• GLITTERS | பளபள

அன்பெனும் ஒளியைப் பரப்புங்கள்!


கே.சூர்யோதயன்

இந்தியத் திருநாட்டில் தோன்றிய ஆன்மிக அருளாளர்களில் இறைப் பணியையும் சமூகப் பணியையும் சமமாக பாவித்தவர்கள் வெகுசிலரே. அவர்களில், ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் தோன்றிய ஸ்ரீ சத்ய சாயி பாபா மிகவும் முக்கியமானவர். இன்று (23.11.2020) அவரது அவதாரத் திருநாள் பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ சத்ய சாயி பாபா தனது தாயார் ஈசுவரம்மா, தந்தையார் பெத்தவெங்கம ராயூ ஆகியோருக்கு, 1926ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி எட்டாவது மகனாக அவதரித்தார் இவர். சத்ய நாராயண விரதம் இருந்து இவரைப் பெற்றொடுத்தால், இவருக்கு சத்ய நாராயணன் எனப் பெயரிட்டனர் பெற்றோர்.

புட்டபர்த்தியில் உள்ள ஒரு பள்ளியில் தன்னுடைய ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த இவர், தனது இளம் வயதிலேயே பக்தி மார்க்கம் சார்ந்த நாடகம், இசை, நடனம் மற்றும் கதை எழுதுதல் போன்றவற்றில் மிகவும் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். படிக்கும் பொழுது, தன்னுடைய நண்பர்கள் ஏதாவது கேட்டால் உடனே அதை வரவழைத்துக் கொடுப்பார். இதனால் அவரை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

ஒரு நாள் தனது வீட்டில் இருந்தவர்கள் முன், கையில் கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். இதைக் கண்ட அவருடைய தந்தை அவரைக் கண்டித்தார். ஆனால், அவர் தன்னை. ‘ஷீர்டி சாயி பாபாவின் மறு அவதாரம்’ என்று கூறிக்கொண்டார். அவருடைய பேச்சும், செய்த அற்புதங்களும் மக்களிடையே வெகுவாகப் பரவத் தொடங்கியது. மக்கள் பலரும் வியக்கத்தக்க வகையில், விபூதி மற்றும் மோதிரங்கள், கடிகாரங்கள், லிங்கம் போன்றவற்றை வரவழைத்து அற்புதங்கள் நிகழ்த்தியதால், ஆன்மிக உலகில் அவருக்கு மதிப்பும் மரியாதையும் கூடியது.

1940ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற அவர், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கத் தொடங்கினார். அவர் மீது ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவரை ‘கடவுளின் அவதாரம்’ எனக் கருதி, 1944ஆம் ஆண்டு அவருக்குக் கோயில் எழுப்பினர்.

அதன் பின்னர், 1954ஆம் ஆண்டு, சிறு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்தார் பாபா. பிறகு இவரது பெயரில் மேலும் பல தொண்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம், பாடசாலைகள், உயர்கல்வி நிலையங்கள், குடிநீர் வழங்குதல் எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படத் தொடங்கின.

இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகில் சுமார் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் இவருடைய பெயரில் தொண்டு நிறுவனங்கள் பலவும் நிறுவப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவைகள் புரிந்து வருகின்றன.

தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு, கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரை ‘சத்திய சாயி மைய அறக்கட்டளை’ வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்துக்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்த பிரச்னையை சத்ய சாயி பாபா அவர்கள், குறுகிய காலச் சாதனையாக, அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால், இது அவரது அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்.

சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்க தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செயப்பட்டு, தோல்வியடைந்த தெலுங்கு கங்கைத் திட்டத்தினைச் சீர்செது சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியது, சத்ய சாயி மைய அறக்கட்டளை.

சத்ய சாயிபாபா மற்றும் அவர் மீது பற்றுதல் கொண்ட பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூகச்சேவை நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகச் சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம், விழுமியக் கல்வி), விழுமிய மருத்துவம், விழுமியக் குடிநீர் எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.

விழுமியக் கல்விப் பாடத்திட்டத்தின் மூலம், சாயி நிறுவனம் உலகின் பல நாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன்பெறும் வகையில் பல கல்வி அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இவை அனைத்தும் மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணங்களும் பெறுவதில்லை.

மக்களின் மனங்களில் இவ்வாறான மேன்மைமிக்க சேவை அல்லது தொண்டு எண்ணங்களை வளர்ப்பதற்காக அவரின் நிறுவனங்கள் பல ஆன்மிகச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன. அனைத்து மதக் கொண்டாட்டங்களையும் அதன் உட்கருத்தை உணர்ந்து கொண்டாடுவது, பஜனை எனப்படும் போற்றிசை, சங்கீர்த்தனம், மதங்களின் உண்மைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள ஆன்மிக வாசகர் வட்டம் என்கின்ற ஆய்வு வட்டம் போன்ற பல திருச்செயல்கள் உலகெங்கும் நடைபெறுகின்றன.

பகவான் சத்ய சாயி பாபா அவர்களுக்கு சுமார் நூறு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் உலகம் முழுவதும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட பல துறை பிரபலங்களும் முக்கிய தலைவர்களும் பல கோடி பக்தர்களும் இவரை இன்றைக்கும் கடவுளாக எண்ணி வழிபாடு செய்து வருகின்றனர்.

அவரது அவதாரத் திருநாளான இன்று அவர் அருளிச் சென்ற சிறிய அருளுரை ஒன்றைக் காண்போம்.

நாம் நமது கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக்கொண்டே கடமையைத் தள்ளிப்போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி, தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.

இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் அதில் ஒளிந்துகொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்ல காற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷ ஜந்துக்களை நுழைய விடாமல், அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.

கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலக வாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்."

‘பொதுநலமே தன்னலம்’ என்று வாழ்ந்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் அவதாரத் திருநாளில் அவர் சொல்லிச் சென்ற அருளுரைகளின்படி வாழ்வது ஒன்றே அவருக்கு நாம் செய்யும் காணிக்கையாகும்.

Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

பகவானின் அருள் அமுதங்களை மனதில் ஏற்றி வாழ்ந்தோமானால், நிம்மதி நிச்சயம் . கட்டுரை சிறப்பாக இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :