• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

35. நாலு அறை!


அமரர் கல்கி

உலகத்தில் தற்சமயம் பேரறிஞர்கள் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கும் இரண்டு பெரிய பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சொத்துரிமை; இரண்டாவது, கல்யாணம். உலகின் செல்வத்தை எல்லா மனிதர்களுக்கும் தர்ம நியாயமாகப் பகிர்ந்து கொடுப்பதன் அவசியத்தைப் பற்றி ஒரு பெருங்கிளர்ச்சி உலகத்தில் நடந்து வருகிறது. சமதர்மம், பொது உடைமை, தொழிலாளர் இயக்கம் போன்றவை எல்லாம் மேற்படி கிளர்ச்சியின் அம்சங்களே. மனிதர்களுக்குள் வழங்கும் கல்யாண முறைகள், இல்லற ஏற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றியும் எவ்வளவு தீவிரமாக அறிஞர்கள் சிந்தித்தும், பேசியும் எழுதியும் வருகிறார்கள்!

மேற்கூறிய இரண்டு பிரச்னைகளுக்கும் ஒரு விதத்தில் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அதாவது, சொத்துரிமைப் பிரச்னை நல்ல முறையில் தீர்த்து வைக்கப்பட்டால், கல்யாணப் பிரச்னையும் ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டதாகும். இந்தச் சம்பந்தத்தைப் பற்றிப் பின்னால் ஓரிடத்தில் சொல்லுகிறேன்.

கல்யாணம் என்பது, கல்யாணம் செய்து கொள்ளும் சதிபதிகளை மட்டும் பொருத்த பிரத்யேக விஷயம் என்று யாராவது எண்ணியிருந்தீர்களானால், அந்த எண்ணத்தை நாலு அறை கொடுத்து விரட்டிவிடுங்கள். அது முழுதும் பிசகான எண்ணம்.

கல்யாணம் சதிபதிகளை எவ்வளவு பொருத்த விஷயமோ, அவ்வளவு சமூகத்தையும் பொருத்த விஷயம். இந்தச் சமூக சம்பந்தம் இரண்டு வகையில் ஏற்படுகின்றது. 1. இல்வாழ்க்கையில் சந்தோஷமாயிருக்கும் சதிபதிகள் பெரும் பாலும் இனிய சுபாவமுடையவர்களாயும், வாழ்க்கையில் குதூகலமுடைய வர்களாயும், தாராள மனங்கொண்டவர்களாயும் இருப்பார்கள். தனி மனிதர்களுடைய இந்தக் குணங்கள்தான் சமூக முன்னேற்றத்துக்குக் காரணமாய் இருக்கின்றன. இல்வாழ்க்கையில் சந்தோஷமற்ற சதிபதிபளோ, கடுகடுத்த சுபாவமும், வாழ்க்கையில் வெறுப்பும், குறுகிய புத்தியும், அசூயையும், துவேஷமும் கொண்டவர்களாயிருப்பார்கள். இந்தக் கயவர்களால் சமூகத்துக்கு எவ்வளவு தீமையுண்டாகும் என்று சொல்ல வேண்டியதில்லை. 2. கல்யாணத்தின் பலனாக குழந்தைகள் ஏற்படுகின்றன. இன்று குழந்தைகளாயிருப்ப வர்களே நாளைக்கெல்லாம் வளர்ந்து தேசத்தின் பிரஜைகள் ஆகிறார்கள். இதனால்தான் நாகரிக தேசங்களில் எல்லாம் குழந்தைகள் வளர்ப்பில் இராஜாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது. குழந்தைகளுக்குக் காரணமா யிருப்பது கல்யாணமாகையால், கல்யாணத்தைப் பற்றி சமூகம் கவலை கொள்வது நியாயமல்லவா?

இந்த இரண்டு காரணங்களாலும், நாகரிகமடைந்த எல்லா தேசங்களிலும், கல்யாணத்தைப் பற்றிய சட்டதிட்டங்களைச் சமூகம் செய்கிறது. அந்தச் சட்டதிட்டங்களைச் சுலபமாக அமல்படுத்துவது சாத்தியமாயிருக்கும் பொருட்டு, அவற்றுக்கு மத சம்பந்தமும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதாவது கல்யாண விதிகள் சாஸ்திரங்களிலும் புகுந்திருக்கின்றன. மந்திரங்கள், சடங்குகள், புரோகிதர்கள் தோன்றினார்கள்.

கல்யாணம் என்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்று இப்போது தெரிகிறதா? ஆண் பெண்களுக்குள்ள இயற்கைக் கவர்ச்சி ஒரு பக்கம் இருக்க, சமூகம், சட்டம், மதம் இவ்வளவும் அதில் தலையிடுகின்றன.

- ‘பெண் தெய்வங்கள்’ வானதி வெளியீடு

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :