• GLITTERS | பளபள

மருத்துவத்துக்குப் பேரிழப்பு: டாக்டர்.சாந்தாவின் இறப்பு!


ஜி.எஸ்.எஸ்.

சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை என்றதுமே சட்டென்று நினைவுக்கு வருபவர் டாக்டர் சாந்தா. அந்தளவுக்கு புற்றுநோயாளிகளின் நல்வாழ்வுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர் அவர். இன்று (ஜனவரி 19) அதிகாலையில் தன் 93-வது வயதில் டாக்டர் சாந்தா இறந்தது மருத்துவ உலகுக்கு ஒரு பேரிழப்பு!

டாக்டர். சாந்தா எம்பிபிஎஸ் முடித்தபிறகு சிறப்பு மேற்படிப்பாக படித்தது புற்றுநோய் மருத்துவம் அல்ல, மகளிர் நலப் பிரிவு மருத்துவம்தான். காரணம் ஆன்காலஜி எனப்படும் சிறப்புப் புற்றுநோய் மருத்துவம் என்ற பிரிவே அந்த காலகட்டத்தில் கிடையாது. அப்போதெல்லாம் பொது மருத்துவர்களும் சர்ஜன்களும்தான் புற்றுநோய்க்கு மருத்துவம் செய்து கொண்டிருந்தார்கள். ஆன்காலஜி பிரிவு அறிமுகமாவதற்குக் கடும் முயற்சி செய்த சிலரில் டாக்டர் சாந்தாவும் ஒருவர். பத்து வருட போராட்டத்திற்குப் பிறகு தான் இந்திய மருத்துவ குழுவை இதற்கு சம்மதிக்க வைக்க முடிந்தது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் 1954-ல் ஒரு குடிசையாகத் தொடங்கப்பட்டதுதான் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட். வெறும் 12 படுக்கைகள் கொண்ட மிகச் சிறிய மருத்துவமனையாக தொடங்கியது அப்போது அதில் இணைந்தவர்தான் டாக்டர்.சாந்தா. பின்னர் இப்போது இறக்கும்வரை, சுமார் 67 ஆண்டுகள் அந்த மருத்துவமனையே சாந்தாவின் உலகமாகிப் போனது!

ஆரம்பத்தில் அடையாறு கேன்சர் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவும் மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் மட்டுமே பணி செய்தனர். அச்சமயம் டாக்டர் சாந்தா புற்றுநோய் தொடர்பான பலவித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அந்த நோய் குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் பரவியதில் சாந்தாவுக்கு முக்கிய பங்கு உண்டு. நாட்டின் பல பகுதிகளில் இருந்து இங்கு வந்து புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அதற்கான அஸ்திவாரமாக விளங்கியவர் அவர்.

அதனால்தான் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றார் டாக்டர். சாந்தா. ஆசியாவின் உயரிய விருதான் ரமோன் மக்சேசே விருது முதல், இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ வரை அனைத்து விருதுகளும் கிடைக்கப் பெற்றவர்.

அவருக்கு அளிக்கப்பட்ட போது ‘இந்தியாவில் சிறப்பு மருத்துவம் என்பது வணிகமாக மாறி வரும் நிலையில் டாக்டர் சாந்தா அனைவருக்கும் சேவை என்ற குறிக்கோளுடன் செயல்படுகிறார். 87 வயது சாந்தா நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை தருகிறார். அறுவை சிகிச்சைகள் செய்கிறார். 24 மணி நேரமும் மருத்துவ அழைப்புகளுக்குத் தயாராக இருக்கிறார்’ என்று அந்த விருதுச் சான்றிதழில் குறிப்பிட்டனர்.

மரண பீதியோடு வாழும் நோயாளிகளையும் அவர்களது உறவினர்களையும் தினம் தினம் தொடர்ந்து பார்ப்பது என்பதே ஒரு சவாலான விஷயம்தான். இது குறித்து ஒரு நேர்காணலில் கேட்டபோது டாகடர். சாந்தா சொன்ன பதில்:

‘’புற்று நோய் என்பது மிகுந்த வலியைக் கொடுக்கக் கூடியது. அந்த நோயாளிகளிடம் பேசும்போது மிகவும் ஆறுதலான அணுகுமுறை வேண்டும். எனக்கும் அவ்வப்போது கோபம் வரும்தான். ஆனால் நோயாளிகளின் பய உணர்வு காரணமாகத்தான் அவர்கள் சிலவற்றை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது சாந்தம் வந்துவிடும். அவர்களை அணுகும்போது இவர் நம் சகோதரி போல, இது நம் குழந்தை போல என்று எண்ண வேண்டும். நாம் அவர்களுக்குச் செய்யாவிட்டால், யார் செய்வார்கள்?’’ என்றார் கருணை உணர்வோடு. அப்போது அவர் முகத்தில் தெரிந்த பரிவை என்னால் மறக்க முடியாது.

குறிப்பாக பெண்கள் மீது அவருக்குத் தனி கவனம் உண்டு. ‘நம் சமூகம் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஒவ்வொரு பெண்ணுமே தனிப்பட்டவள். வாழ்க்கையில் போராடுபவள். ஏற்கனவே பல பிரச்னைகளை சந்தித்து வருபவள். ஆனால் அவளுக்கு ஒரு நோய் என்றால் உடனடியாக டாக்டரிடம் காட்டுவதற்கோ, மருத்துவமனைக்குச் செல்வதற்கோ அவளது குடும்பம் சுலபத்தில் முன்வராது’ என்று வருத்தப்பட்டார்.

இதற்குத் தீர்வாக சிறுவர் சிறுமியர்களுக்கு இது குறித்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். ’’‘குறைந்தபட்சமாக தங்கள் அம்மாவுக்கு ஏதாவது நோய் என்றால் அவரை டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாவது அவர்கள் மனதில் பதிய வேண்டும் இல்லையா?’ என்றார்.

டாக்டர். சாந்தாவின் ரோல் மாடல் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி! அவ்வப்போது பஜகோவிந்தம், காற்றினிலே வரும் கீதம் பாடல்களை பாடுவது சாந்தாவுக்கு பிடித்த விஷயம்.

டாக்டர் சாந்தாவின் சேவையைப் பாராட்டி, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டிருப்பது பாரட்டுக்குரிய விஷயம்.

Comments

Dr R Parthasarathy says :

ஆக்ரோஷமான, அரக்க குணம் கொண்ட கொடிய நோய்யான, புற்று ,நோய்க்கு, அமைந்த, சாந்தமே உருவான, மதிப்பிற்குரிய, அன்பான மருத்துவ மனிதக் கடவுள் தான், டாக்டர் சாந்தா அவர்கள். 67 வருட சேவை, என் வயது 67, நானும் ஒரு மருத்துவர் தான், எனக்குத்தான் தெரியும அந்த நாயின் வலி, உடல் வலி, யன வலி. அப்பேற்பட்ட வலிக்கு ஒரு மருந்தாக, நிவாரணமாக இருந்த அந்த அன்புள்ளம், அந்த கைகள், அந்த தெய்வ குணம், அந்த கருணை முகம், இன்று நம்மிடையே இல்லை என்பதுதான் நம் வலி. 93 வயதில் அவருக்கும் ஓய்வு தேவைதானே, அத தான் கடவுள் அவர்களை, தன்னுடனேயே இருக்கட்டும் என்று அழைத்தக்கொண்டு விட்டார் போல தோன்றுகிறது, நியாயம்தானே, கண்ணீருடன், அந்த கருணைத் தாய்க்கு, என் மனமார்ந்த அஞ்சலி

Shyamala Ranganathan says :

எல்லோருக்கும் ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென அவர் கூறியது அருமை அவரது அளப்பரிய சேவையை போற்றுவோம்

கேஆர்எஸ். சம்பத் says :

அயராது பணி செய்து வந்த சாந்தா அம்மையார் அவர்கள் மேலும் சாதிக்கவேண்டும் என்கிற நோக்கு இருந்ததாக அறிகிறேன். What a devotion to her profession!!!! இதனையும் தாண்டி நான் அறிந்த மற்றொரு விஷயம் - இவர் மிகவும் நேர்மையாளர் என்று. அவர் ஆன்மா சாந்தி அடையும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :