• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

இதுதான் தேவை!


அமரர் கல்கி

கல்கத்தாவிலிருந்து ஒரு திடுக்கிடும் செய்தி இன்று வந்திருக்கிறது. ஸ்ரீமான் கிஷோர் முஜும்தார் என்னும் 70 வயது பென்ஷனருக்கு ஏழு பெண்கள். அவர்களில் மூன்று பேருக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. மற்ற நான்கு பேருக்கும் முறையே 22, 20, 18, 16 என்று வயதாகிறது. அவர்கள் நான்கு பேரும், கல்யாணமாகாத மனத்தாங்கலால் அபினை வாங்கிக் குடித்துவிட்டனர். அவர்க ளில் மூவர் இறந்துவிட்டனர்.

இந்தச் செய்தியை ஸ்ரீமான் பச்சாத்தாபம் படித்ததும் “த்ஸோ, த்ஸோ” என்று கூறிவிட்டு மேல் பக்கத்தைப் புரட்டினார்.

அதையே ஸ்ரீமான் கோழை மனம் படித்தபோது “ஐயோ பாவம்!” என்றார். அவர் கண்ணில் ஜலம் ததும்பிற்று.

ஸ்ரீமான் முரட்டு வைதிகம், “கலி! கலி! அத்தனை வயது வரை பெண்ணை வைத்துக் கொண்டிருந்தால்...?” என்றார்.

ஸ்ரீமான் நாஸ்திகம், “எல்லாம் மதத்தால் வரும் ஆபத்துதான்” என்று விளக்கினார்.

ஸ்ரீமான் சமூக சீர்திருத்தம், “அடுத்த பிரசங்கத்தில் இதைப் பற்றிக் கட்டாயம் பேசிவிட வேண்டும்” என்று தீர்மானித்துக் கொண்டார்.

இதைப் படித்தோ, படிக்காமலோ இலங்கை சட்டசபை அங்கத்தினர் ஒருவர், இதுபோன்ற துக்க சம்பவங்களுக்குக் காரணமான வரதஷிணையை ஒழிக்க முனைந்திருக்கிறார். அவர் இலங்கை சட்டசபையில், “வரதஷிணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டவிரோதம், அப்படிக் கொடுக்கல் வாங்கல் செய்பவர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று ஒரு மசோதா கொண்டுவரப் போகிறாராம்.

மேற்கூறிய ஸ்ரீமான்கள் எல்லாரையும்விட இந்த இலங்கை நண்பர் காரியவாதி என்பதை அறிந்துகொள்கிறோம். ஆனால் இப்படிச் சட்டம் போட்டுவிட்டால் மட்டும் எதிர்பார்க்கும் தன்மை விளைந்துவிடாது. ஏன் என்று கேட்டால் அதற்கு ஓர் உதாரணம் சொல்லி விளக்கலாம்.

ஸ்ரீமான் கன்னிகாதானத்திற்கு ஒரு பெண் இருக்கிறாள். ஸ்ரீமான் சம்பந்திக்கு ஒரு பிள்ளை இருக்கிறான். கன்னிகாதானத்தின் பெண்ணை சம்பந்தியின் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொடுக்க வரும்போது ஸ்ரீமான் சம்பந்திக்கு வரதஷிணை வாங்க ஆவலிருந்தும், சட்டம் அதற்குக் குறுக்கிடு வதாயிருந்தால் அவர் என்ன செய்கிறார்? வரதஷிணை என்று ரூபாயாக வாங்காமல் ‘சட்டத்தை’ ஏமாற்றி, பிள்ளைக்கு வைரக் கடுக்கன், வெள்ளி சாமான், மோட்டார் கார், ஏன்... உலக யாத்திரைக்கு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பெனி டூரிஸ்ட் டிக்கெட், இதுபோன்ற எத்தனையோ வழிகளில் வசூலித்துக்கொள்ளலாமல்லவா? அப்பொழுது, ஸ்ரீமான் கன்னிகாதானத்திற்கு என்ன தோன்றும்? ‘நாசமாய்ப் போச்சு! ஒரு பாடாக வரதஷிணை என்று ஏதோ ரொக்கமாகக் கொடுத்து ஒழிப்பதே நலம். இப்படி தினுசு தினுசாகக் கொள்ளை கொடுப்பதைவிட’ எனத் தோன்றாதா?

வரதஷிணை என்னும் தீமைக்கு மூலகாரணம், பெண்களுக்குச் சொத்து ரிமை இல்லாமலிருப்பதுதான். அத்துடன் பெண்களைக் கலியாணமாகாமல் வைத்திருக்கக்கூடாது என்ற சாஸ்திரமும், மாப்பிள்ளை கிராக்கியும் சேர்ந்து, அந்த வழக்கத்தை மிகக் குரூரமானதாய் ஆக்குகின்றன. பெண்களுக்குப் பிதிரார்ஜித சொத்தில் சம்பாகம் கொடுத்துவிட்டால், வரதஷிணை உடனே ஒழிந்துவிடும். அதனால் வேறு பல நன்மைகளும் உண்டு.

1. வரன் தேடுவதிலும், கலியாண நிச்சயம் சம்பந்தமான பேரங்களிலும் இப்போது ஏற்படும் கால விரயமும், பண விரயமும் மிச்சமாகும். பெண்ணின் சொத்து நிலைமைக்கேற்ப வரன்கள் சுலபமாய்க் கிடைத்துவிடும்.

2. இப்போது ஸ்ரீமான் கன்னிகாதானமும் ஸ்ரீமான் சம்பந்தியும் ஒருவர் பணத்தை ஒருவர் விரயம் செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கி றார்கள். அப்போது சொத்தைக் காப்பதில் இருவருக்கும் சிரத்தையிருக்கும்.

3. எவ்வளவு வரதஷிணை கொடுத்தாலும், இப்போது பெண்களுக்குப் புக்ககத்தில் கௌரவம் கிடையாது. சொத்துள்ள பெண்களைப் புக்ககத்தில் கௌரவமாய்த்தான் நடத்துவார்கள். வாழ்க்கையிலும் அவர்களுக்குக் கௌரவம் ஏற்படும்.

ஆகவே, வரதட்ஷிணையை ஒழிக்க விரும்புகிறவர்கள் முதலில் செய்ய வேண்டிய சட்டம் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுப்பது. அடுத்தபடியாக, பெண்களுக்குக் குறிப்பிட்ட வயதுக்குள் கல்யாணம் ஆகிவிட வேண்டும் என்ற மூடக்கொள்கை மாறவேண்டும். இஷ்டப்பட்டால் அவர்கள் கல்யாணம் செய்துகொள்ளாமலே கண்யமான தொழில்கள் செய்து சுதந்திர ஜீவனம் நடத்துவதற்குப் பொதுஜன அபிப்பிராயம் இடந்தரவேண்டும்.

அத்தகைய நிலைமை ஏற்படும்போது வரதஷிணைத் தீமை தானே சொல்லிக் கொள்ளாமல் போய்விடும். அதை உபசரித்து வழி அனுப்ப வேண்டிய அவசியங்கூட இராது.

- கல்கி களஞ்சியத்திலிருந்து... வானதி பதிப்பகம்

Comments

கேஆர்எஸ். சம்பத் says :

கல்கி அவர்களின் யோசனைகள் பல ஆண்டுகளுக்கு முன் கூறப்பட்ட தீர்க்க தரிசன வார்த்தைகள். அவர் கூறியபடித்தானே இன்று உள்ளது. ஆச்சரியம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :