• GLITTERS | பளபள

காஷ்மீர் உறைபனியில் கர்ப்பிணியை சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!


சுமித்ரா பாலகிருஷ்ணன்

காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் மீட்டு, முழங்கால் அளவு உறை பனியில் சுமார் 4 மணி நேரம் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. இதன் காரணமாக வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் முழங்கால் வரை சுமார் 3 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. அங்கு சாலை போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

கடந்த 6-ம் தேதியன்று நள்ளிரவில் குப்வாரா மாவட்டம், ஹேண்ட்வாரா பகுதி, பெடாவதார் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி ஷமிமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அந்த பெண்ணின் வீட்டில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், பனி மூடிய சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. செய்வதறியாமல் அப்பெண்ணின் கணவர், பெற்றோர் உடபட உறவினர்கள் திகைத்து நின்றனர்.

இதுகுறித்து உடனடியாக இந்திய ராணுவத்தின் சினார் படைப்பிரிவுக்கு செல்போன் மூலம் ஷமீமாவின் கணவர் மன்சூர் அகமது ஷேக் தகவல் தெரிவித்து, தங்களுக்கு உதவுமாறு கண்ணீருடன் வேண்டிகொண்டார். அதையடுத்து உடனடியாக, சம்பவ இடத்துக்கு ராணுவ மருத்துவர்கள் மற்றும் நர்ஸுகள் சகிதம் 100 ராணுவ வீரர்கள் விரைந்து வந்தனர். பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த ஷமிமாவை கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்து ராணூவ வீரர்கள் தம் தோளில் சுமந்தவாறு முழங்கால் அளவு பனியில் நடந்து சென்றனர்.

சுமார் 4 மணி நேரம் உறை பனியில் கால் புதைந்து நடந்த ராணுவ வீரர்கள், கரால்புரா ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியை சேர்த்தனர்.

ராணுவத்தினர் மூலம் அந்த சுகாதார நிலையத்தின் மருத்துவர்களூக்கு தகவல் தெரிவிக்கப் பட்டதால், உடனே விரைந்து செயல்பட்டனர். சில மணிநேரத்தில் ஷமிமாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

தனக்கு பேரன் பிறந்த சந்தோஷச் செய்தியை ஷமீமாவின் தந்தை குலாம் மீர் முதலில் சினார் ராணுவத்தினருடன் பகிர்ந்துகொண்டார். அந்த படைப் பிரிவு ராணூவத்தினருக்கு கைநிறைய இனிப்புகள் வழங்கி, ’’உங்களால்தான் இது சாத்தியமாயிற்று. நன்றி ஆர்மி! ஆண்குழந்தை பிறந்திருக்கு’’ என்று நன்றீ தெரிவித்திருக்கிறார்.

மேலும் இதுகுறித்து குலாம் மிர் நெகிழ்ச்சியுடன் கூறும்போது, ''பிரசவ வலியால் துடித்த எனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் தவித்தேன். செல்போன் மூலம் சினார் படைப் பிரிவுக்கு என் மருமகன் தகவல் தெரிவித்த்தார். உடனடியாக ராணூவத்தினர் விரைந்து வந்து எனது மகளை கட்டிலில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். அப்படி குறித்த நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்து சேர்த்ததால்தான் தாயையும் சேயையும் காப்பாற்ற முடிந்தது. முழங்கால் புதையும் அளவு பனியில் என் மகளை சுமந்து வந்து உதவிய ராணூவத்தினருக்கு ஒரு ராயல் சல்யூட்! சினார் படைப்பிரிவு வீரர்களுக்கு மனதின் ஆழத்திருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தன் நன்றீயைத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தன் ட்விட்டரில் ராணூவத்தினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நமது ராணுவ வீரர்கள் வீரம், தீரம், தொழில் நேர்த்திக்கு பெயர் பெற்றவர்கள். அதேநேரம் அவர்களது மனிதாபிமானமும் மெச்சத்தக்கது. எப்போதெல்லாம் மக்களுக்கு உதவி தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் நமது வீரர்கள் ஓடோடி வந்து உதவி செய்கிறார்கள். நமது ராணுவ வீரர்களின் வீரம், தீரம், மனிதாபிமானத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். ஷமிமா மற்றும் அவரது குழந்தையின் உடல்நலனுக்காக கடவுளை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

உறைபனியில் கர்ப்பிணியை ராணுவ வீரர்கள் சுமந்து சென்ற வீடியோவை சினார் படைப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Comments

Dr R Parthasarathy says :

These Army Men Are The Real Life Heroes & They are Gods in the Forms of Army Men. The gace Proved that they can Not Only Give Their Lives For Their Nation But They Also Can Be The Reason For New Lives To Be Born In This World. My Sincere Respects, Pranams & Salutations To Them, Hats Off

Shyamala Ranganathan says :

நாட்டை காப்பது போல வீட்டு பெண்டிரையும் ஆபத்து அவசர காலத்தில் காக்கும் நம் படைவீரர்களின் கடமை உணர்ச்சிக்கு வணக்கம்

கேஆர்எஸ் . சம்பத். says :

நெகிழ்வான நிகழ்வு . குழந்தையின் தாத்தா குலாம் மிர் ஸாஹப்புடன் நானும் சேர்ந்து அளிப்பது -----ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட். !!

T.Bharathi says :

காஷ்மீரில் பனிமூடிய சாலையில் உடனடியாக ஓடிவந்து ஒரு கர்ப்பிணி பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து நல்ல படியாக பிரசவம் நடக்க உதவிய இராணுவ வீரர்கள் அத்தனை பேரின் செயல் பாராட்டத்தக்கது...வணக்கத்திற்குரியது... காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது என்றார் வள்ளுவர் நம் இராணுவ வீரர்கள் காலத்தினால் செய்த இந்த உதவி சிறிதல்ல...மிக பெரிது.....அவர்களுக்கு மிக பெரிய சல்யூட்.

xecomfvycc says :

Muchas gracias. ?Como puedo iniciar sesion?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :