• SPARKLES | மினுமினு

லட்டு மரம்!


சிறுகதை: நிலா

மீரா, காலை கண் விழிக்கும்போது, அம்மாவின் சாம்பார் மணம். மூக்கில் முட்டி, மணத்தது, அவசரமாய் எழுந்து பாத்ரூம் ஒடி பல் தேய்த்துவிட்டு, கிச்சனுக்குள் நுழைந்தாள் மீரா. அம்மா புடவையில் முகம் துடைத்து, அவள் தந்த காபியை குடித்ததும் ஹாலுக்கு வந்தாள்.

சிவராமன், காமாட்சி, தம்பதியரின் கடைகுட்டி மகள்தான் மீரா. வயது 7. நாலாவது வாரிசு! வீட்டின் முடி சூடா இளவரசி!

அப்பா காய்கறி வாங்கக் கடைக்குச் செல்ல தயாராக, பையை எடுத்து கொண்டிருந்தார். மீராவைப் பார்த்ததும், “அப்பா கூட காய்கறி கடைக்கு வரியா?” கூப்பிட்டார்.

“நான் வந்தா எனக்கு லட்டு வாங்கி தருவியா?’’ – மீரா கேட்க, அம்மா, சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

“அய்யோ, அந்த சேட் கடை லட்டு வாங்கி தந்து, வயிறு கெட்டுபோகும், பாதி டால்டா, எண்ணெய் போட்டு செஞ்சிருப்பான், அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அதான் வீட்டுலயே நான் பண்ண மைசூர்பாக், இருக்கே, அது போதும் எதுக்கு வீண் செலவு!’’ என்றாள் அம்மா.

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மீராவின் இன்றைய அவஸ்தை அம்மாவுக்குப் புரியவில்லை! மீராவின் அவசரத் தேவை லட்டு, அதை எப்படிப் புரிய வைப்பது?!

அடுத்த நாள்..

ஸ்ரீ ராமுலு கவர்ன்மெண்ட் ஸ்கூல் என்ற பலகையைத் தாங்கி நின்ற பள்ளிக்கூடத்துக்குள் மீரா நுழையும்போதே, அவளை சிநேகமாக வரவேற்றனர் வாடிக்கை நண்பர்களான முனியம்மா, லக்ஷ்மி, இப்ராஹிம் மற்றும் பள்ளிக்கு புது வரவான பெனாசீர்.

பெனாசீரின் பளபளவென மின்னிய பிங்க் செருப்பை அதிசயித்தவாறே, தனது இருப்பிடத்துக்குச் சென்று லஷ்மி அருகில் அமர்ந்தாள் மீரா. பள்ளியில் பெஞ்ச், டேபிள் எல்லாம் கிடையாது! கட்டாந்தரையில் போடப்பட்ட மரப் பலகைகள்தான்! வகுப்பு ஆசிரியர் பழனிச்சாமி இன்னும் வந்திருக்கவில்லை.

ஆறு பெண்களும் ஏழு ஆண்களும் கொண்ட அந்த வகுப்பு சல சலவென அரட்டை ப்ரதேசமாக இருக்க, பெனாசீர் எப்போது லட்டு டாபிக்கை எடுக்கப் போகிறாளோ என்று திக்கென்று இருந்தது மீராவுக்கு!

விஷயம் வேறொன்றுமில்லை! பெனாசீர் எப்போதும் ஆரஞ்சு மிட்டாய் அதுஇதுவென்று தினமும் ஏதாவது எடுத்துவந்து வினியோகிக்க, மீராவுக்கு பெனாசீரின் தம்பட்டம் தாங்கவில்லை.

ஒரு வாரம் முன்பு மீரா அந்த கதையை பெனாசீரிடம் அவிழ்த்து விட்டாள். அதாவது, தனது வீடு செல்லும் வழியில் ஒர் லட்டு மரம் இருப்பதாகவும் அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் லட்டு பறித்து கொள்ளலாம் என்றும், அடுத்தவாரம் தான் எடுத்து வருவதாகவும் சொல்லி விட்டாள்.

ஒரு வாரம் ஓடி விட்டது. இன்று லட்டு கொண்டு வந்து கொடுத்தாக வேண்டும். ஆனால் லட்டு இல்லை மீரா பயந்த மாதிரியே ஆனது! மதியம் லன்ச் நேரத்தில் பெனாசீர் கேட்டு விட்டாள்..

“மீரா.. லட்டு எங்கே? மரத்திலே காய்க்கலியா இன்னைக்கு?” – கேலியாகக் கேட்டாள் பெனாசீர்.

மீராவுக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டிகொண்டு வந்தது. “ஏனில்லாமல்? லட்டு மரத்துல இன்னிக்கு மட்டும் 10 லட்டு பறிச்சதில், எல்லாமே காலி! எங்கம்மா வீட்டுக்கு வேணும் வச்சிட்டுப் போ என்றாள் அதனாலதான் கொண்டு வரலை” என்றாள் சமாளிப்புடன்!

இவளின் இந்த சமாளிப்பு புரிந்த ஒரே நபர் அங்கே லக்ஷ்மி மட்டும்தான்.

பெனாசீரோ விடுவதாக இல்லை! “இன்னைக்கு ஸ்கூல் முடிஞ்சு நானும் வரேன். என்னை கூட்டிண்டு போய் அந்த லட்டு மரத்தைக் காட்டு” என்றாள்.

மீராவுக்கு திக்கென்றது. நல்லவேளையாக அவள் பதில் சொல்வதற்குள், ஸ்கூல் மணீயடிக்க, அனைவரும் வகுப்புக்குப் பறந்தனர். “அப்பாடி.. தப்பித்தோம்..” என்று பெருமூச்சு விட்டுகொண்டாள் மீரா.

எப்படியாவது நாளை லட்டு கொண்டுவந்து தந்துவிட்டு, பெனாசீர் இந்த விஷயத்தை இனி கிளறாதபடி தாஜா செய்து முடிவுகட்ட வேண்டும் என நினைத்து கொண்டாள் மீரா.

சாயங்காலம் பள்ளி விட்டதும் இதே யோசனையாய் நடக்கும்போது, அருகில் கரும்பு வண்டி ஒன்று சென்று கொண்டிருந்தது. சில சமயம், பள்ளியிலிருந்து வீடு வரை மாட்டு வண்டி லிஃப்ட் கிடைக்கும். இன்று கரும்பு இறக்கிய வண்டி ஒன்று! பாதி வழி ராமா தியேட்டர் வரை நடக்க வேண்டாம். வண்டியில் ஜாலியாய் உடகார்ந்து போகலாம். மீரா தாவி குதித்து அதில் உட்கார்ந்து யோசனையாய் வர, வீசிய காற்றில் அப்படியே தூங்கி போனாள்.

மீரா கண் விழித்து பார்த்தபோது இருட்டியிருந்தது, எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்க்க அடர்ந்த மரங்கள், சின்னதாய் வெளிச்சம் மறைய தொடங்க இருந்தது. வீட்டுக்கு எப்படி போவது?

பள்ளிப்பையை தோளில் மாட்டியபடி சற்று நடக்க ஆரம்பிக்க, எதிரே பெரிய மரம் ஒன்று கிளைகளைப் பரப்பி நின்றிருந்தது. அதை நன்றாக கவனிக்க, மீரா அதிசயத்தில் வாய் பிளந்தாள்.. பின்னே இருக்காதா?

மரம் முழுதும் மஞ்சள் தங்க நிறத்தில் லட்டுக்கள் தொங்கி கொண்டிருந்தன. மீரா அந்த மரத்தை நோக்கி நகர, மரம் பின்னுக்கு நகர்ந்தது. பார்த்து கொண்டே நின்றதில் அப்பகுதி முழுக்க முற்றிலும் இருள் சூழ்ந்தது.

மீராவின் வீட்டில் ஒரே அமளி..துமளி!

மீராவின் அம்மா கணவரிடம் புலம்பி கொண்டிருந்தாள்.

‘’இந்த பொண்ணோட கவலைபட்டு மாளலை! இன்னிக்கு ஸ்கூல் விட்டதும் மாட்டு வண்டில ஏறி வந்திருக்கா. அப்படியே அதிலேயே தூங்கிருக்கா..வண்டிக்காரனும் கவனிக்காம விட்டுட்டுப் போயிட்டான். நாங்க தேடாத இடம் பாக்கியில்லை! அப்புறம் நம்ம பூக்காரம்மாதான் இவளைக் கண்டுபிடிச்சு எழுப்பி கூட்டிண்டு வந்தாள்.

அப்பவே இவளுக்கு நல்ல ஜூரம். இப்ப பாருங்க.. தூக்கத்துல லட்டு லட்டுனு ஒரே அனத்தல். பொண் குழந்தைய நல்ல விதமா வளர்க்க வேண்டாமா?, அடுத்த வருஷம் ஸ்கூல் மாத்திரலாம். அப்படியே இந்த மாசத்திலிருந்து இவள் ஸ்கூல் போய் வர சைக்கிள் ரிக்ஷா ஏற்பாடு பண்ணிடலாம்’’ என்று கவலையாய் பேசினாள்.

ஒரு வாரம் லீவுக்குப் பின் அன்றுதான் ஸ்கூலுக்கு வந்திருந்தாள் மீரா. அதிசயமாய் பழனி சார் அன்று சீக்கிரமே வகுப்புக்கு வந்து விட்டார். அவர் டிக்டேஷன் கொடுக்க ஆரம்பிக்க, பென்சிலும் புத்தகமும் எடுக்க புத்தகப் பைக்குள் கை விட்டாள் மீரா!

அட.. இது என்ன? ஏதோ டப்பா! பைக்குள் பார்க்க, சிகப்பும் வெள்ளையுமாய் கண்ணில் பட்டது அந்த ஸ்வீட் டப்பா! யாரும் அறியாமல் அதை லேசாய் திறந்து பார்த்தாள் மீரா.

டப்பா முழுதும் குட்டி பந்துகளாய் பொன்னிறத்தில் மின்னின லட்டுக்கள்!
Comments

Jayashree Ts says :

Excellent

கேஆர்எஸ். சம்பத். says :

நல்ல வேளை. ஒரு வழியா லட்டு கிடைச்சுது. பேனாசிர்தான் ஆச்சரியப்படப் போகிறாள்.

bhamathynarayanan says :

how did the laddus come into Meera`s bag...

எம்.சுசீலா says :

எனக்கு கூட சின்ன வயசுல கல்கோனா மரம் ,ஜவ்வு மிட்டாய் மரமெல்லாம் கனவுல வரும்...ஹிஜ்ரி..

Subra balan says :

யார் இந்த நிலா? அழகான கதை. எனக்கும் மாட்டு வண்டிப் பயணமும் கனவில் லட்டு மரமும் வருமோ?

Shyamala Ranganathan says :

கதையும் சூப்பர் லட்டு மரம் படமும் சூப்பர் குழந்தை அனத்தினாளே என அம்மா லட்டு வாங்கி வைத்து விட்டாள்?

R Bala says :

எனக்கு லட்டுன்னா உயிர். விதைப்பு பந்துகள் தூவிட்டு இருக்காங்களே லட்டு மரம் மட்டும் வளர.விதை கிடைச்சிருக்குன்னு பரவாயில்லைன்னு பாபாவை வேண்டும் ஆரம்பித்து விட்டேன் மரம் முழுக்க லட்டுக்களா தாங்ஙல

G.Ravindran says :

Very good short story. Nice ending! Though ,personally, I would have happily settled for Meera`s mother`s Mysore Pak !! Also, would like to take this opportunity to congratulate the management and editorial team of KALKI for being bestowed with TN govt`s award for `best Tamil weekly`

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :