• GLITTERS | பளபள

அமெரிக்கா தேர்தல்... நேரடி ரிப்போர்ட்


அமெரிக்காவிலிருந்து மாறன் சந்திரசேகரன்

தேர்தல் என்றாலே கலாட்டா’ என்று உலகின் எழுதப்பட்ட விதியாக மாறிவிட்டது! நம்ம ஊரில்தான் தேர்தல் சமயத்தில் பரபரப்பு, கூச்சல் குழப்பம் என்றால் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலிலும் அப்படியே நடந்தது இந்த முறை.

டொனால்ட் டிரம்ப் VS ஜோ பிடன் மோதலில், இறுதியாக ஜோபிடன் வெற்றிவாகை சூடி அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் நிகழ்ந்தது என்ன கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்!

நாட்டின் 20 கோடி வாக்குகளை எண்ணுவதற்கு ஏன் இத்தனை களேபரம்?!

இதை புரிந்துகொள்ள அமெரிக்கா பற்றி விரிவாக அறிய வேண்டும். அமெரிக்கா (United States of America) என்பது 50 மாகாணங்கள் ஒருங்கிணைந்த ஒரு பெரிய ஒன்றியம். இதன் ஒவ்வொரு மாகாணமும் தனக்குரிய தனி சட்டத் திட்டங்கள், பொருளாதார முடிவுகள் வகுத்துகொள்ள அமெரிக்க அரசியலமைப்பு வழிவகுத்துள்ளது. அமெரிக்காவின் தலைவர் இந்த மொத்த மாகாணங்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரது அரசுக்கு நாட்டின் பாதுகாப்பு, எல்லைகள், நிதிவைப்பு போன்ற அதிகாரங்கள் உண்டு.

அறிஞர் அண்ணா சொன்ன ‘மாநிலத்தில் சுயாட்சி’ “மத்தியில் கூட்டாட்சி இதுதான்! இதற்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் என்ன தொடர்பு?

ஒவ்வொரு மாகாணமும் தம் மக்களின் சவுகரியத்துக்கு ஏற்றபடி வாக்களிக்கும் முறைகளையும், வாக்கெடுப்பு நாளையும் தீர்மானம் செய்கிறது. அமெரிக்கத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதம் முதல் செவ்வாய் நிகழும்! தேர்தல் அன்று நேரில் வாக்கு அளிக்கலாம், அல்லது தேர்தலுக்கு பல நாட்களுக்கு முன்னர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிக்கலாம், வெளியூர், நேரில் வர இயலாத மக்கள், அஞ்சல் மூலம் வாக்கு அளிக்கலாம். தேர்தல் நாளுக்கு முன் அஞ்சல் வழி வாக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

ஜார்ஜியா, பென்சில்வேனியா போன்ற மாகாணங்களில் தேர்தல் முடிந்த பின்னர் அஞ்சல் பரிசோதனை மற்றும் எண்ணிக்கை தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் கொரோனா தொற்றைத் தவிர்க்க - பல கோடி அமெரிக்க மக்கள் வழக்கத்துக்கு மாறாக அஞ்சல் வழி வாக்கு அளித்துள்ளார்கள். மேலும் பல அஞ்சல் வாக்குகள் தேர்தல் அன்று வந்து சேரவில்லை. இதனாலேயே வாக்கு எண்ணிக்கை சில நாட்கள் தாமதம் ஆகின்றன.

அப்படியானால், வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடியாத நிலையில் ஜோபிடன் வெற்றி பெற்றதாக எப்படிச் சொல்ல முடியும்?

ஜோபிடன் பெற்ற வாக்குகள் இதுவரை எண்ணப்படாத வாக்குளை விட அதிகமாக உள்ளதை வைத்து கூறுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், ராணுவ வீரர்கள் அனுப்பிய அஞ்சல்கள் இன்னும் வந்து சேரவில்லை. நவம்பர் மாத முடிவில் ஒவ்வொரு மாகாணமும் வாக்கு எண்ணிக்கை உறுதி செய்து சான்று அளிக்கும் போதுதான் தேர்தல் முழுமை பெறுகிறது. அமெரிக்காவில் பல கட்சிகள் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளில் குடியரசு கட்சியும் ஜனநாயக கட்சியும் முதன்மையானவை. குடியரசு கட்சி வலது சாரி. கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பு உடையது. ஜனநாயக கட்சி சமூக உடைமை சார்ந்த கட்சி. கல்லூரி படிப்பு முடித்த நகர்புற மக்களிடம் வரவேற்பு உடையது.

சரி அது என்ன இந்த 270 வாங்கினால் வெற்றி என்ற கணக்கு?! அது என்ன electoral college?

அதாவது அமெரிக்காவில் மொத்த electoral college எண்ணிக்கை 538. இதில் பாதியே இந்த 270. அமெரிக்க அரசியலமைப்பு electoral college? மூலம் தலைவரை முடிவு செய்கிறது. அமெரிக்க பாராளுமன்றம் இரண்டு அவைகள் கொண்டது. மேல் சட்டசபையில் (Senate) 100 உறுப்பினர்கள் உள்ளனர். அந்தந்த மாகாண மக்கள் தங்களுடைய 2 உறுப்பினர்களை நேரடியாகத் தேர்வு செய்கின்றனர். ஆறு வருடத்துக்கு ஒரு முறை இந்தத் தேர்தல் நடைபெறும்.

அமெரிக்காவில் (House of Representative) மக்களவை தொகுதிகள் உறுப்பினர்கள் 438 பேர். இவர்களை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்கிறார்கள். மேல் சட்டசபை, மற்றும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்தம் 538 ஆகும்

அமெரிக்க தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை எந்த போட்டியாளர் ஒரு மாகாணத்தில் அதிக வாக்குகள் பொறுகிறாரோ அவர் அந்த மாகாணத்தை வெல்கிறார். அதாவது அந்த மாகாணத்தின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை + இரண்டு மேல் சட்டசபை வாக்குகளை வெல்கிறார். எடுத்துக்காட்டாக கல்போர்னியாவில் ஐம்பத்தி மூன்று மக்களவை தொகுதிகள். அப்போ electoral college வாக்குகளின் எண்ணிக்கை ஐம்பத்தி ஐந்து.

சரி ஜோ மாமாவும் கமலா மாமியும் நம்ம இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் நல்லது பண்ணுவாங்களா?

நல்லது பண்ணுவதற்கு பல அறிகுறிகள் தென்படுகின்றன. அவர்களின் தேர்தல் அறிக்கை - குடியுரிமை சட்டத் திருத்தங்களை பற்றி பேசுகிறது. அமெரிக்காவாழ் இந்தியர்களின் பெருங்கனவு ஒரு பச்சை அட்டை! (Green card)! ஆனால் அமெரிக்க குடியுரிமை சட்டப்படி ஒரு ஆண்டுக்கு 25,620 நபர்கள் மட்டுமே ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து வந்து அமெரிக்காவிற்கு குடியேறலாம் என்றிருகிறது! ஆனால் இந்தியா சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்த மக்கள் பல லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டிலும் கிரீன் கார்டுக்கு விண்ணப்பம் செய்கிறார்கள்.

இதனால் 2011-ல் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்த ஒருவர் இன்று வரை காத்திருக்கும் சூழ்நிலை இருக்கிறது. இந்த சட்டத்தை மாற்றி எழுத ஜோ பிடன் தலைமையிலான புதிய அரசு உதவும் என்று அறிக்கை கூறுகிறது. ஜோபிடனின் ஜனநாயகக் கட்சி சமூகவுடைமை சார்ந்த அரசியல் கட்சி! அதனால் தம் மக்களின் வேலைவாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். H 1B அயல்நாட்டு நுழைவுச்சான்று சார்ந்த சட்டங்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழாது. நல்லது இல்லை என்றாலும் கேடு விளையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய எதிரி சீனா. எதிரிக்கு எதிரி நண்பன் அதனால் அமெரிக்கா இந்தியாவின் நண்பன். மேலும் இந்தியா வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று, தன் பொருட்களை விற்பதற்கு பெரியச் சந்தை. இந்திய அமெரிக்க நல்லுறவு நீடிப்பது இரு நாடுகளுக்குமே உகந்தது.

தேர்தல் முடிவு இன்று தெரிந்தாலும் ஜனவரி 20ஆம் தேதி 2021 வரை டிரம்ப் தான் அமெரிக்கா தலைவர். டிரம்ப் அணியினர் பல மாகாண நீதிமன்றங்களில் தேர்தல் மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெரும்பான்மையான வழக்குகள் தகுந்த ஆதாரம் இல்லாத காரணத்தினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் முன்னாள் திரை நட்சத்திரம் அதனால் நாடகம் இல்லாமல் எளிதாக வெளியேற மாட்டார். பிக் பாஸுக்கெல்லாம் பிக் பாஸ் அவர். அஞ்சல் வழி வாக்கு எல்லா மாகாணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி அஞ்சலில் வந்த வாக்குகள் சாரை சாரையாக பிடனுக்கே வந்து சேர்ந்துள்ளது.

எல்லா மாகாணங்களிலும் அஞ்சல் வாக்குளை முறைப்படி பரிசோதனை செய்துதான் முடிவுகளை அறிவித்துள்ளனர். அதை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடர்ந்ததன் மூலம், நாட்டின் தேர்தல் முறையும் மாகாண ஆளுநர்களையும் அவமதித்ததாக வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

சில ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்களிலும் பிடன் தோல்வி அடைந்துள்ளார். தேர்தல் மோசடிகள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படாத காரணத்தினாலும், இது போன்ற வழக்குகளில் தேர்ச்சி பெற்ற சட்ட வல்லுநர்களின் கருத்தினாலும் ஜோபிடன் தலைவராவது தவிர்க்க முடியாத ஒன்று.

ஜோ பிடன் தனது 47 ஆண்டுகால அரசியல் சேவையில் எல்லா கட்சியினருடன் இணக்கமாக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கும் இணக்கமான பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புவோம்.
Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :