• SPARKLES | மினுமினு

என்கிட்டே மோதாதே! நான் சிம்மசொப்பனம்!


எஸ்.கல்பனா

இந்திய அரசியல் களத்தில் கட்சி வேறுபாடின்றி அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்குபவர் சுப்பிரமணியம் சுவாமி என்று சொல்லலாம். ஊழலுக்கு எதிராகவும் ஆணவ அரசியலுக்கு எதிராகவும் துணிந்து குரல் கொடுப்பவர்!

இவரது இந்த போர்க்குணம் – ஆணவப் பேராசிரியர் ஒருவருக்கு எதிராக கல்லூரிப் பருவத்திலேயே ஏற்பட்டதும் அதனால் இருவருக்கும் ஏற்பட்ட விளைவுகளும் இன்றுவரை மிகப் பிரசித்தம்! அது என்ன சம்பவம்?!

1965ம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் கழகத்தில் (Indian Statistical Institute ISI) ஒரு 19 வயது மாணவனாக MA ஹானர்ஸ் மேதமேடிக்ஸ் வகுப்பில் சேர்ந்தார் சுப்பிரமணியம் சுவாமி. அதற்கு முன்னதாக BA ஹானர்ஸ் இளங்கலைப் படிப்பில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

கல்கத்தாவில் இந்த புள்ளியியல் கழகத்தில் சேர்ந்தபோது நடந்த சம்பவம் அவர் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது! அந்த புள்ளியியல் கழகத்தின் தலைவராக (சேர்மன்) இருந்தவர் – இத்துறையில் உலகப்புகழ் பெற்ற பேராசிரியர் மகளனோபிஸ்.

இந்தியாவின் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தையே அவர்தான் எழுதினார். அத்திட்டமே மகளனோபிஸ் திட்டம் என அழைக்கப்பட்டது.

ஆனால், சுப்பிரமணியம் சுவாமியை அவருக்கு அறவே பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் – சுப்பிரமணியம் சுவாமியின் தந்தைக்கும், மகளநோபிசுக்கும் தொழில்முறை விரோதம். அதற்கு முன்னதாக இருவரும் அரசு புள்ளியியல் துறையில் வேலைபார்க்கும்போது ஏற்பட்ட விரோதம்.

அதனால் மகளனோபிஸ், தந்தை மேலிருந்த வெறுப்பை அவரது மகன் சுப்பிரமணியம் சுவாமி மேல் காட்டினார். அந்த புள்ளியியல் கழகத்தின் மற்ற பேராசிரியர்களும் மகளநோபிஸைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல், சுப்பிரமணியம் சுவாமியை அனைத்து பரீட்சைகளிலும் பெயில் ஆக்கினர்

தொடர்ச்சியாக பெயில் மார்க் வாங்கிய சுவாமி, எவ்வளவு போராடியும் பாஸ் ஆக முடியவில்லை. கிட்டதட்ட அவன் வாழ்க்கையே அழிந்த சூழல்! அப்போதுதான் இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் மகளநோபிஸ் என்பது தெரியவந்தது.

இத்தனை பெரிய செல்வாக்கு உள்ள மனிதரை ஒரு 19 வயது மாணவன் என்ன செய்யமுடியும்?

ஆனால் சுப்பிரமணியம் சுவாமி முடிவெடுத்தார் - மகளநோபிஸை பழிவாங்குவது என்று! அப்புறம் ஆரம்பித்தது விளையாட்டு!

கல்லூரி லைப்ரரிக்கு போய் மகளநோபிஸ் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் கரைத்துக் குடித்தார். மகளநோபிஸ் மேற்கோள் காட்டிய கட்டுரைகளையும் படித்தார். மாதக்கணக்கில் லைப்ரரியே கதி என்று குடியிருந்தது வீண்போகவில்லை!

மகளநோபிஸ் உருவாக்கிய ’இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்’ என்பது, 1930-ல் அவ்வளவாக புகழ்பெறாத எம்.ஏ.ஃபீட்மேன் என்ற ரஷ்யப் பொருளாதார நிபுணரால் எழுதப்பட்ட கட்டுரையின் அப்பட்டமான காப்பி என்பது புரிய வந்தது. ஆனால் இவற்றை இந்திய ஊடகங்களுக்கு அனுப்பினால், மகளநோபிசுக்கு இருக்கும் செல்வாக்கு காரணமாகக் கண்டுகொள்ளமாட்டர்கள் என அறிந்து ஹார்வர்டு பல்கலைகழகத்தின் எகனாமிக்ஸ் துறைக்கு விரிவாக கட்டுரை எழுதி அனுப்பினார். .

மேலும் மகளநோபிஸ் ‘பிராக்டைல் அனாலிஸிஸ்’ (Fractile Analysis) என்ற ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை சர்வதேச பொருளாதார ஜர்னல் ஒன்றில் எழுதியிருந்ததைப் படித்தார். அதில் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்ததைக் கண்டறிந்தார் சுப்பிரமணியம் சுவாமி. மிகவும் நுணுக்கமாக அந்த கட்டுரையை ஆராய்ந்து படித்து, அதிலிருந்த தவறூகளைச் சுட்டிக் காட்டி துல்லியமான கணித விபரங்களூடன் அதே பத்திரிகைக்கு சுப்பிரமணியம் சுவாமி கடிதம் எழுதினார்.

அந்த ஜர்னலிலிருந்து மகளநோபிஸை தொடர்புகொண்டு "உங்கள் கட்டுரைக்கு இப்படி ஒரு மறுப்பு வந்துள்ளது. உங்கள் கோட்பாடு தவறு என்று சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. இதற்கு நீங்கள் சரியான பதில் சொல்லவில்லை எனில் இகட்டுரையை பிரசுரிப்போம்" என கடிஅதம் அனுப்பினர்.

அக்கட்டுரையை படித்த மகளநோபிசுக்கு தலைசுற்றியது. அவரால் அதற்கு மறுப்பு எழுதவே முடியவில்லை. அவ்வளவுதான்! அந்த ஜர்னல் மகளநோபிஸின் திருட்டுத்தனத்தை வெளியிட்டு "இவரது கட்டுரையை திரும்ப பெறுகிறோம்" எனவும் அறிவுத்தது! அத்தோடு சரி. மகளநோபிஸின் சர்வதேச செல்வாக்கு ஒரே வினாடியில் சரிந்தது.

அதுமட்டுமா?! சர்வதே அளவில் அவருக்குக் கிடைத்த நிதியுதவி, ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு, சர்வதேச பொருளாதார நிபுணர்களுடன் மேற்கொண்டு வந்த பிராஜக்டகள் என்று அத்தனையும் பறிபோயின. ஒரே நிமிடத்தில் அனைத்து பெயரும் புகழும் காலி.

இந்த சம்பவத்துக்கு பிறகு, சுப்பிரமணியம் சுவாமிக்கு நடந்ததும் சரித்திரம்தான்! மக்ளநோபிஸின் கட்டுரையை இவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து எழுதிய சுவாமிக்கு வயது வெறும் 19 என்பதை ஹார்வர்டு பல்கலைக் கழகத்தால் நம்பவே முடியவில்லை! உடனடியாக, அப்பல்கலைக்கழகத்தின் எகனாமிக்ஸ் துறையில் இருந்து ஒரு கடிதம் வந்தது.

"உங்கள் கட்டுரையை படித்தபின் உங்கள் வயது 19 என்றே நம்ப முடியவில்லை. இத்தனை ஆழமான அறிவுள்ள ஒருவரை நாங்கள் மாணவராக அடைய பெருமிதம் கொள்கிறேம். நீங்கள் விரும்பினால், உடனடியாக ஹார்வர்டில் பி.ஹெச்.டி படிப்பில் ஆராய்ச்சி மாணவராக வந்து சேரலாம்’’ என்று அக்கடிதத்தில் எழுதியிருந்தது.

’’அவ்வளவுதான்! வாழ்க்கை ஒரே வினாடியில் எனக்கு கலர்ஃபுல்லாக மாறியது! கல்கத்தாவில் நசுக்கப்பட்ட என் படிப்பு, ஒரே வினாடியில் 180 டிகிரி கோணத்தில் திசைமாறி ஹார்வர்டில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது. அதன்பிறகு ராக்கெட் வேகத்தில் என் படிப்புப் பயணம் வேகமெடுத்தது. மக்ளநோபிஸ் அன்று என்னை அவ்வாறு வஞ்சிக்காவிட்டால், இப்படியொரு உத்வேகம் எனக்கு ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்’’ என்று சொல்லிச் சிரிக்கிறார் சுப்பிரமணியம் சுவாமி.
Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதற்கு இந் நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :