• SPARKLES | மினுமினு

மனம் போல் மாங்கல்யம் தரும் கூடாரவல்லி வழிபாடு!


கட்டுரை: -எம்.கோதண்டபாணி

தனுர் மாதம் என்று போற்றப்படும் மார்கழி, பகவானுக்கு மிகவும் உகந்த காலமாகும். தேவர்களின் அதிகாலைப் பொழுதான இம்மாதத்தின் பிரம்ம முகூர்த்த வேளையில் யார் ஒருவர் இறைவனை வழிபடுகிறார்களோ, அவர்கள் ஆயிரம் ஆண்டுகள் பகவானை வழிபட்ட பலனைப் பெறுகிறார்கள்.

சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் கோதை நாச்சியார் மார்கழி மாதத்தில்

ஸ்ரீ ரங்கமன்னாரை நோன்பிருந்து தொழுது, தேனினும் இனிய தமது தமிழ் பாசுரங்களால் பாடி, அந்த பகவானையே மணாளனாக அடைந்தாள். நோன்பு சமயத்தில் ‘’நெய்யுண்ணோம், பாலுண்ணோம், கண்களில் மையிடோம். மலரிட்டு முடியோம்’’ எனும் மனக்கட்டுப்பாட்டோடு, இருந்து மார்கழி மாதத்தின் இருபத்தி ஏழாவது நாள் பகவானின் திருக்காட்சியோடு, அக்காரவடிசல் நிவேதனம் செய்து விரதத்தை நிறைவு செய்தாள். அந்த நாளே கூடாரவல்லி திருநாளாகும்.

இது மார்கழி மாதம் 27ஆம் நாள் (ஜனவரி 11, திங்கள்கிழமை) வைணவத் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பது பாடல்களையும்

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு உகந்த மார்கழி மாதத்தில் பாடித் தொழுவதால் வேண்டிய வரங்கள் அனைத்தையும் பகவான் மனமுவந்து அருளுவார். அதில் 27ஆவது பாசுரமான, ‘’கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’’ எனும் பாசுரத்தைப் பாடியதும் பகவான் திருக்காட்சி தந்து, ஆண்டாள் நாச்சியாருக்கு திருமண வரமருளியதாக ஐதீகம். கூடாரவல்லியன்று,

”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்”

எனும் பாசுரத்தைப் பாடி பகவானை வழிபடுவது சகல நலன்களையும் கூட்டுவிக்கும்.

கூடாரவல்லியன்று நெய் வடியும் பாலில் செய்த அக்காரவடிசல் எனும் சர்க்கரைப் பொங்கலை பகவானுக்கு நிவேதனம் செய்து வழிபடுவர்.

பகவானைச் சேர பாவை நோன்பு இருந்த கோதை நாச்சியார், தமக்கும் ஸ்ரீரங்கநாதருக்கும் திருமணம் செய்து வைத்தால் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்வதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொண்டாள். ஸ்ரீ கிருஷ்ண பிரேமையில் அந்த வேண்டுதலை மறந்து விட்டாள். ஆண்டாள் நாச்சியாரின் ஸ்ரீ கிருஷ்ண பக்தியால் அவள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு அவளது வேண்டுதலை சமர்ப்பிக்க முடியாமலே போய் விட்டது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ஸ்ரீ ராமானுஜர் இதுகுறித்து கேள்விப்பட்டு கோதை நாச்சியார் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் அழகர்மலை கள்ளழகருக்கு சமர்ப்பித்தார்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் 27ஆம் நாள் வைபவத்தின்போது 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கற்கண்டு, முந்திரி, பாதம், உலர் திராட்சை போன்றவற்றை கிலோ கணக்கில் சேர்த்து பல மணி நேரம் சுண்டக் காய்ச்சி தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் பகவானும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

இன்று பெருமாள் கோயில்களில், குறிப்பாக ஆண்டாள் நாச்சியார் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு சர்க்கரைப் பொங்கல் தயார்செய்து அதை பகவானுக்கு நிவேதனம் செய்து, ஸ்வாமி வழிபாட்டுக்குப் பிறகு அதை பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும். இந்த வழிபாட்டால் திருமணம் ஆகாத கன்னியர்களுக்கு மனம் போல் மாங்கல்யம் கூடும் என்பது ஐதீகம். மேலும், மன வேற்றுமையின் காரணமாக பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்வர்.
Comments

aditya says :

very interesting information . blessed .

bhamathy narayanan says :

timely information ...super.

Shyamala Ranganathan says :

அக்கார வடிசல் போல சுவையான பக்தி ரசம் சொட்டும் பதிவு

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :