• GLITTERS | பளபள

சசிகலா என்றாகிய சின்னம்மா!


கட்டுரை: சீனியர் ஜர்னலிஸ்ட் ஜாசன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறைதண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்ற சசிகலா, தண்டனைக் காலம் முடிந்ததையடுத்து நாளை மறுநாள் (ஜனவரி 27) விடுதலையாகிறார்.

தற்போது கொரோனா தொற்று மற்றும் நிமோனியாக் காய்ச்சல் காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் சசிகலா. அவர் நன்கு குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சசிகலா நாளை மறுநாள் (ஜனவரி 27) அதிகாரபூர்வமாக விடுதலையானாலும்கூட, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியே வர குறைந்தது 10 நாட்கள் ஆகும் எனப்படுகிறது. அதன்பிறகு மேலும் 15 நாட்கள் அவர் தனிமைப் படுத்தப் படுவார்

ஆகவே பேரறிஞர் அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் தேதி பெங்களுருவில் இருந்து சசிகலா சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது முதலில் அவர் மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடம் மற்றும் தஞ்சையில் நடராஜன் நினைவிடம் ஆகியவற்றுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் வருகை தொடர்பாக, தமிழக அரசியலில் பல்வேறு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அவர் மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று தேமுதிக கட்சியின் சார்பாக பிரேமலதா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் சசிகலாவால் பலனடைந்த பல அரசு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும்கூட சசிகலா தமிழகம் வந்தபின் அவரை சந்திக்க விரும்புவதாக தகவல்கள் கசிகின்றன.

தமிழக அரசின் மக்கள் தொடர்புத் துறை அதிகாரியாக இருந்த நடராஜனின் மனைவி சசிகலா, எப்படி தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக சின்னம்மாவாக விஸ்வரூபம் எடுத்தார்?! இப்போது மறுபடியும் எப்படி சசிகலாவாக மாறிப் போனார்?!

தியாகத் தலைவி சின்னம்மா என்று அழைக்கப்பட்டவர் இன்று சசிகலா ஆகிவிட்டார் சட்டசபையில் ’’என்னை வாழவைத்த தெய்வம் சின்னம்மா’’ என்று சொல்லி உரையை துவக்கியவர்கள், இன்று ’’சசிகலா என்னை அமைச்சர் ஆக்கவில்லை’’ என்று பேசத் தொடங்கிவிட்டார்கள்.

சசிகலா அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு அடுத்து ஆளுமைமிக்க தலைவியாக.. ஏன், சில சமயம் ஜெயலலிதாவை விட கூடுதல் செல்வாக்குள்ள தலைவியாக வலம் வந்தவர். "சின்னம்மாவை பார்த்தால் காரியம் முடிந்து விடும்" என்ற பேச்சு அப்போது மிகப் பிரபலம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சொத்துக் குவிப்புத் தீர்ப்பு வெளியானதும் சசிகலா தன்னுடைய அக்கா மகன் டிடிவி தினகரனிடம் கட்சிச் சின்னம் மற்றும் ஆட்சியை ஒப்படைத்துவிட்டுத்தான் சிறைக்குச் சென்றார் சசிகலா.

ஆனால் தினகரனால் அதிமுக-வை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து கட்டிக் காக்க முடியவில்லை என்பதே உண்மை!. சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட மன்னார்குடி குடும்ப வாரிசுகள் யாரையும் தினகரன் அருகில் சேர்க்கவில்லை! மொத்த கட்சியையும் தன் ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் தினகரன் கொண்டு வர முயற்சித்து தோல்வியே கண்டார். அதிமுக-வில் அவருக்குப் பக்கபலமாக இருந்த வெற்றிவேலையும் அவர் இறப்பதற்கு 6 மாதம் முன்பு ஒதுக்கி வைத்திருந்தார்

சின்னம்மா ஜெயிலுக்குப் போனாலும் அவரால் பதவியில் அமர்த்தி வைக்கப்பட்டவர்கள் தனக்கு ‘ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள்’ ஆக விசுவாசமாக இருப்பார்கள் என்று தினகரன் நம்பினார். ஆனால், காட்சிகள் வெகுவேகமாக மாறி, எடப்பாடி முதல்வரானார். பின்னர் அவர் அத்தனை அமைச்சர்களையும் தனது ஸ்லீப்பர் செல் ஆக்கிவிட்டார்.

இவ்வாறு ஆனதற்கு என்ன காரணம் என்று கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். தினகரனுக்கு சசிகலா என்ற பிராண்ட் தேவைப்பட்டதே தவிர, சசிகலாவையே அல்ல! அதனால்தான், தினகரன் தான் புதிதாகத் தொடங்கிய கட்சியின் லெட்டர் பேடில்கூட சசிகலாவின் படத்தைப் போடவில்லை!

தனது அரசியல் ஆதாயத்திற்காக 500 கார்கள் பவனியுடன் சசிகலாவை ஜெயலலிதா சமாதி, தலைமை கழகம், போயஸ்கார்டன் என்றெல்லாம் அலைக்கழித்ததன் மூலம் பொதுமக்களுக்கு சசிகலாவின் மேல் கூடுதல் வெறுப்பு ஏற்பட வழிவகுத்தது. அதிமுகவை பொறுத்தவரை ஒருகட்டத்தில் சசிகலாவை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்கள் தினகரன் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால் தினகரனை சசிகலா ஒதுக்கி வைக்காதது – அவரைக் கட்சி ஒதுக்கக் காரணமாகி விட்டது!

இன்றைக்கு திடீரென ’’நமது எம்ஜிஆர்’’’ நாளிதழில் தியாகத் தலைவி சின்னம்மா என்று கட்டுரை எழுத வைத்திருக்கிறார் தினகரன் ஆனால், சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்டு அரசியலுக்கு இழுத்து வரப்பட்ட தினகரன் அவருக்கு எதுவுமே செய்யவில்லை. குறைந்தபட்சம்- சசிகலாவின் முன்கூட்டிய விடுதலைக்குக்கூட முயற்சிக்கவில்லை! ஆனால் தன் கட்சியை திமுக-வுடன் இணைக்க வேண்டி டெல்லி சென்று பிஜேபி-யுடன் மல்லுகட்டினார்.

தற்போது சசிகலா விடுதலையாகி வந்ததும் அவரை கொடைக்கானல் அல்லது குற்றாலத்தில் அவருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்க வைக்க ஏற்பாடு நடக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தீவிர அரசியலுக்கு சசிகலாவின் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை.

இதை உணர்ந்ததால்தான், சசிகலாவால் பதவி சுகம் கண்டவர்கள் அனைவரும் இப்போது வசதியாக அவரை மறந்து போனார்கள். இன்று சென்னையில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ’’சிறையிலிருந்து வெளிவரும் சசிகலாவிடம் அதிமுக-வை ஒப்படைப்பதா வேண்டாமா என்று ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும்தான் முடிவெடுக்க வேண்டும். நான் அவைக்கு மட்டுமே தலைவர்’’ என்று பேட்டியளித்தார் மதுசூதனன்.

கட்சிக்குள் சர்வ வல்லமையுடன் சிம்ம சொப்பனமாக வலம் வந்த சின்னம்மா, இப்போது சசிகலாவாக மாறிப் போனது இப்படித்தான்! அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!

Comments

ஆா்.நாகராஜன் says :

ஆயிரமே இருந்தாலும் சசிகலா வருவதால் அதிமுக பிளவுபடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :