• GLITTERS | பளபள

ரஜினிகாந்தின் பூச்சாண்டி அரசியல்!


ராஜ்மோகன் சுப்பிரமணியம்

ரஜினிகாந்த் எனும் அபார சினிமாக் கலைஞர் சுமார் 30 ஆண்டுகாலமாக விடைத் தெரியாமல் சுமந்து திரிந்த தனது விடுகதைக்கு இப்போதுதான் ஒரு விடை தந்திருக்கிறார். ‘விடுகதையா இந்த வாழ்க்கை?’ என்ற அவரது சினிமா பாடல் போன்றே அவரின் ரசிகர்கள் இத்தனை வருடங்கள் குழம்பி தவித்த ஒரு கேள்விக்கு இப்போது பதிலளித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

அதாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா.. மாட்டாரா என்று குழம்பித் தவித்த ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும் பதில் கிடைத்திருக்கிறது. தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரும் எண்ணத்தை கைவிட்டதாகச் அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.

பெங்களூரில் ஒரு பஸ் கண்டக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து, சினிமாவில் உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்து, இங்கு திரைப்பட கல்லூரியில் நடிப்பு பயின்று, பின்னர் படிபடியாக முன்னேறி ஒரு பெரும் நடிகனான உருவான கதை எல்லோருக்கும் தெரிந்தது. நிச்சயம் இது வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் அனைவருக்கும் பெரிய உற்சாக ஊற்று.

அவர் படத்தின் பெரும்பாலான கதைகள், எத்தனை கஷ்டப்பட்டாலும் வாழ்க்கையில் ஒரு நாள் நிச்சயம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை தருவதாகவே அமையும். அவரின் தோற்றமும் வாழ்க்கைப் பயணமும் நிஜவுலகில் சாமனியனும் சரித்திர புருஷனாகலாம் என்ற உண்மையை நிரூபிக்கிறது. அதே நேரம் அவரின் அரசியல் நிலைப்பாடு பல ஆண்டுகளாக குழப்பிக் கொண்டுதான் இருந்துள்ளன.

ஒரு கட்சியோ அமைப்போ உருவாகவேண்டும் எனில் அதற்கான ஒரு தேவை என்பது அவசியம். தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை அறிஞர் அண்ணா தோற்றுவித்த போது சமூக நீதிக்கான தேவை இருந்தது.

எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தோற்றுவித்தபோது அப்படி ஒரு வலிமையான தேவை இருக்கவில்லை. இருப்பினும் தி.மு.க.வை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்த்ததில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு இருந்தது. திடீரென்று அவர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதில் கோபமுற்ற தொண்டர்கள் எம்.ஜி.ஆரை பின் தொடர்ந்தனர். அ.தி.மு.க. பிறந்தது. அடுத்து நிகழ்ந்தது வரலாறு.

அதற்கு பிறகான தமிழக ஆட்சி என்பது மக்கள் பிரச்னையை முன் வைப்பவதைவிட இரண்டு கட்சிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து அரசியல் செய்வதிலேயே காலத்தை ஓட்டுகின்றன. இதனை நன்றாக உணர்ந்த - மத்தியில் ஆளும் கட்சிகள் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி இந்த கட்சிகளை ஏதாவது ஒன்றை எப்பொழுதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தனக்கான விஷயங்களை சாதித்துக் கொண்டிருக்கின்றன.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. மீது சலிப்புற்ற சிலரின் எதிர்பார்ப்பு ரஜினிகாந்த் மீது திரும்பியது. அப்பொழுது அவர் வர்த்தக ரீதியாக தலைசிறந்த நடிகராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில் டீன் ஏஜ் பொடியன்களின் ஸ்டைல் மன்னராக இருந்தார்.

ரஜினி மீது அரசியல் எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கியது எப்போது?!

குறிப்பாக, 1996ல் ஜெயலலிதாவை எதிர்த்து ரஜனி குரல் கொடுத்தபோது அவர் மீதான அரசியல் எதிர்பார்ப்பு பலம் பெற்றது. இயல்பிலேயே எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு தடுமாற்றம் நிகழ்ந்தது. தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் போட்டி என்ற நிலை மீண்டும் சூடுபிடித்தது. ராஜீவ் காந்தி படுகொலை தந்த பரிசாக அ.தி.மு.க.ஆட்சி பீடம் அமைத்தது. அந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி தந்த கடுமையான அனுபவங்கள் ஜெயலலிதா மீது கடும் அதிருப்தியை மக்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது. அவரை எதிர்த்து யார் விமர்சனம் செய்தாலும் அவர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ரஜனிக்கும் ஜெயலலிதாவினால் சில அசௌகரியங்கள் ஏற்பட்டன. இருவரும் வசிப்பது போயஸ்கார்டனில். ஜெயலலிதாவுக்கு செய்யப் படும் பாதுகாப்பு கெடுபிடிகள் ரஜினியின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு தொந்தரவாக அமைந்தது. இந்த கடுப்பில் இருந்த ரஜனிக்கு மணிரத்தினம் வீட்டில் குண்டு வீசப்பட்டபோது தார்மீக கோபம் அதிகரித்தது. சட்ட ஒழுங்கு பற்றி வெளிப்படையான விமர்சனங்கள் எழுந்தன.

ஜெயலலிதா குறித்தும் அவரின் ஆட்சி குறித்தும் பாட்ஷா படவிழா மேடையில் ரஜினி யதார்த்தமாக தன் விமர்சனத்தை முன் வைத்தார்.

‘’ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்த ஆண்டவனாலும் தமிழநாட்டைக் காப்பாற்ற முடியாது’ என்று அவர் யதார்த்தமாகப் பேசியது, நெருப்பு மாதிரி பற்றிக்கொண்டது! ரஜினியே அதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

அன்றைய அரசியல் சூழல்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்தன. அவரை அப்புறுப்படுத்துவதே பிரதான இலட்சியமாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருந்தன. அதற்கு ரஜினியின் இந்த வாய்ஸ் வலு சேர்த்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனார் ரஜினியை எப்படியாவது காங்கிரஸில் இணைத்துவிடத் துடித்தார். ரஜினியும் நரசிம்ம ராவும் சந்தித்தார்கள். நடிகனாக இருந்த ரஜினிக்கு இந்த அரசியல் நிகழ்வுகள் கொஞ்சம் அரசியல் ஆவலையும் வளர்த்திருக்கக்கூடும் எனலாம்.

ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் செல்வாக்கு, தனது ரசிகர்கள் செல்வாக்கு இரண்டும் இணைந்தால் கூட திராவிட கட்சியை வீழ்த்த முடியாது என்பது ரஜினிக்கு நன்றாகவே புரிந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசியலில் ஏற்பட்ட அனுபவங்கள் ரஜினியை எச்சரித்தது. ஆனாலும், புலி வாலைப் பிடித்த கதையாக, ஆட்சிக்கட்டிலில் இருந்த ஜெயலலிதாவின் கடும் கோபத்துக்கும் ரஜினியை உள்ளாகிவிட்டது. இந்நிலையில் ஜெயலலிதாவை ஆட்சியில் நீடிக்க விட்டால், அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திள் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார் ரஜினி, தனது நேரடி அரசியல் விருப்பத்தை துறந்து தி.மு.க. கூட்டணிக்கு குரல் கொடுத்தார். ஆனால் அதே ரஜினியின் வாய்ஸ் 2001 தேர்தலில் எடுபடவில்லை. அப்போதே ரஜினி ரசிகர்கள் அவரது அரசியல் நிலைப்பாடு பற்றி விழித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ரஜினியின் படங்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தவை. கமல்ஹாசனை போல் பரிட்சார்த்த முயற்சிகளை அவர் எடுப்பது இல்லை. தனது அரசியல் தொடர்பான ஹாஸ்யங்களை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்றவுடன் படங்களில் நிறைய ‘பஞ்ச்’ வசனங்களை சேர்க்க தொடங்கினார்.

இங்கு ரஜினிக்கு ஊடகங்கள் கட்டமைத்த அரசியல் பிம்பம் ரசிகர்களைவிட பலமடங்கு பெரிது. எம்.ஜி.ஆரே ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்கிறது எம்.எஸ்.எஸ். பாண்டியனின் Image Trap என்ற நூல், மற்றும் காலம்சென்ற காவல்துறை தலைவர் மோகன் தாஸின் The man and myth என்ற மற்றொரு நூல்!

யோசித்துப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்குப் பிறகு தமிழகத்தில் இரண்டு வகை அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றன. ஒன்று கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் இன்னொன்று சாதி ரீதியான அமைப்புகள்.

ஜனரஞ்சக பத்திரிகைகள் சினிமாவில் பிளாக்பஸ்டர் நட்சத்திரமாக திகழும் ரஜினி பற்றி அதிகமாக எழுதும்போது அது அதிக வரவேற்பை பெற்றது. இதனால் ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் பதிவு செய்தார்கள்.

நான் ரஜினியின் ரசிகன் என்ற சொல்லிக்கொள்வதில் எப்படி ரசிகர்கள் குதுகலம் கண்டார்களோ அதேபோன்ற ரஜினியை பற்றி பல கவர் ஸ்டோரிகளை வெளியிடுவதில் பத்திரிகைகள் கோலகலமாக கொண்டாடியது. இவையாவும் ரஜினி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து கொண்டே வந்தது.

பிறகு, 2001-க்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் பார்வை மாறியது எனலாம். அ.தி.மு.க., தி.மு.க.வும் மாற்றி மாற்றி களம் காண, தன்னால் இந்த களத்தில் சதிராட முடியாது என்று தெரிந்த நிலையிலும் ரசிகர்களை எப்பொழுதும் சூடாக வைத்திருந்தார் ரஜினி.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யும் துணிவு அவருக்கு இல்லை! எல்லா வீரத்தையும் திரையில் பஞ்ச் வசனத்தில் மட்டுமே காட்டினார். அதையும் ரசிகர்கள் நிஜமென நம்பி புளகாங்கிதம் அடைந்தார்கள்.

அவருக்கு 2016-ல் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆனால், 2017-ல் ரசிகர்களிடம் தோன்றி ‘தான் அரசியலுக்குத் வர தயார் என்றும் அதுவும் 234 தொகுதியிலும் தனித்து நிற்க வைப்பேன். ஆன்மீக அரசியல் செய்வேன்’ என்றார். ஸ்டெர்லை பிரச்சினையின்போது, தூத்துக்குடிக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு எதிராகவே பேசினார். இப்படி அவர் குழப்பிய குட்டைகளில் சோர்ந்து போனது தமிழகம் மட்டுமல்ல அவர் ரசிகர்களும்தான்.

விடுகதைக்கு விடை கண்ட ரஜினிகாந்த்!

இதற்கிடையே தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன், ஏ.சி. சண்முகம் போன்றார் ரஜினிதான் தமிழ்நாட்டிற்கு விடியல் என்பதுபோல் பரப்புரையில் இறங்கினார்கள். ’பா.ஜ.க.வில் இணையபோகிறார், நவம்பரில் அரசியல் கட்சித் தொடங்குகிறார்’ என்றெல்லாம் டிசைன் டிசைனாக பேசினார்கள். இதில் எதுவுமே நடைபெறவில்லை. மாறாக தனக்கு அரசியல் ஆர்வம் இல்லை என்பதை மறைமுகமாக சொல்லிவிட்டார் ரஜினிகாந்த்.

ஒரு அறிக்கையை விட்டு, ’இந்த அறிக்கையை நான் விடவில்லை.. ஆனால் இதில் உள்ள தகவல்கள் உண்மை’ என்கிறார். அவர் படத்தில் வந்த செந்தில் காமெடி போன்றே “இவர்தான் மாப்பிள்ளை, ஆனால் சட்டை இவருடையது அல்ல!’ என்பது போல் இவரின் அறிக்கை இருக்கிறது.

ரஜினி எனும் தனிமனிதரை பார்க்கும்போது அவ்வளவு யதார்த்தமான போக்கும் வெளிப்படையும் அவரிடம் இல்லை என்பது புலனாகிறது. முப்பது ஆண்டுகாலமாக தனது ரசிகர்களை காக்க வைத்துவிட்டோமே என்ற அடிப்படை வருத்தம்கூட இல்லை.

அரசியல் என்ற பெயரில் தனது ரசிகர்களை உஷ்ணமூட்டி அந்த கதகதப்பில் காய்ந்து வந்திருக்கிறார் என்பதே அர்த்தம்கொள்ள முடிகிறது.

ஆனால், தன் தலைவன் அரசியலுக்கு வருவார் என்று முப்பது ஆண்டுகாலம் காத்திருந்த அவரின் ரசிகர்களின் நிலைதான் பரிதாபமானது. எது எப்படியோ ரஜினி முப்பது ஆண்டுகால குழப்பத்திற்கு ஒரு முடிவு தெரிவித்திருக்கிறார்.

இது ரசிகர்களுக்கு வேண்டுமானால் பின்னடைவாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் தமிழகத்துக்கு நல்லது. முடிவெடுப்பதில் குழப்பம் கொண்ட..அரசியல் பற்றி அதிகம் விழிப்புணர்வில்லாமல் சினிமா மட்டுமே முகவரியாக கொண்டு அரசியலுக்கு வர நினைப்பவர்களுக்கு ரஜினி ஒரு பாடம்.

அதே நேரம் சினிமாக்காரர்கள் மத்தியில் தலைவனை தேடுவதை நிறுத்தி ரசிகர்களும், மக்களும்கூட அறிவுப்பூர்வமாக சிந்திக்கத் தொடங்கவேண்டும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :