• GLITTERS | பளபள

அரசு அதிகாரிகளை அசத்தல் ஆக்கும் 'மிஷன் கர்மயோகி'!


கட்டுரை: ஜி.எஸ் எஸ்.

சமீபத்தில் மத்திய அரசு ’’மிஷன் கர்மயோகி’’ என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அது என்ன ‘’மிஷன் கர்மயோகி’’ திட்டம்?!

இந்த திட்டம் அரசாங்கத்தின் மிகப்பெரிய மனிதவள மேம்பாட்டு சீர்திருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களை ஆக்கபூர்வமானவர்களாக மாற்றி எதிர்காலத்திற்காக அவர்களைத் தயார்படுத்துவதுதான் மிஷன் கர்மயோகி திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டின் அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமாகவும் இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இப்போது நடப்பது தொழில்நுட்ப யுகம். எங்கெங்கும் தொழில்நுட்பம் நுழைந்துவிட்டது. அரசுத் துறைகளிலும்தான். கணினியும் அது தொடர்பான தொழில்நுட்பமும் வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. மின்னல் வேகத்தில் புள்ளிவிவரங்களை சீரமைக்கிறது. கணக்குப் போடுகிறது. ஒவ்வொன்றும் பதிவு செய்யப்படுவதால் - அந்தப் பதிவை முன்பின்னாக மாற்றியமைக்க முடியாது என்பதால் - அரசு அலுவலகங்களில் நிலவக் கூடிய சில இடர்களும் ஊழல்களும் களையப்படுகின்றன.

மக்கள் சேவையில் தொழில்நுட்பத்துக்கு முக்கிய பங்கு உருவாகி வருகிறது என்பது உண்மைதான். இருந்தபோதிலும் இந்தத் தொழில்நுட்பங்களை இயக்குபவர்கள் மனிதர்கள்தான். அதாவது அரசு ஊழியர்கள். மக்கள் சேவை என்பது அவர்கள் மனதில் மிக ஆழமாகப் பதியும்போதுதான் அதனால் மக்களுக்கு பலன் இருக்கும். அப்போதுதான் அரசின் சேவைகள் துல்லியமாக மக்களைச் சென்றடையும். இதை நோக்கமாகக் கொண்டு துவக்கப்பட்டதுதான் கர்மயோகி எனப்படும் இயக்கம்.

கர்மம் என்றால் கடமை. “நம்முடைய செயல் சேவை மனப்பான்மையோடு இருக்க வேண்டும். ஏதோ கொடுத்த கடமைக்காக ஏதோ வேலை செய்தோம் சம்பளம் வாங்கினோம் என்று இருக்கக் கூடாது. யார் தன்னுடைய பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்களோ அவர்களே கர்மயோகிகள். அனைத்து அரசுப் பணியாளர்களையும் கர்மயோகிகளாக மாற்றுவதே மிஷன் கர்மயோகியின் நோக்கமாகும்” என்று மத்திய அரசு கூறுகிறது.

‘பப்ளிக் சர்வன்ட்’ எனப்படும் அரசு ஊழியர்கள் தம் வேலைத்திறனை மேம்படுத்தவும் வேலையில் அலட்சிய மனோபாவத்தை நீக்கவும் இத்திடம் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, இந்த ‘’மிஷன் கர்மயோகி’’ திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த அரசாங்க ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டம் குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணீ உயர் அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான கற்றலை மேற்கொள்ள வைத்து அவர்களின் முன்னேற்ற மனமாற்றத்துக்கு உதவும் என்பது இத்திடத்தின் கொள்கை.

சரி.. இந்த திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப் போகின்றன?

கர்மயோகி திட்டத்திற்கு பிரதம மந்திரி தலைமை தாங்குவார். அவருக்குக் கீழே ஒரு மனிதவளக் குழு செயல்படும். இதுதவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் ஆகியோரும் இந்தக் குழுவில் இணைந்திருப்பார்கள். மேலும் சிறந்த கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், சர்வதேச நிபுணர்கள் ஆகியோரும் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அதிகாரிகள் முதல் செயலாளர்கள் வரை அனைவருக்கும் இந்த திட்டம் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. சிவில் சர்வீஸ் பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர் ஒவ்வொருவரின் திறமையையும் பட்டைதீட்டி அவர்களை கர்மயோகிகளாக மாற்றுவதற்காகவே மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உலகத்தின் மிகப்பெரிய அரசு சேவைகள் சீர்திருத்த திட்டமாக இருக்க வாய்ப்பு உண்டு. இந்த திட்டத்தில் பயிற்சி முறை மற்றும் அணுகுமுறையில் சில மாறுதல்கள் கொண்டுவரப்பட உள்ளன. இந்த மாறுதல்களை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training) பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலை இப்போது பார்ப்போம்.

எந்தப் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதற்கான தரநிர்ணயம் இங்கே குறைந்திருக்கிறது. அதை உருவாக்க வேண்டும்.

ஒரு காரியத்தைச் செய்வதற்கு சரியான அதிகாரியை தேர்ந்தெடுப்பதில் சிரமங்கள் உள்ளன. அதை எளிதாக்க வேண்டும்.

ஒருவரது பணியைச் செய்வதற்கான பணிநோக்கம் மற்றும் அவரது திறமை ஆகிய இரண்டுக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும்.

சில சமயம் முயற்சிகளைத் தேவையில்லாமல் இரட்டிப்பாக்குவது, செய்ததை மீண்டும் செய்வது போன்றவையும் உள்ளன. இவையும் தவிர்க்கப்பட வேண்டும்

அரசு ஊழியர்கள் சர்வதேச, சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயம் இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருக்க வேண்டும். இரண்டையும் கர்மயோகி இயக்கம் சிறப்புறச் செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் யாருக்கானது? இது எல்லா மத்திய அரசு ஊழியர்களுக்குமானது என்றாலும் இப்போதைக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஒருவித நிர்வாக சீர்த்திருத்தம் எனலாம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இப்போதே கூட இதுபோன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன! அதற்குப் பிறகுதான் அவர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். என்றாலும் கர்மயோகி திட்டத்தில் அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு அவர்களின் தனித்திறமையை மேம்படுத்த அவர்களுக்கு மேலும் பயிற்சி தரப்படும்.

‘கர்மயோகி’களாக மாறும் மத்திய அரசுப் பணியாளர்கள் அமைதி மற்றும் பணிவும் கொண்டவர்களாகவும், ப்ரோ ஆக்டிவ் எனப்படும் முறையான செயல்களை முன்னெடுக்கும் அணுகுமுறை கொண்டவர்களாகவும் திறமையுடன் விளங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் - இந்தியாவின் அரசு அதிகாரிகள் மேலும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், கற்பனைத்திறனுடன் புதுமைகளை புகுத்தி செயல்திறன் மிக்கவர்களாகவும், தம் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக, முற்போக்கானவர்களாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக தயார்படுத்துவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களை இத்திடத்தின்கீழ் பயிற்சியளித்து அவர்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முயற்சிக்கும் திட்டம் இது. இதற்காக அடுத்த ஐந்து வருடங்களில் 510.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

சில திட்டங்கள் கேட்பதற்கு மிக இனிமையாக இருக்கும். ஆனால் நடைமுறைப்படுத்தப்படும் போது உரிய குறிக்கோள்கள் எட்டப்படாமல் குறைபாடுகள் மலிந்ததாக மாறிவிடும். வேறு சில திட்டங்கள் இது நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வியைத் தொடக்கத்தில் எழுப்பினாலும் பின்னர் அவை சாத்தியமாகி தேசத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னேற வைக்கும். அந்த வகையில் ’’மிஷன் கர்மயோகி’’ திட்டம் இரண்டாவது பிரிவில் அடங்கும் என்று நம்புவோம்.

Comments

கேஆர்எஸ். சம்பத். says :

உறுதியாக நம்புவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :