• TRENDING | பர பர

சவுதியில் உருவாகிறது தெருக்கள் இல்லாத அல்ட்ரா மாடர்ன் நகரம்!





உலக வெப்பமயமாதலைத் தடுக்க, சவுதி அரேபியா, தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. அந்தவகையில் கார், தெருக்கள் இல்லாத நகரத்தை உருவாக்க அடிக்கோலிட்டது உலகளாகவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்நகரத்தை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

பல்வேறு நாடுகளும், உலக வெப்பமயமாதலைத் தடுப்பதில் முக்கிய கவனம் செலுத்திவருகின்றன. எப்பொழுதும் கச்சா எண்ணெயை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்பதால் அதற்கு மாற்றாக உலக நாடுகள் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக உருவாக்கும் வேலையிலும் செயல்பட்டு வருகின்றன.

அதிலும், கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் முடிசூடா மன்னனாகத் திகழும் சவுதி அரேபியாதான் இதில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பன் வெளியேற்ற அளவைக் குறைக்கும் மற்றொரு நோக்கத்துடனும் சவுதி அரேபியா செயல்பட்டுவருகிறது.

அதன் பகுதியாக, அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், வடமேற்கு சவுதி அரேபிய பாலைவனப் பகுதியில் நியோம் (New future-NEOM City) என்ற எதிர்கால நகரை உருவாக்கும் திட்டத்தை 2017ஆம் ஆண்டு அறிவித்தார்.

இளவரசர், தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, ’தி லைன்’ (The Line) என்ற பெயரில் அதன் பகுதியை அறிவித்துள்ளார். சுமார் 170 கிமீ பரப்பளவில் இந்த நகரம் அமையவிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளில் இதற்காக 50 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யவுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகள் திரட்டப்படும் என்றும், தெரிவித்தார். முற்றிலும் கார்பனே இல்லாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக் கொண்டு, சுமார் 26,500 சதுர கிமீ பரப்பளவில் இந்நகரம் அமைக்கப்பட உள்ளது.

சுமார் 10 லட்சம் குடியிருப்புகளுடன் அமைக்கப்படும் இந்த நகரம் 2030-ம் ஆண்டுக்குள் முழு செயல்பாட்டுக்கு வரும் என்பதையும் சவுதி இளவரசர் கூறியுள்ளார்.

இந்த நகரததின் முக்கியத்துவமே கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பதாகும். அதனால், இந்நகரத்தில் தெருக்களும் கிடையாது. கார்களும் இயக்கப்படாது. அத்துடன் சாலைகளும் அமைக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

நம் வளர்ச்சிக்காக, இயற்கையைப் ஒருபோதும் பலியாக்கக் கூடாது என்று இளவரசர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இருப்பினும், நகருக்குள் 20 நிமிடங்களுக்கு மேல் எந்தவிதப் பயணமும் இல்லாத அளவுக்கு அதிநவீன வசதியுடன் வருங்கால தொழில்நுட்ப உதவியுடன் போக்குவரத்துக்கான தீர்வு கண்டறியப்படும் என்றும் விளக்கியுள்ளார். இதெல்லாம் இளவரசரின் கனவுத் திட்டம் என்பது தான் இத்திட்டத்திற்கான சிறப்பம்சமுமாகும்.


Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :