• GLITTERS | பளபள

சாதிப்பாரா சகாயம்?!


ராஜ்மோகன் சுப்ரமண்யன்

குடிமைப்பணியில் இருக்கும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, அரசியலுக்கு வரும் சீசன் இது போலிருக்கிறது!

அந்த வகையில் அண்ணாமலை ஐ.பி.எஸ் சமீபத்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டு, இப்போது பாஜக-வில் சேர்ந்து செயலாற்றி வருகிறார். ஐ.ஆர்.எஸ் அதிகாரியான சரவணகுமாரும் அதேபோல் பணிக்கு விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு அவரும் பாஜக-வில் இணைந்துள்ளார்.

இந்த வரிசையில் புதிய சேர்க்கையாக எதிர்பார்க்கப் படுபவர் சகாயம் ஐ ஏ எஸ். நேர்மையான இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது! ’லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்ற வாசகத்தை உருவாக்கியதோடு அதன்படி நடந்து வருபவர். மதுரையில் கலெக்டராக இருந்தபோது அங்கு நடந்த குவாரி முறைகேடுகளை வெட்டவெளிச்சமாக்கினார். அதிகார வர்க்கத்திலிருந்து பல பலவித நெருக்கடிகள் கொடுக்கப்பட்டபோதும் மசியவில்லை.

இதற்காக அவருக்குக் கிடைத்த பரிசு?! டிரான்ஸ்பர் மேல் டிரான்ஸ்பர்! இருப்பினும் தனது நேர்மையான அணுகுமுறையால் ஆட்சியாளர்களுக்கு தொடர்ந்து தலைசுற்றலை உருவாக்கி வந்தவர் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம்.

கொஞ்சம் காலம் இவரை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மேலாண் அதிகாரியாக நியமித்தனர். அதுநாள் வரை நஷ்டத்தில் இயங்கிகொண்டிருந்த அந்த நிறூவனம் லாபத்தை நோக்கி நகர ஆரம்பித்ததும், அப்பதவியிலிருந்து தூக்கி அடிக்கப்பட்டார். இப்படி பலவழிகளில் அலைக்கழிக்கப்பட்டாலும் தனது கொள்கைகளிலிருந்து சிறிது விலகவில்லை.

அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாலும் இளைஞர்களிடமும் பொதுமக்களிடமும் இதய ரோஜாவாக மாறிப்போனார். சகாயத்தின் மீது அதீத அன்பையும் நம்பிக்கையும் மக்கள் வைக்கத்தொடங்கினர்.

டெல்லியில் அரசு அதிகாரியாக பதவி வகித்துவந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து அரசியல் களத்தில் இறங்கி, வெற்றிபெற்று இப்போது முதலமைச்சராகவ பதவி வகிக்கிறார்.

’கெஜ்ரிவால் வழியில் சகாயமும் அரசியலுக்கு வரவேண்டும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புத்துணர்வு பெற்ற முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்கவேண்டும்’ என்ற குரல் இங்கும் எழத்தொடங்கியுள்ளது. ஆனால் சகாயம் இன்னமும் பிடிகொடுக்கவில்லை. ’அரசியலுக்கு வருவேன்’ என்பதை மறைமுகமாக சொன்ன சகாயம், மறைமுகமாக பல சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

ஐ ஏ எஸ் பணியில் இருந்துகொண்டே அவர் சமூக பணிகளில் களம் இறங்கினார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் வழிகாட்டுதல் பயிற்சிகளை நடத்திக்கொண்டு, ’மக்கள் பாதை’ எனும் சமூக அமைப்பின் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் பின்புலமாக செயல்பட்டு வருகிறார். தற்போது தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருக்கும் சகாயம், சமீபத்தில் தனக்கு விருப்ப ஓய்வு கேட்டு கடிதம் அனுப்பியிருப்பது, பொதுமக்களிடையே எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது!

ஓய்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறார் சகாயம் என்பது குறித்து அரசியல் வல்லுனர்களும் கூர்ந்து நோக்கத் தொடங்கியுள்ளனர். சகாயம் பெரிய அரசியல்வாதி இல்லை எனினும் ஊழல் அரசியலுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்தவர். பழுத்த அரசியல்வாதிகளுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவர்!

அதுசரி.. சகாயம் ஒருவேளை அரசியலில் நுழைந்தால் அது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? இதுபற்றி மூத்த அரசியல் ஆலோசகர் ஒருவரிடம் கேட்டோம்..

’’அதிமுக, திமுக இரண்டிற்குமே சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். புதிய இளம் வாக்காளர்களின் ஓட்டுக்கள் சகாயம் பக்கம் திரும்பலாம். இதனால் இரண்டு கட்சிகளுமே பாதிப்பிற்கு உள்ளாகும். அப்படியெனில் திமுக அதிமுகவில் இளைஞர்கள் இல்லையா? என்று கேட்டால் அவர்கள் பெரும்பாலும் வழிவழியாக கட்சியில் வந்தவர்கள். புதிய பொதுவான இளைஞர் பட்டாளத்தை ஈர்ப்பதில் இரண்டு கட்சிகளும் மந்தமாகதான் இருக்கின்றன. இவ்விரண்டு கட்சிகள் மீதும் குடும்ப அரசியல், ஊழல், சந்தர்ப்பவாதம் ஆகிய குற்றச்சாட்டுக்கள் இருப்பதினால் புதிய பட்டாளம் நிச்சயம் சகாயத்தை ஆதரிக்கும்’’ என்ற அந்த ஆலோசகர் மேலும் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்கள்..

’’ரஜினி மீது ரசிகர்கள் தவிர வெகுஜன மக்கள் ஆர்வம் கொண்டதின் காரணமே இவ்விரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஒரு தலைவரை எதிர்பார்த்துதான்! ரஜினி அரசியலுக்கு டாட்டா சொல்லிவிட்ட நிலையில் அந்த பொதுஜனமும் சகாயம் பக்கம் திரும்பலாம். இன்னொரு வியூகத்தில் ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் சகாயத்திற்கு ஆதரவு நிலை கொடுத்தால் அவரின் ரசிகர்களும் சகயாத்திற்கு பலம் சேர்ப்பார்கள்.

அதிமுக - திமுகவை மோதவிட்டு குட்டையை குழப்ப விரும்பும் பாஜகவுக்கு இப்படி வாக்குகள் சிதறுவது ஆதாயமாக இருக்கும் என்று சிலர் கூறுவதையும் கூர்ந்து நோக்கவேண்டும். சகாயத்தின் பின்னால் பாஜக இருக்க வாய்ப்புகுறைவுதான்’’ என்றார் அவர்

சரி.. சகாயம் அரசியலுக்கு வந்தால் சாதிக்க முடியுமா?

‘’சந்தர்ப்ப சூழலும் அரசியல் நகர்வும் சரியாக இருந்தால் நிச்சயம் முடியும்’’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கலைஞர் மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட ஆதரவு அலை திமுகவுக்கு குறைந்து வருகிறது. உதயநிதி களம் இறக்கப்பட்டது பலருக்கு கட்சியிலேயே சலிப்பை தருகிறது. அதிமுக தரப்பில் எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் முழுமையான மக்கள் ஈர்ப்புசக்தி அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் மூன்றாவது அணியாக மாற்றுக் கட்சி ஒன்று அமைந்தால் அதில் வலிமையான மாற்று கருத்துள்ளவர்கள் இணைந்தால் ஏதேனும் அற்புதம் நிகழலாம். அதற்கான பணீகளை சகாயம் முன்னெடுத்துச் செய்தால் மேஜிக் நிகழலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து!

அதாவது சீமான், கமலஹாசன், விடுதலை சிறுத்தைகள், ரஜினியின் ஆதரவு, கம்யூனிஸ்டுகளின் ஆதரவு தவிர நடுநிலை என்ணம் கொண்டு நல்ல சிந்தனையாளர்கள் ஆதரவு என்று பெரும் கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். இப்படி மூன்றாவது அணி வலுவாக அமைந்தால் வருகிற தேர்தலில் கணிசமாக ஓட்டுககள் கிடைக்கப் பெறும். அதேசமயம் திமுகவும் அதிமுகவும் பெரும்பான்மை பெற முடியாது. இப்படியான சூழ்நிலை அமைந்தால், தமிழக அரசியலில் புதிய மாற்றம் நிகழு வாய்ப்புண்டு.

சகாயம் அடுத்து என்ன அறிவிக்க போகிறார் என்பதை பொறுத்து புதுப்புது விஷயங்கள் நடக்கலாம். சகாயம் அத்தனை பெரிய அரசியல் அசகாய சூரர் அல்லதான்!. ஆனால் சிறு உளி கூட பெரு மலையை பிளக்கலாம். இப்பொழுது ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதலை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு சகாயத்தின் வருகை புத்துணர்வு ஊட்டக்கூடும்.

சாதிப்பாரா சகாயம்! பொறுத்திருந்து பார்ப்போம்!
Comments

Saravanan Raman says :

திருவாளர் சகாயம் சார் அவர்கள் சாதிப்பார்கள். மூளையில் நல்ல தெளிவும், உடலில் நல்ல வலுவும் இருந்தாலும், வெறும் கால்களினால் வானத்தில் ஏற முடியாது. ஏணி என்னும் கருவி தேவை. அப்படியான ஏணியாக திருவாளர் ரஜினிகாந்த் அவர்கள் இருக்கிறார்கள். அந்த களத்தினை விரைந்து அடைவதில் தான் இவரது வெற்றியின் சூட்சூமம் இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :