• SPARKLES | மினுமினு

சேவலுக்கும் சட்டம் உண்டு


ஜி.எஸ்.எஸ்.

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் ஒரு வினோத வழக்கு ஒன்று பரபரப்பாகப் பேசப்பட்டது. மேற்கு பிரான்ஸில் இருக்கும் இலி டோலெரேன் என்ற தீவில் வசிக்கும் ஒரு முதிய தம்பதி, தன் பக்கத்து வீட்டுக்காரர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் மௌரீஸ் என்ற சேவல், தினமும் அதிகாலையில் காட்டுக் கத்தலாகக் கூவித் தொல்லைத் தருவதாகப் புகாரிட்டனர்.

இரண்டு வருடங்களுக்கு இதுகுறித்து இரு வீட்டினரும் தகராறு செய்தபடி இருந்தனர்.அது ஒரு கட்டத்தில் மிகவும் முற்றிப் போக, பக்கத்து வீட்டுக்காரர் மீதும் அவர் வளர்த்த சேவல் மீண்டும் வழக்கு தொடுத்தனர் அந்த வயதான தம்பதி.

`இந்த வயதான காலத்தில் எங்களை அமைதியாக தூங்கவிடாமல் மெளரிஸ் கூவி அதிர்ச்சி கொடுக்கிறது. இந்தக் கூவலை சுற்றுப்புறத்தை மாசு படுத்துவதாக கருதி எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதுடன் சேவல் அமைதியாக இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்று தங்கள் வழக்கில் குறிப்பிட்டார்கள் முதிய தம்பதி.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதை அறிந்ததும் ஊடகங்கள் இதை தலைப்புச்செய்தி ஆக்கின. செல்லப்பிராணிகள் வைத்திருந்த பலரும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

விசாரணை நாளின்போது வழக்கு தொடுத்தவர்கள் நீதிமன்றத்திற்கு வரவில்லை. மாறாக அவர்கள் வழக்கறிஞர் வந்து சேர்ந்தார். சேவலின் கூவல் மிக அதிக டெசிபல் கொண்டதாக இருக்கிறது என்றார். சமூக வலைத்தளங்கள் சேவலுக்கு ஆதரவாகவே இருப்பதால் வாதிகள் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றார்.

மெளரிஸை அதன் சொந்தக்காரர்கள் நீதிமன்றத்துக்கு எடுத்து வரவில்லை. ஆனால் சேவல் வளர்க்கும் பலரும் தங்கள் சேவல்களோடு நீதிமன்ற வாசலுக்கு வந்து குவிந்தார்கள். மெளரிஸுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று குரல் எழுப்பினார்கள். தங்கள் ஆதரவை எழுத்துப்பூர்வமாகவும் நீதிமன்றத்துக்கு அனுப்பினார்கள்.

வழக்கை விசாரித்த நீதிபதி `சேவலுக்கு யாரும் குறைந்த குரலில் கூவுவதற்கு பயிற்சி கொடுக்க முடியாது. கூவுவது என்பது சேவலின் இயல்பு. அதற்குத் தடை விதிக்க முடியாது. இந்த வழக்கின் மூலம் சேவலின் சொந்தக்காரருக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு அந்த முதிய தம்பதிகள் நஷ்ட ஈடு தர வேண்டும்` என்று கூறினார்.

ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு விலங்குகள் இருக்கும். மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் அங்கே வாழ உரிமை உண்டு. அவற்றைக் கட்டுப்படுத்துவது என்பது தவறான செயல். எனவே அந்த பகுதிகளின் விலங்கு ஓசைகளைப் பாதுகாக்கும் வகையில் தனது நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவிலும் விலங்குகள் நலனுக்காக பல சட்டங்கள் உண்டு. இது தொடர்பான சில சுவையான வழக்குகளைப் பார்க்கலாம்.

திரைப்படங்களில் ஏதாவது விலங்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை திரையிடுவதற்கு முன் விலங்கு நல வாரியத்திடமிருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் - அந்தப்படத்தில் எந்தவிதத்திலும் அந்த விலங்கு துன்புறுத்தப்பட வில்லை என்று. 2001 இல் இருந்து இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

நுகர்வோர் நீதிமன்றம் ஒன்றில் ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார். அவர் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் நாய்கள் செல்ல மின்தூக்கிகளைப் (லிஃப்ட்) பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு விதியை அறிமுகம் செய்தனர். இதற்கெதிராக அவர் வழக்குத் தொடர்ந்தார். தீர்ப்பு அவருக்குச் சாதகமாக வந்தது. “அந்த நாயை வளர்ப்பவர் ஒரு நுகர்வோர் அவர் அந்த அடுக்குமாடி கட்டட சொசைட்டியில் ஒரு உறுப்பினர் என்பதால் நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் தாராளமாக வழக்கு தொடுக்கலாம்” என்று கூறியது நீதிமன்றம்.

தவிர “அந்த நாய் லைசன்ஸ் பெறப்பட்ட ஒன்று. அது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான சான்றிதழை மும்பை கால்நடை கல்லூரி வழங்கியதாலும் அடுக்குமாடி கட்டிடங்களில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு தடை கூறக்கூடாது என்றும் அந்த செல்லப் பிராணிகளை மின்தூக்கி எடுத்துச் செல்ல தடை விதிக்கக் கூடாது” என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

நம் நாட்டின் சட்டப்படி ஆடுகளையும் கோழிகளையும் இறைச்சிக்காக கொல்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றைக் கொல்வதற்காக எடுத்துச் செல்லும்போது அவற்றை குரூரமான முறையில் கையாளக்கூடாது என்பதையும் சட்டம் கூறுகிறது. ஒரு வழக்கில் ஆடுகளின் சொந்தக்காரர் அவற்றை மிக இறுக்கமாக கட்டி ஒரு வண்டியில் எடுத்துச் சென்றார். இது சட்டப்படி தவறான ஒன்று. எனவே அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு முடியும் வரை அந்த ஆடுகள் மாநில அரசின் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. அதாவது விலங்குகளை மனிதாபிமானம் இல்லாமல் நடத்திய ஒருவரிடமே வழக்கு முடியும்வரை அந்த விலங்குகளை அளிக்கக்கூடாது என்றது நீதிமன்றம்.

அந்தக்கால சர்க்கஸ்களில் புலிகள், குரங்குகள் போன்றவை பலவித சாகசங்களில் ஈடுபட்டு மக்களை களிப்படையச் செய்ததுண்டு. ஆனால் இதற்கு எதிராகச் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் சட்டமியற்றி விட்டது. இதன்படி கரடிகள், குரங்குகள், புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள் காட்சிக்காக வைப்பதும் அவற்றுக்குப் பயிற்சி அளித்து வித்தை காட்டவும் தடை விதிக்கப்பட்டது. யாரும் தனக்கு விருப்பப்பட்ட வணிகத்தை செய்யலாம் என்ற அடிப்படை உரிமையை அரசியலமைப்பு குடிமக்களுக்கு கொடுத்திருக்கிறது என்று வாதி வாதிட்டார். ஆனால் இந்த செயல்பாடு மிருகங்களுக்கு வேதனையை அளிக்கிறது என்பதால் இந்த உரிமை ஏற்கப்பட மாட்டாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

அது விலங்குகள் ஐந்தறிவு கொண்டவைதானே என்பதால் அவற்றை அலட்சியமாக நடத்துவதோ அவற்றுக்கு தீங்கு செய்வதோ மனிதாபிமானமற்ற செயல் என்பது மட்டுமல்ல, அது சட்டப்படி தவறு என்பதையும் நாம் உணர வேண்டும். அதே சமயம் தங்கள் செல்லப்பிராணிகள் மற்றவர்களுக்கு பயத்தையோ அல்லது தேவையற்ற இடையூறையோ செய்து விடாமல் அவற்றின் உரிமையாளர்கள் பார்த்துக்கொள்வதும் அவசியமாகிறது.

மேலே உள்ள படத்தில் மௌரிஸ் சேவலுடன், அதன் உரிமையாளர்.

கீழ்படம்: வெற்றிக் களிப்பில் உற்சாகமாய் கூவும் மௌரிஸ்!
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :