• GLITTERS | பளபள

பத்மஸ்ரீ 2020 அறிவிப்பு: விருதுக்குப் பெருமை!


கட்டுரை: எஸ்.கல்பனா

நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவு விருதுகளும் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில் வருகிற ஜனவரி 26-ம் தேதியன்று 72வது குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசு 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

இந்த விருதுகளை ஆண்டுதோறும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சம்பிரதாய விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குவார். இந்த வருடம் மொத்தம் 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன. மற்ற ஆண்டுகளைவிட அதிகபட்சமாக 33 பெண்கள் இந்த விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.

பத்மஸ்ரீ விருதுகளைப் பொறுத்தமட்டில் மற்றொரு சிறப்பம்சம் - விருது பெற்றவர்கள் யாரும் சினிமா நட்சத்திரங்களோ, மற்ற துறை பிரபலங்களோ அல்ல.. தன்னலம் கருதாமல் ஆத்மார்த்தமாக சேவை செய்து மக்களுக்கு தொண்டு புரிந்தவர்களுக்கே அறிவிக்கப் பட்டுள்ளது. அப்படி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட சிலரைப் பார்ப்போம்..

ஜெகதீஷ் லால் அஹுஜா: (வயது 84: சமூக சேவகர்: பஞ்சாப்) இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் 500-க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.

முகமது ஷெரீப்: (வயது 80: சமூக சேவகர்: உத்தர பிரதேசம்) சைக்கிள் கடை வைத்து நடத்தும் இவர், கடந்த 25 ஆண்டுகளில் பைசாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் அநாதரவாக இறந்த 25,000-க்கும் மேற்பட்ட உடல்களுக்கு அவரவர் மத அடிப்படையில் இறுதி சடங்குகளை சொந்த செலவில் செய்திருக்கிறார்.

துளசி கவுடா: (வயது 72: சுற்றுசூழல் பாதுகாவலர்: கர்நாடகா) ”காடுகளின் கலைக்களஞ்சியம்” என்று அழைக்கப்படும் இவர், ஹாலாக்கி என்கிற ஆதிவாசி வகுப்பைச் சேர்ந்தவர். காடுகளிலுள்ள தாவரங்கள், மூலிகைகள் பற்றிய அபரிமித ஞானம் கொண்டவர். காடுகளைக் காக்க அயராது உழைப்பவர். அரியவகை தாவரங்களை வளர்த்து வருகிறார்.

சத்தியநாராயண் மண்டையூர்: (வயது 69: கல்வியாளர்: அருணாசல பிரதேசம்) கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், அருணாச்சல பிரதேசத்தில் தொலைதூர கல்வியை மேம்படுத்துவதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

அப்துல் ஜபார்: ( வயது 63: சமூகசேவை: மத்திய பிரதேசம்) போபால் எரிவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவியும் மறுவாழ்வும் கிடைக்க 30 ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டு வருபவர்.

உஷா சௌமர்: (வயது 53: சுகாதாரப் பணியாளர்: ராஜஸ்தான்) மனிதக் கழிவுகளை கையால் அகற்றும் வேலையை 7 வயதில் செய்யத் தொடங்கிய இவர், பல ஆண்டுகள் உழைத்துப் போராடி இப்போது ‘சுலப் இண்டர்நேஷனல்’ அமைப்பின் தலைவராகப் பதவி வகிக்கிறார். .

ராதா மோகன் & சபர்மதி: (வயது 76 மற்றும் 47: இயற்கை விவசாயம்: ஒடிஷா): காந்திய கொள்கையில் பிடிப்பு கொண்ட அப்பா-மகள் கூட்டணி! நாடு முழுவதும் உள்ள தரிசு நிலங்களை வளமிக்க இயற்கை விவசாய நிலங்களாக மாற்றியதில் இவர்களுக்கு பெரும் பங்குண்டு! விவசாயிகள் ஆர்கானிக் விதைகளை பரிமாறிக் கொள்ளவும் கரிம வேளாண்மையை கற்றுக் கொள்ளவும் உதவுகிறார்கள்.

குஷால் கொன்வார் சர்மா: (வயது 60: கால்நடை மருத்துவர்: அஸ்ஸாம்) ஆசிய யானைகளின் பாதுகாப்புக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த குவஹாத்தி கால்நடை மருத்துவர். கடந்த 30 வருடங்களில் ஒரு நாள்கூட பணிக்கு விடுப்பு எடுத்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 700 யானைகளை குணப்படுத்துகிறார்.

டிரினிட்டி சாயூ: (வயது 62: மேகாலயா: விவசாயம்) மேகாலயாவிலுள்ள ஜைந்தியா மலைப் பகுதிகளில் கிட்டதட்ட அழிந்துபோன பாரம்பரிய லாக்டோங் வகை மஞ்சள் உற்பத்தியை மீண்டும் துவக்கச் செய்தவர். இதன்மூலம் அந்த பகுதி பெண்களின் வருமானத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்து, 800-க்கும் பெண்களை வழிநடத்திய முன்னாள் பள்ளி ஆசிரியர். பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கச் செய்தவர்.

ரவி கண்ணன்: (வயது 55: புற்றுநோய் மருத்துவர்: அஸ்ஸாம்) சென்னையைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணரான இவர், அஸ்ஸாமிலுள்ள தொலைதூர பராக் பள்ளத்தாக்கில் 70,000-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்த மருத்துவர்.

எஸ்.ராமகிருஷ்ணன்: (வயது: 65: சமூகசேவகர்: தமிழ்நாடு) ஒரு விபத்தில் அடிபட்டு கழுத்துக்கு கீழே செயலற்றுப் போன நிலையிலும் மனம்தளராமல் அரிய சமூகசேவையாற்றுபவர்.

சுந்தரம் வர்மா: (வயது 68: காடுவளர்ப்பு: ராஜஸ்தான்) பாலைவன நிலமான ராஜஸ்தானில் தனியொருவராக 50 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை நட்டு வளர்த்தவர். ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே செலவழித்து 100% மரங்களையும் உயிர்ப்பித்தவர்.

முன்னா மாஸ்டர்: (வயது 61: கலை கலாசாரம்: ராஜஸ்தான்) இஸ்லாமிய மததைச் சேர்ந்த பஜன் பாடகர். ஆனால், மாடுமேய்க்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பற்றி புகழ்ந்து பாடல்கள் இயற்றி பஜன்கள் செய்து வருபவர்.

யோகி ஏரோன் : (வயது 81: மருத்துவம்: உத்தரகண்ட்) இமயமலைச் சாரலில் குக்கிராமங்களில் தீக்காயம் மற்றும் விஷக் கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பவர்,

ரஹிபாய் சோமா போபரே : (வயது 56: இயற்கை விவசாயம்: மஹாராஷ்டிரா) அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்வியறிவற்ற பழங்குடி விவசாயியான இவர், இயற்கை விவசாயத்தில் பல புரட்சிகளைச் செய்து உலகப் புகழ்பெற்றவர்.

மூஜிக்கல் பங்கஜாக்ஷி: (வயது 70: தோல்பாவை கலை) தோல்பாவை கலையில் வல்லவரான இவர், தற்போது அழியும் நிலையில் உள்ள நோக்குவித்யா பவக்கல்லி என்கிற கேரள பாரம்பரிய தோல்பாவைக் கலை வடிவத்தை பாதுகாத்து வருகிறார்.

Comments

கேஆர்எஸ். சம்பத் says :

தன்னலம் கருதாமல் சேவை செய்யும் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :