• GLITTERS | பளபள

ராணுவ அணிவகுப்பு VS டிராக்டர் அணிவகுப்பு!


ராஜ்மோகன் சுப்ரமணியன்

ஜனநாயகம் எனும் வார்த்தைக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் கொடுத்த அழகான விளக்கம்- ‘’மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படுவதே ஜனநாயகம்’’!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் குடியரசு தினமான நேற்று (ஜனவரி 26) தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்ட சம்பவத்தில் சில மறைமுக உண்மைகள் உணர்த்தப் பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக தேசத்தின் தலைநகர் டில்லியில் விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. டில்லிக்கு விவசாயப் போராட்டங்கள் ஒன்றும் புதிது அல்ல. ஆனால், இப்போது நடக்கும் போராட்டம் வேறு வகை! அதாவது மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்துதான் தீவிர போராட்டம் நடக்கிறது! இதனை முன்னெடுத்து நடத்துபவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள். இந்த போராட்டக்களத்தில் பல்வேறு காரணங்களுக்காக இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இருந்தும்கூட, உணர்ச்சிப் பொங்கும் நிலையில் கட்டுக்கோப்பு கலையாமல் சாத்வீகமான முறையில் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஒரு ஜனநாயக நாட்டில, இப்படிப்பட்ட விஷயத்துக்கு விவசாயிகளுக்கு பதில் அளிக்க வேண்டியவர் விவசாய அமைச்சர் அல்லது பிரதமர் ஆவார். ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து கொண்டிருந்தார். விவசாயிகள் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது ஆனால், விவசாயிகளுடன் அரசு. 11 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதற்கு என்ன காரணம்?!

விவசாயிகளின் கோரிக்கையில் முதன்மையானது - விளைபொருட்களுக்கு நிர்ணியிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை ( MSP ) உறுதி செய்துவந்த அந்த பிரிவை மீண்டும் மசோதாவில் கொண்டு வரவேண்டும் என்பதுதான்! ஆனால், மத்திய அரசு இதுறித்து எந்த உறுதியையும் தரவில்லை. அதனால்தான் 11 முறை நிகழ்ந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது!

ஆனால் விவசாயிகள் அசரவில்லை. போராட்டத்தை தொடர்ந்தனர். ஜனநாயகத்தின் அடையாளமாக உலக அரங்கில் பேசப்படும் இந்தியத் திருநாட்டில், குடியரசு தினத்தன்று டில்லி நோக்கி பேரணியை அறிவித்தார்கள் விவசாயிகள். அதாவது குடியரசு தினத்தன்று ராணுவ அணிவகுப்பு நடக்கும் அதேநேரத்தில், அரசுக்கு எதிராக விவசாயிகள் மாபெரும் டிராக்டர் அணிவகுப்பை நடத்தினார்கள்.

அதாவது ஒரு தேசத்தின் ராணுவ கட்டமைப்பைவிட வேளாண்மை கட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்த இந்த தருணத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதாவது ஆட்சியாளர்களின் அதிகாரத்தை விட, உழைக்கும் விவசாயிகளின் வலிமை பெரிது என்பதை மறைமுகமாக வெளிச்சம் போட்டுக்காட்டியது இந்த டிராக்டர் பேரணி!

சுமார் 2.5 லட்சம் டிராக்டர்கள். ஆண், பெண், முதியவர்கள் என்று வித்தியாசமின்றி டில்லியை நோக்கி வரத் தொடங்கினர்!. ஏற்கனவே விவசாய மசோதா விஷயத்தில் மத்திய அரசை குட்டிய சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தில் சற்று விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருர்ந்தது. இப்படி ஒரு பேரணியை அதிகார வர்க்கத்திற்கு எதிராக நிகழ்த்தினால் நிச்சயம் வன்முறையை கிளறி திசைதிருப்ப அதிகாரவர்க்கம் முயலும் என்பதை முன் அனுபவங்கள் மூலம் கணித்த போராட்ட குழுவினர் ஒரு ராணுவ ஒழுங்கை தமக்குள் கடைபிடிக்கத் தொடங்கினர்.

3000 த்திற்கும் அதிகமான தன்னார்வ தொண்டர்கள் உருவாகினார்கள். இவர்கள் அனைவரும் சிறுசிறு குழுக்களாக பிரிந்து அணிவகுப்பை ஒழுங்குப்படுத்தினர். அவர்களுக்குள் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் செய்து கொண்டனர். டிராக்டரிலும் ஒரு ஒழுங்கை கடைபிடித்தனர். விவசாயத்தின் மாண்பை உணர்த்தும் வகையில் விவசாய சங்க கொடியையும் தேசத்தின் மதிப்பை உணர்த்தும் வகையில் தேசியக் கொடியையும் தங்கள் டிராக்டர்களில் கட்டிக்கொண்டு முழு அமைதியுடன் பேரணி தொடங்கியது.

இந்த ஒழுங்குதான் அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தத் தொடங்கியது. இந்த பேரணியை எப்படி குலைக்கலாம் என்று திட்டமிடத் தொடங்கியது. ஜனநாயக சக்கரத்தின் முக்கிய அங்கமாக இருப்பது காவல்துறை. மக்களை பாதுகாக்கவும் அவர்களை வழிகாட்டவும் உருவாக்கப்பட்டுள்ள காவல்துறை பெரும்பாலும் அரசின் ஏவலாக மக்களுக்கு எதிராகவே அடக்குமுறைகளை அவிழுத்து விடுவது வரலாறு.

நேற்றைய (ஜனவரி 26) சம்பவத்திலும் அதுதான் நடந்தது!

விவசாயிகள் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவை அனைத்தும் சம்யூக்த் ஏக்த மோர்ச்சா என்ற ஒரே அமைப்பின்கீழ் திரண்டு நின்றன. இதுபோன்ற போராட்டங்களின்போது அதிகாரவர்க்கம் அடக்குமுறைகளை ஏவி, வன்முறை சாயம் பூசி போராட்டங்களை நீர்க்கசெய்வது ஆட்சியாளர்களின் இயல்பு. இதனை நன்கு உணர்ந்தவர்கள் சீக்கியர்கள். ஜாலியான் வாலாபாக் முதல் அவர்கள் சந்தித்த அனுபவங்கள் ஒன்றா..இரண்டா?! அதனால் மிகவும் விழிப்புணர்வுடன் ஒழுங்குமுறையுடன் ஆரம்பித்தது பேரணி.

அங்கே பிரதமர் தலைமையில் குடியரசுதின அணிவகுப்பு நடந்துகொண்டிருகும் சூழ்நிலையில் சுமார் இரண்டரை லட்சம் டிராக்டர்கள் ஒரு கோடிக்கு நெருக்கமான விவசாயிகள் என போராட்ட குழுவினர் டில்லி நோக்கி நகர்ந்தனர்.

அரசின் அணிவகுப்பை இந்த போராட்ட அணிவகுப்பு மிஞ்சினால் அது அரசுக்கு அவமானம். மேலும் இன்னும் மூன்று மாதங்களில் ஐந்து மாநில தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரியும் தரும் முடிவுகள் அடுத்த 2024 ல் மத்திய அரசில் பிரதிபலிக்கும். எனவே இந்த டிராக்டர் பேரணி மத்திய அரசுக்கு பாதிப்பை எற்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பல தடைகளை ஏற்படுத்த தொடங்கியது மத்திய அரசு.

தன் கட்டுபாட்டில் இருக்கும் டில்லி போலிஸை ஏவி முதலில் சாலைகளில் பல தடைகளை உருவாக்கியது. பெரிய பெரிய டிராக்டர்களிலும் லாரிகளிலும் மணல் மூட்டைகள் நிரப்பபட்ட அவை சாலைகளின் குறுக்கே நிறுத்தப்பட்டன

பொக்லைன் போன்ற மணல் அள்ளும் இயந்திரங்கள் ஆணிகள் நிறைந்த வேகத்தடைகள், தடுப்புவேலிகள் என பல அடுக்குகளில் தடைகள் தொடர்ந்தன. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக பொறுமையாக அகற்றியபடியும் பேரணி நடத்த தங்களுக்கு உள்ள சட்டப்பூர்வமான அனுமதியையும் காண்பித்து விவசாய அமைப்பினர் தங்கள் பேரணியை ஆரம்பித்தனர்.

இத்தனை அமைதியான அணுகுமுறை போலீஸார் எதிர்பார்க்கவில்லை. அந்த பகுதியின் இண்டர்நெட் மற்றும் கைப்பேசி சேவைகளை முற்றிலும் துண்டித்தனர். இதன் மூலம் 3000 ஒருங்கிணைப்பாளர்களுக்குள் தகவல் பரிமாற்றம் தடுக்கப்படும். அதன்மூலம் பேரணியில் சுணக்கம் ஏற்படும் என்பது போலீஸின் எதிர்பார்ப்பு. ஆனால் முன்பே இதனை கணித்திருந்த போராட்ட குழுவினர் சமிக்கை மூலம் மாற்று ஏற்பாட்டை யோசித்து இருந்ததால் இதனாலும் தடை ஏற்படவில்லை. பேரணி டில்லியை நெருங்க நெருங்க போலீசுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் பதட்டம் ஏற்பட்டது. எப்படியாவது இந்த பேரணியை குலைக்கவேண்டும் என்ற நோக்கமுடன் முன்பே போட்டிருந்த திட்டப்படி விவசாயிகள் மத்தியில் மறைந்திருந்த காவல்துறையினரும், வழியெங்கும் மறைவிடங்களில் இருந்த போலிஸாரும் கண்ணீர் குண்டுகளையும், நீர்கருவிகளையும் கொண்டு விவசாயிகளை தாக்கத் தொடங்கினர். இதில் விவசாயிகள் சற்று தடுமாறினார்கள்.

முதல் வரிசையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கவிழ்ந்ததால் இதில் பயணித்த விவசாயி ஒருவர் பலியானர். தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் மறைந்திருந்த போலிசார் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுப்படுகிறது. சற்று நேரம் அந்த பகுதியே போர்களமானது. இந்த குழப்பத்தின் ஒரு பகுதியாக செங்கோட்டையில் சீக்கிய கொடி ஏற்ற முயற்சிக்கப்பட்டது! இந்த போராட்ட வன்முறையில் 22-க்கும் அதிகமான விவசாயிகள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் போலீஸ் தரப்பில் 30க்கும் மேற்பட்டோர் காயமுற்று சிகிச்சையில் உள்ளதாக செய்திகுறிப்புகள் கூறுகின்றன. ஒரு காணொலியில் கலவரக்காரர்களிடம் சிக்கிக்கொண்ட போலீஸ்காரர் ஒருவரை விவசாயிகள் அரணாகப் பாதுகாத்து போலீசாரிடம் விவசாயிகள் ஒப்படைக்கும் காட்சி வைரலாகிவருகிறது. இதன் மூலம் போராட்டாக்காரர்கள் கண்ணியமானவர்களாகவே நடந்துகொண்டனர் என்பது விளங்கும்.

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் மக்களால் ஏற்படுத்தப்பட்ட அரசு, அதே மக்களை துன்பத்தில் ஆழ்த்தும்போது அங்கு ஜனநாயகம் கேள்விகுறியாகியாகிறது! வேளாண் மசோதா விஷயத்திலும் அதுதான் நடக்கிறது! இந்த விஷயத்தில் மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக செயல்படுவதை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் சாதகமாக முடிவெடுக்க வேண்டும் என்பதே சராசரி பொதுமக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :