• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

அரட்டைக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!


அமரர் கல்கி

பேச்சின்பத்துக்கு முதலாவது இன்றியமையாத சாதனம் என்னவென்றால், உங்களுடன் பேசுவதற்குத் தயாராயிருக்கும் மனிதர்கள்தான். தனக்குத் தானே சம்பாஷித்துக் கொள்வதில் இன்பமில்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால், அத்தகையவர்கள் விரைவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரசித்தமான சர்க்கார் விடுதிக்குப் போய்ச் சேர நேரிடும். இந்த விடுதியில் மட்டும், தனக்குத்தானே பேசிக்கொள்ள எல்லோருக்கும் பூரண பாத்யதை உண்டு. மற்ற இடங்களில் சகோதர மனிதர்களுடனே சம்பாஷிப்பதுதான் மரபு.

சகோதர மனிதர்களிலுங்கூட நாம் நினைத்தவர்களோடெல்லாம் பேச முடியாது. உதாரணமாக, முஸோலினி பெரியாருடனும், மகாத்மாவுடனும் சர்ச்சிலுடனும், ஸ்ரீமான் ஹிட்லர்ஜியுடனும், திருவாளர் ரூஸ்வெல்ட்டுடனும் அநேக விஷயங்கள் நமக்குப் பேசுவதற்கு இருக்கலாம். ஆனால், அவர்கள் நம்முடன் பேச வருவார்களா? ஒரு நாளும் முடியாத காரியம். அவர்கள் பேசாமல் நாம் மட்டும் ஒரு தரப்பான சம்பாஷணை நடத்துவதும் உசிதமன்று. இந்தப் பாத்தியதை பத்திரிகாசிரியர்களுக்குத்தான் உண்டு. ‘அடே சர்ச்சிலே!’, ‘ஓ மாக்டனால்டே!’, ‘ஏ ஹிண்டன்பர்க்கே!’, ‘டேய்! சுண்டூர் ராஜாவே!’ என்றெல்லாம் பத்திரிகாசிரயர்கள் கூப்பிட்டு எதிரிகள் பதில் சொல்ல இடமின்றி ஒரு தரப்பாகப் பேசிக்கொண்டு போகலாம். சாதாரண ஜனங்களுக்கு இது எடுத்ததல்ல.

அதுபோலவே, அடுத்தாத்து சேஷிப் பாட்டியும், எதிர்வீட்டு இருமல் தாத்தாவும் இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் உங்களுடன் சம்பாஷிக்க விரும்பலாம். ஆனால் உங்களுக்கு அது விருப்பமாயிராது. ஆகவே, நாம் சம்பாஷிப்பதற்குரிய மனிதர்கள் யார் என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுதுதான் பேச்சிலும் எந்த விஷயத்தைப் பற்றிய பேச்சில் உங்களுக்குப் பிரியம் அதிகம் என்னும் கேள்வி எழுகின்றது. அதே விதமான ருசியுள்ள மனிதர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒரே ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு மட்டும் எல்லோருக்கும் சமமாக ருசிப்பதாகும். இதுதான் சாப்பாட்டையும் சிற்றுண்டியையும் பற்றிய பேச்சு மகாத்மாக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரையில், பரம பாகவதர்கள் முதல் உலகாயதர்கள் வரையில், ஸ்திரிகள், புருஷர்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் அனைவருக்கும் ருசிகரமான விஷயம் பிரஸாத மகிமைதான்.

வேறு விஷயங்களுக்குப் போகும்போது, நமக்குள் ருசி மாறுவதைக் காண்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ருசி. சுப்பண்ணாவுக்கு அரசியல் சமாசாரங்களைப் பற்றிப் பேசுவதென்றால் பிடிக்கும். “என்ன ஸார்! இன்று பத்திரிகையில் விட்டல்பாய் படேல் என்ன போடு போட்டிருக்கிறார் பார்த்தீர்களா?” என்று கேட்பதற்காக, அவர் குப்பண்ணாவைத் தேடிக்கொண்டு செல்கிறார். குப்பண்ணாவுக்கோ அவரைக் கண்டதும் பரம சந்தோஷம். “ஆமாம், மிஸ்டர் சுப்பண்ணா! இந்த சாஸ்திரியும், சாப்ரூவும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கக்கூடாதோ? ஏன் இப்ப உளறு உளறு என்று உளறிக்கொட்டுகிறார்கள்?” என்பதாக ஆரம்பித்துவிடுகிறார். இவ்விருவரும் பேச்சில் புகுந்துவிட்டால், வாயில் ஈ புகுவது தெரிவதில்லை.

ரங்கசாமிக்கு இலக்கியங்களில் பிரேமை. பொன்னுசாமிக்கும் அப்படியே. இருவரும் சந்தித்துவிட்டால் போதும்; கம்பனுடைய பாட்டில் ஓர் அடியில் ஒரு சொல்லின் சுவையைப் பற்றிப் பேசத் தொடங்குவார்கள். அவ்வளவுதான்; புயல், பூகம்பம் இரண்டும் சேர்ந்தால்கூட அவர்களை அந்தப் பேச்சிலிருந்து வேறு விஷயத்துக்குத் திருப்ப முடியாது.

கிரிக்கெட் அபிமானிகள், ரஞ்சி, நாயுடு, படோடி முதலிய திருநாமங்களையும், சினிமா பிரேமிகள் சார்லி, நெவாரோ, ஃபேர்பாங்ஸ் பிக்போர்டு, கோஹர் முதலிய பெயர்களையும் ஜபம் செய்து கொண்டிருப்பார்கள்.

இந்தக் கோஷ்டிகளில், அவரவர்களும் தத்தமக்குரியதைத் தேர்ந்து கொள்ள வேண்டும். இடமில்லாத இடத்துக்குப் போய்ச் சேர்ந்தால் ஆபத்து தான். உதாரணமாக, நீங்கள் இலக்கிய கோஷ்டியைச் சேர்ந்தவரென்று வைத்துக் கொள்வோம். கலிங்கத்து பரணியின் கவிதை இன்பத்தில் நீங்கள் கழுத்துவரை இறங்கி நீந்திக்கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருவர், “ஏன், ஸார்! மலையாளத்திலே மிளகு என்ன விலை?” என்று கேட்டால் உங்களுக்குக் கோபம் வருமா, வராதா?

பேச்சின்பத்தின் முக்கியமான முதல் விதியை இப்போது அறிந்துகொண்டு விட்டீர்கள். மற்ற விதியை இன்னொரு சமயம் பார்த்துக்கொள்ளலாம். என் விதிகளின் உதவியில்லாமலே பேச்சின்பத்தை நீங்கள் அநுபவிப்பதாயிருந்தாலும் எனக்குச் சம்மதந்தான்.

- ‘அதிர்ஷ்ட கவசம்’ நூலிலிருந்து... வானதி பதிப்பகம்

Comments

கேஆர்எஸ். சம்பத். says :

அனுபவித்து ரசித்தேன்.

Bhamathynarayanan says :

good humour writeup...enjoyed very much.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :