• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

புத்தக ருசி!


அமரர் கல்கி

நான் குழந்தையாயிருந்த காலத்திலேயே புஸ்தகங்கள் என்றால், எனக்கு அசாத்தியப் பிரேமையாம். என்னுடைய தாயார், தகப்பனார் சொல்லித்தான் இதை நான் தெரிந்து கொண்டேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எங்கே புஸ்தகத்தைக் கண்டாலும், உடனே தாவிச் சென்று அதை எடுத்துக் கொள் வேனாம். பிறகு அதைப் பக்கம் பக்கமாகக் கடித்து மென்று தின்றாலொழிய எனக்குத் திருப்தி உண்டாகாதாம்! நடுவில் புஸ்தகத்தை யாராவது வாங்கிக் கொள்ள முயன்றால், அழுகை பிடித்து விடுவேனாம்.

கொஞ்சம் வயதான பிறகு, புஸ்தகத்தைக் கடித்துச் சுவைப்பதற்குப் பதிலாக, படித்து ருசிப்பதற்கு ஆரம்பித்தேன். கதைப் புஸ்தகம் என்று எது கிடைத்தாலும் சரி, ஒரே மூச்சில் அதைப் படிக்காமல் விடுவதில்லை. விக்ரமாதித்யன் கதை முதல், கமலாம்பாள் சரித்திரம் வரையில் தமிழில் வெளியாகியிருந்த கதைப் புஸ்தகங்கள் பலவற்றை, பெரும்பாலும் இரவல் வாங்கியே படித்துவிட்டேன். பண்டித நடேச சாஸ்திரிகளின் ‘திக்கற்ற இரு குழந்தைகள்’ என்னும் புஸ்தகத்தை, ஒரு நாள் மத்தியானம் சாப்பிடாமல் படித்து முடித்தது எனக்கு ஞாபகமிருக்கிறது. ஸ்ரீரெங்கராஜுவின் ‘இராஜாம்பாள்’ என்னும் துப்பறியும் நாவலை, மண்ணெண்ணெய் விளக்கில் ராத்திரி ஒரு மணி வரையில் படித்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வருகிறது. தமிழில் படிப்பதற்கு இன்னும் ஏராளமான கதைப் புஸ்தங்கள் இல்லையே என்று நான் வருந்தியதும் உண்டு.

பிறகு, கோண எழுத்து பாஷை (ஆங்கில மொழியைப் பாமர வழக்கில் இப்படிக் குறிப்பிட்டது உண்டு) கொஞ்சம் தெரிந்ததோ இல்லையோ, இங்கிலீஷில் கதைப் புஸ்தகங்கள் படிக்கத் தொடங்கினேன். அப்புறம், புஸ்தகத்துக்குப் பஞ்சமே கிடையாது. அம்மா! அலெக்ஸாண்டர் டூமாஸின் ‘மாண்டி கிறிஸ்டோ’ முதலிய நாவல்களைப் படிக்கும்போது, எவ்வளவு பரபரப்பு! எவ்வளவு ஆவேசம்! எத்தனை நாள் ராத்திரி கண்விழிப்பு! அப்புறம் கொஞ்ச நாளில், எப்படியோ நாவல் படிப்பதில் ருசி குறைந்தது; நாளாக ஆக, நீளமான நாவல் எதையுமே படிக்க முடியாமல் போய்விட்டது. தப்பித் தவறிப் படித்தாலும் ஒரே மூச்சில் படிப்பதென்பது அசாத்தியமாயிற்று.

கதைகள், நாவல்கள் படிப்பதில் பொதுவாக, அசிரத்தை ஏற்பட்டதென் றால், வேறொரு வகை புஸ்தகங்களின்மேல் அளவில்லாத கோபம் எனக்கு உண்டாவது வழக்கம். அதாவது, இந்தியர்கள் இங்கிலீஷில் கதைப் புஸ்தகம் எழுதினார்கள் என்றால், அந்தச் செய்தியே எனக்கு ஆத்திரம் உண்டாக்கும். “இங்கிலீஷில் கதைப் புஸ்தகங்களே இல்லையல்லவா? இவர்கள் எழுதித்தான் அந்தக் குறையை நிவர்த்தி செய்யப் போகிறார்களாக்கும்?” என்று கருதுவேன்.

இத்தகைய மனோபாவத்தில் நான் இருக்கும் சமயத்தில்தான், Swami and Friends என்னும் இங்கிலீஷ் புஸ்தகம் என் கைக்கு வந்தது. ஆசிரியர் ஆர்.கே. நாராயணன் என்றும், பிரசுரித்தவர்கள், லண்டனிலுள்ள ஹாமிஷ் ஹாமில்டன் என்னும் கம்பெனியார் என்றும் போட்டிருந்தது. அதைக் கொடுத்த நண்பர், “புஸ்தகம் வெகு நன்றாயிருக்கிறது. நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். விகடனிலும் மொழிபெயர்த்துப் போட்டால் நல்லது” என்ற சிபாரிசுடன் கொடுத்தார்.

புஸ்தகத்தை வாங்கிக்கொண்ட நான், கொஞ்சநாள் வரையில் அதைப் பிரித்துப் பார்க்கவேயில்லை. அப்புறம் இரண்டு மூன்று தடவை ஞாபகப் படுத்தப்பட்ட பிறகு, “சரி, வாசித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது!” என்று எண்ணி, படிக்கத் தொடங்கினேன். முதல் பத்துப் பக்கம் படித்தேனோ இல்லையோ, புஸ்தகத்தில் ஆழ்ந்து போய்விட்டேன். பிறகு, புஸ்தகத்தை முடித்துக் கீழே வைத்த பிறகுதான், இத்தனை நேரமும் புஸ்தகம் வாசித்துக் கொண்டிருந்தோம் என்பது ஞாபகம் வந்தது. வாசிக்கும்போது, நானே மறுபடி யும் பள்ளிக்கூடத்துச் சிறுவனாக மாறிவிட்டேன். கதாபாத்திரங்கள் எல்லாரும் என்னுடைய ஆத்மார்த்த சிநேகிதர்களானார்கள். சம்பவங்கள் எல்லாம் நானே நேரில் பார்த்து அனுபவித்த சம்பவங்களாயிருந்தன. ஸ்வாமிநாதனுக்கும் அவனுடைய சிநேகிதர்களுக்கும் ஏற்பட்ட சுக துக்கங்களெல்லாம் எனக்கு ஏற்பட்டவையாகவே தோன்றின.

- ‘படித்தேன்... ரசித்தேன்...’ நூலிலிருந்து வானதி பதிப்பகம்

Comments

கேஆர்எஸ் . சம்பத். says :

கல்கி அவர்கள் அனுபவித்த ஆனந்தத்தத்தை அவர் வாசகர்களும் அவரின் எழுத்தில் அனுபவித்தார்கள். Great.

iuedbbyaxg says :

Muchas gracias. ?Como puedo iniciar sesion?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :