• GLITTERS | பளபள

ஹேப்பி நியூஇயர்: சரித்திரப் பதிவுகள்!


ஜி.எஸ்.எஸ்.

ஜனவரி 1 என்றதும் ஆங்கில புத்தாண்டு தினக் கொண்டாட்டம் மட்டுமே சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், உலகின் சரித்திர பக்கங்களை புரட்டிப் பார்த்தால் அந்த தினத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்திருப்பது தெரிய வரும். அவற்றில் சில இதோ..

.

அடிமை விலங்கு அறுபட்டது

அமெரிக்காவில் 1863-ல் ஜனவரி 1 அன்று ஆப்ரஹாம் லிங்கன் அந்த சரித்திரத் திருப்புமுனையான சட்டத்தை உறுதிப்படுத்தினார். அதாவது ‘மீட்டெடுக்கும் அறிவிப்பு’ (emancipation proclamation). இதன்படி அமெரிக்காவில் வாழ்ந்த 35 லட்சம் ஆப்பிரிக்க-அமெரிக்க அடிமைகள் விடுவிக்கப்படுவதற்கான தொடக்கம் உண்டானது. இந்த அறிவிப்பு அமெரிக்காவிலுள்ள அடிமை முறையை ஒட்டுமொத்தமாக அழித்து விடவில்லை. என்றாலும் கோடிக்கணக்கான அமெரிக்கர்களின் மனதை சரியான பாதையில் திசைதிருப்ப உதவியது. அதுமட்டுமல்ல.. இந்த அறிவிப்புக்குப் பிறகுதான் அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் கருப்பர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனவேதான் மனித சுதந்திரத்தின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

.

சுதந்திர ஆஸ்திரேலியா உருவானது

பிரிட்டனிலிருந்து விடுபட்டு சுதந்திரக் குடியரசாக ஆஸ்திரேலியா உருவானது 1901 ஜனவரி 1-ம் தேதியன்றுதான்! (ஆனால் இன்னமும் அந்த நாட்டின் அலங்காரத் தலைவி பிரிட்டிஷ் அரசிதான் என்பது வேறு விஷயம்).

.

தைவான் மலர்ந்தது

சீனாவின் ஒரு பகுதியா இல்லையா என்பது இன்னமும் தெளிவு படுத்தப்படாத நிலையில் உள்ள தைவானின் முதல் ஆட்சி ஜனவரி 1, 1912-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. தைவானின் பூர்வீக குடிமக்கள் அங்கு உள்ள பழங்குடியினர்தான். 17ஆம் நூற்றாண்டில் நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்ட தீவு இது. கம்யூனிச கட்சி சீனாவை ஆக்கிரமித்தபோது அங்கிருந்து வெளியேறிய அப்போதைய ஆளும் கட்சியினரும் கணிசமான பொதுமக்களும் தைவானில் புகுந்து கொண்டு அங்கு ஆட்சி அமைத்தனர்.

.

பாதுகாப்பான கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது

வழக்கமான கண்ணாடி உடையும்போது பெரிய பெரிய பகுதிகளாகச் சிதறி உடைந்து கடுமையான சேதத்தை உண்டாகும். ஆனால் பாதுகாப்பான கண்ணாடி உடையும்போது ஆயிரக்கணக்கான சிறு சிறு பகுதிகளாக உடையும் என்பதால் பாதிப்பு மிகக் குறைந்த அளவுதான் இருக்கும். (இளமை இதோ இதோ என்று பாடியபடி கண்ணாடியை உடைத்துக்கொண்டு கமல் பைக்குடன் வெளிவருவது நினைவுக்கு வருகிறதா?).இந்தப் பாதுகாப்பான கண்ணாடிகளைத்தான் இனி கார் தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற சட்டம் 1937 ஜனவரி 1 அன்று பிரிட்டனில் அறிமுகமானது.

.

முதியோர் ஓய்வூதிய சட்டம் அறிமுகமானது

பிரிட்டிஷ் அரசு 1908 ஜனவரி 1 அன்று முதியோர் ஓய்வு ஊதிய சட்டத்தை தனது பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. நவீன சமூகநல திட்டங்கள் பலவற்றின் முன்னோடியான சட்டம் என்று இது கருதப்படுகிறது.

1909 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 70 வயதை தாண்டியவர்களுக்கு வாரத்துக்கு 5 ஷில்லிங் ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று தீர்மானமானது. இதற்கான நிதிச்சுமையை வரி செலுத்துபவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவானது. ஆண்டுக்கு 31.10 டாலரைவிட குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு நன்னடத்தை சான்றிதழ் இருப்பின் இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவதாக அத்துடன் பிரிட்டனில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக வசிப்பவர்கள் மட்டும்தான் இந்த ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றவர்களானார்கள்.

.

கார் தயாரிப்பு நிறுத்தப்பட்டது!

1942 ஜனவரி 1 அன்று அமெரிக்க அரசு அதிர்ச்சிகரமான ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அந்த நாட்டில் கார், லாரி போன்ற வாகனங்கள் தயாரிக்கப்படக் கூடாது என்றது அந்த அறிவிப்பு. காரணம் அப்போது நிகழ்ந்துகொண்டிருந்த உலகப்போர். அந்த போருக்குத் தேவைப்படும் ஜீப், ராணுவ லாரிகள், வெடிகுண்டுகளை வீசும் வசதி கொண்ட வாகனங்கள் போன்றவற்றை மட்டுமே - வாகன உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கவேண்டும் என்றது அந்த சட்டம்.

.

‘புகை உடலுக்குப் பகை’ வாசகம் கட்டாயப்படுத்தப்பட்டது

சிகரெட் பெட்டிகளின் மீது எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட வேண்டும் என்பதை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடுகளில் ஒன்று அமெரிக்கா! 1966 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து அமெரிக்காவில் விற்கப்படும் எல்லா சிகரெட் பாக்கெட் உறைகளிலும் ` எச்சரிக்கை. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கலாம்` என்ற வாசகங்கள் அச்சிட்டிருக்க வேண்டும் என்பது சட்டமானது. இந்தியாவில் 1971 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து தொலைக்காட்சியில் சிகரெட் விளம்பரங்கள் வெளியாவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

.

முதல் செல்போன் அழைப்பு

பிரிட்டிஷ் திரைப்பட நகைச்சுவை நடிகர் எர்னி வைஸ் என்பவர் பிரிட்டனிலிருந்து வோடபோன் நிறுவனத்துக்குப் பேசியதுதான் முதல் செல்போன் உரையாடல் என்பார்கள். இது நடைபெற்றது 1985 ஜனவரி 1ஆம் தேதி. தேதியும் வருடமும் இதுதான் என்றாலும் முதல் செல்போன் அழைப்பை யார் யாருக்கு செய்தது என்பதில் மாற்றுக் கருத்தும் நிலவுகிறது. செல்போனில் முதலில் பேசியது மைக்கேல் ஹாரிசன் என்றும் அவர் செல்போனில் அழைத்தது தன் தந்தையும் வோடபோன் நிறுவனத் தலைவருமான எர்னெஸ்ட் ஹாரிசன் என்பவர்களும் உண்டு.

.

உருவானது ஐரோப்பிய மத்திய வங்கி

1998 ஜனவரி 1 அன்று ஐரோப்பிய மத்திய வங்கி 1998 ஜனவரி 1 அன்று உருவானது. இது யூரோ எனும் பொதுவான ஐரோப்பிய கரன்சி உருவாவதற்கு முன்னோடியாக அமைந்தது. இந்த வங்கி ஐரோப்பிய யூனியனின் அனைத்து நாடுகளுக்குமான நிதிக் கொள்கைக்கு பொறுப்பெடுத்துக் கொண்டது. இந்த வங்கி தொடங்கி ஒரு வருடத்தில், அதாவது ஜனவரி 1, 1999 அன்று யூரோ தங்கள் பொதுவான கரன்சியாக இருக்கும் என்று பதினோரு ஐரோப்பிய நாடுகள் முடிவெடுத்தன.

.

கதிகலங்க வைத்த சுனாமி

தெற்காசிய நாடுகள் பலவற்றை கதிகலங்க வைத்தது 2005 புத்தாண்டு தொடக்கத்தில் அதிக சேதத்தை விளைவித்த சுனாமி. இந்தியாவில் 8,000 பேரையும் இந்தோனேசியாவில் 80,000 பேரையும் மேல் உலகத்துக்கு அனுப்பி வைத்தது இந்த ஆழிப்பேரலை.

டிசம்பர் இறுதியில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து உருவானது வலிமை மிகுந்த ஒரு நிலநடுக்கம். இதன் காரணமாக ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசிah, இலங்கை இந்தியா மாலத்தீவு ஆகிய நாடுகளை தாக்கியது. 26 டிசம்பர் 2004 முதல் 10 ஜனவரி 2005 வரை சுனாமியின் தாக்கம் நீடித்தது.

.

பெயர் மாறிய கல்கத்தா

வங்காள மொழியில் ஆரம்ப காலத்திலிருந்தே கொல்கத்தா என்றுதான் மேற்கு வங்க தலைநகர் அழைக்கப்பட்டு வருகிறது. நவீன கொல்கத்தாவில் மூன்று கிராமங்களில் ஒன்றின் பெயர்தான் கொல்கத்தா. இது பிரிட்டிஷ் ஆட்சியின் போது கல்கத்தா என்று அழைக்கப்பட்டு, அதே பெயரில் உலகெங்கும் அறியப்பட்டது. பின்னர் மேற்குவங்க அரசு தங்கள் மாநில தலைநகரின் பெயரை கல்கத்தா என்பதிலிருந்து கொல்கத்தா என்று அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டது 2001 ஜனவரி 1 அன்றுதான்!

.

ஒரே நேரம்

சர் மாண்ட்போர்ட் பிளமிங் என்பவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர். கனடாவில் வாழ்ந்தவர். உலகெங்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரவு நேரம் (ஸ்டாண்டர்டு டைம்) நிலவ வேண்டும் என்று நீண்ட காலமாக குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். உலகின் ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு நேரம் என்பதற்கு பதிலாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நேரம் என்று ஆனால் அது சட்ட, வணிக மற்றும் சமூக நோக்கங்களுக்கு வசதியானதாக இருக்கும் என்று இவர் கருதினார்.

அதற்கேறப காலப் பகுதிகள் (Time Zones) உருவாக வேண்டும் என்றார். ஒரே நாட்டில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் ஒரே நேரம் என்றால் சரியானதாக இருக்கும் என்றும் மிகவும் கண்டிப்புடன் அட்சரேகையை மட்டும் வைத்துக்கொண்டு நேரத்தை கணிக்க வேண்டாம் என்றும் இவர் கூறினார். இவரது ஆலோசனையை 25 நாடுகள் ஜனவரி 1, 1885 அன்று ஏற்றுக் கொண்டு செயல்படத் தொடங்கின.

.

ஐ.நா.வின் உருவாக்கம் அறிவிக்கப்பட்டது

1942 ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திட்டன. இது உலக அமைதிக்கான அமைப்பு குறித்தது. அதற்கு அடுத்த நாளே மேலும் 22 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கையெழுத்திட்டனர். இதில் இந்தியாவும் ஒன்று. இந்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டுதான் ஐநா சபை 1945-ல் உருவானது.

Comments

கே ஆர் எஸ் சம்பத். says :

அப்பப்பா...................எத்தனை- எத்தனை தகவல்கள்.!!!

T.Bharathi says :

ஓ! ஜனவரி முதல் தேதியில் இத்தனை விஷயங்கள் நடந்திருக்கிறதா....எல்லாம் அமெரிக்கா, பிரிட்டன் என்று வெளிநாட்டு நிகழ்வுகளாகவே இருக்கிறதே...இந்தியாவில் ஒன்றும் இல்லையோ....

T.Bharathi says :

ஓ! கொல்கத்தா பெயர் மாற்றம் இந்தியாவில் தான் நிகழ்ந்து இருக்கிறது..

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :