• TRENDING | பர பர

விழிமின்.. எழுமின்.. அயராது உழைமின்! சுவாமி விவேகானந்தர்.

இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். கல்கத்தாவில் ஜனவரி 12, 1863ல் விஸ்வநாத் தத்தா என்பவருக்கும், புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறியபோது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.

குழந்தைப் பருவத்தில் குறும்புத்தனமாக இருந்த சுவாமி விவேகானந்தர், படிப்பில் சிறந்து விளங்கியதோடு, வாய்மொழி, இசைக் கருவிகள் வாசிப்பது, மற்றும் தியானம் ஆகியவற்றில் பயிற்சிகளும் மேற்கொண்டார். இளம் வயதிலேயே, சாதி மத பாகுபாட்டால் சமூகத்தில் நிலவிய மூடபழக்கவழக்கங்கள் பற்றிப் பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுப்பியதோடு, குழந்தையாக இருந்தபோதே, சுவாமி விவேகானந்தருக்கு துறவிகள் மீது பெரும் மரியாதையும் ஏற்பட்டது.

சுவாமி விவேகானந்தர் 1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்தபின்னர், கல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு சேர்ந்த ஒரு வருடம் கழித்து, ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தையும் படித்ததோடு, தர்க்கவியலையும், ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றையும் கற்றறிந்தார். அவரது ஆய்வுகளில் முன்னேற்றம் அடைந்துவந்த நிலையில், கடவுள் இருப்பது தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. இருப்பினும், அங்கு நடந்த பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவுளை உணர்த்தாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.

இத்தருணத்தில்தான், ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர்’ பற்றி சுவாமி விவேகானந்தருக்குத் தெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அப்போது தக்ஷிணேஸ்வரம் காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். ஒருமுறை, சுவாமி விவேகானந்தர் தம் நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார். ராமகிருஷ்ணரிடம், “கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று விவேகானந்தர் கேட்டார். அதற்கு, ராமகிருஷ்ணர் “ஆம், நான் உன்னை இங்கே பார்ப்பது போல், இன்னும் தெளிவாக கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்றார். இது சுவாமி விவேகானந்தருக்கு அதிர்ச்சியாகவும், புதிராகவும் இருந்தது. இந்த சந்தர்ப்பமே, அவர் அடிக்கடி ராமகிருஷ்ணர் அவர்களை சந்திக்கக் காரணமாகவும் அமைந்தது.

எந்தவொரு விஷயமானாலும், அதை ஏற்கும்முன், சோதித்துப் பார்க்கும் குணம் கொண்டவர் சுவாமி விவேகானந்தர். அதனால், சோதனைகள் எதுவுமில்லாமல் ராமகிருஷ்ணர் அவர்களை குருவாக ஏற்றுக் கொள்ள அவரால் முடியவில்லை. அச்சமயம், ராமகிருஷ்ணர் தனக்கு உரைத்தது ஞாபகத்திற்கு வந்தது.

‘ஒருவர் கடவுளை உணர வேண்டும் என்றால், பணம் மற்றும் பெண்களின் மீதுள்ள ஆசையை விட்டுக் கொடுக்க வேண்டும்’ என்று அவர் கூறியதை நினைவில் கொண்ட விவேகானந்தர், ஒருமுறை ராமகிருஷ்ணரின் தலையணைக்கடியில் ஒரு ரூபாய் நாணயத்தை மறைத்து வைத்தார். வெளியில் சென்று திரும்பிய, ராமகிருஷ்ணர், தனது கட்டிலில் வந்து படுத்ததும் ஏதோ கடித்தது போல் இருந்ததால், கட்டிலிலிருந்து குதித்து எழுந்தார். பின்னர், மெதுவாக மெத்தையை உதறியபோது, அங்கே ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்ததைக் கண்டார். பின்னர், இச்செயல் சுவாமி விவேகனந்தருடையது என்பதையும் அறிந்தார், ராமகிருஷ்ணர்

இச்சம்பவத்துக்குப் பின்னர் ராமகிருஷ்ணரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு, அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரிடம் விவேகனந்தர் பயிற்சி மேற்கொண்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணரர் 1886-ல் காலமானதும் அவரது வாரிசாக விவேகானந்தர் பரிந்துரைக்கப்பட்டார்.

பின்னர் தனது வாழ்க்கையை, ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டிற்காகவும் அர்ப்பணித்த அவதாரமாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இருளில் ஒளிந்திருந்த இந்தியாவிற்கு ஒரு கலங்கரை விளக்கமாகவும், இந்திய மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் தன்னம்பிக்கை விதையையும் விதைத்தார். அவரது ஆணித்தரமான வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டியது. குறிப்பாக, இளைஞர்களை உத்வேகப் படுத்தும் வகையில் அவர் வலியுறித்திய ‘விழிமின்.. எழுமின்.. அயராது உழைமின்’ என்ற வாசகம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது!

சுவாமி விவேகானந்தர் 1890 ஆம் ஆண்டில், ஒரு நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்றார். இந்தப் பயணத்தில் வாரணாசி, அயோத்தி, ஆக்ரா, ஆழ்வார் உட்பட பல இடங்களுக்கும் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போதுதான், அவரது இயற்பெயரான ‘நரேந்திரா’ மறைந்து ‘சுவாமி விவேகானந்தர்’ என்று பெயர் பெற்றார். சமுதாயத்தில் நிலவிவந்த ஏற்றத்தாழ்வு மற்றும் சாதி கொடுங்கோன்மையை நன்கு கவனித்தார். இந்தியா ஒரு உயிருள்ள தேசமாக ஆக்கப்படவேண்டும் என்றால், ஒரு தேசிய புத்துயிர்ப்புத் தேவை என்பதையும் நன்கு உணர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் இந்திய துணை கண்டத்தின் தென் கோடியில் இருக்கும் கன்னியாகுமாரிக்கு டிசம்பர் 24, 1892ல் சென்றார். அங்கு கடலின் நடுவில் இருந்த ஒரு தனிப் பாறைக்கு நீந்தி சென்று, அங்கு அமர்ந்து தியானத்தைத் தொடங்கினார். மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்டதாகவும், இந்தியாவின் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டதாகவும் கூறினார். அவர் தியானம் செய்த அந்தப் பாறையே, இன்று விவேகானந்தர் நினைவாக, முக்கிய சுற்றுலாதலமாகத் திகழும் ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்பட்டு இன்றளவும் கன்னியாகுமரியில் தலைசிறந்து விளங்கி வருகிறது.

மேலை நாடுகளில் விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. குறிப்பாக சிகாகோவில் 1893-ல் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு, தனது உரையைத் தொடங்குவதற்கு முன், “அமெரிக்காவின் சகோதர, சகோதரிகளே!” என்று அவர் கூறிய அந்த வார்த்தைகளுக்காக மட்டுமே மாபெரும் கரவொலியைப் பெற்றார். அவரது பிரமாதமான பேச்சுத்திறனால் மேலைநாடுகளிலும் அனைவரையும் தன்பக்கம் ஈர்த்தவர். அவர் எங்கு சென்றாலும், இந்திய கலாச்சாரத்தை முன்னிறுத்தியே பேசினார்.

‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்பதை நன்கு உணர்ந்திருந்த விவேகானந்தர் 1897ல் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பைத் தொடங்கி, அதன் சிந்தனைகளையும், இலக்குகளையும் முறைப்படுத்தினார். சில வருடங்களுக்குப்பின் கங்கை நதிக்கரையில் பேலூரில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ ஒன்றையும் நிறுவினார். இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

ஜூலை 4, 1902 அன்று, சுவாமி விவேகானந்தர் தன் உயிரைத் துறந்திருந்தாலும், இன்றளவும், தனது சொற்பொழிவாலும், ஆன்மிகச் சிந்தனையாலும், ஏழை மக்களுக்காக அவர் முன்னெடுத்த காரியத்தாலும், எல்லோர் மனதிலும் நிமிர்ந்து பார்க்கப்படும் ஒரு ஆன்மீக ஒளியாகவே திகழ்ந்து வருகிறார்.


Comments

Shyamala Ranganathan says :

விவேகானந்தர் இந்தியாவில் பிறந்ததற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமை பட வேண்டும்

G.Ravindran says :

Swami Vivekanand passed away when he was 39, Adi Shankaracharya at 32, Srinivasa Ramanujan also at 32 and Subramanya Bharati when he was 38. When we look at these greats we can`t but be awestruck by what they could achieve in less than 4 decades of their existence. Makes us feel so insignificant and suitably humbled !

கேஆர்எஸ். சம்பத். says :

வாழ்க்கையின் உச்சத்தை தொட விரும்பும் ஒவ்வொருவருக்கும் விவேகானந்தர் சிறந்த வழிகாட்டி.

Krishnakumar N says :

A wonderful article on Swani Vivekananda. Aptly published by Kalki. Need his spiritual solace when we pass through tough times.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :