள கருவின் வளர்ச்சியிலும், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குவதிலும், கழிவுப்பொருட்களை அகற்றுவதிலும் நஞ்சுக்கொடி முக்கிய பங்கு வகிக்கிறது. நஞ்சுக்கொடி கருப்பையின் சுவருடன் இணைகிறது, மேலும் குழந்தையின் தொப்புள் கொடி அதிலிருந்து எழுகிறது.

தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நஞ்சுக்கொடி பக்கங்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயம்! பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு நிரந்தர தடைவிதிப்பது குறித்து உலக நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பது உண்மை!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :