• அமரர் கல்கியின் கல்வெட்டுகள்

விவாதம் ஏன்?


அமரர் கல்கி

விவாதம் ஏன் ஏற்படுகிறது? அபிப்ராய பேதத்தினால் “சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் வெயில் கடுமை” என்று நான் அபிப்ராயப்படுகிறேன். “ஆமாம், வெயில் கடுமைதான்” என்று நீரும் அபிப்ராயப்படுகிறீர். நமக்குள் விவாதம் இல்லை. “இந்தக் கட்டுரை நன்றாயிருக்கிறது” என்று நான் அபிப்ராயப்படுகிறேன். “நன்றாயில்லை” என்று நீர் அபிப்ராயப்படுகிறீர்கள். நமக்குள் விவாதம் எழுகின்றது. ஆதலின் விவாதத்துக்கு அடிப்படை அபிப்ராய பேதம் என்று ஏற்படுகிறது.

இரண்டு பேர் சண்டை போட்டால், அவர்கள் எதற்காகச் சண்டை பிடிக்கிறார்களோ, அது சண்டை பிடிக்கும்படியான யோக்யதை உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஆறறிவுள்ள மனிதனுக்கும், ஐந்தே அறிவுள்ள பிராணி களுக்கும் வித்தியாசம் இதுதான். ஒரு நாய், ஒரு தெருவில் வாசம் செய் கின்றது. இன்னொரு நாய் தனது தேச யாத்திரையினிடையே அந்தத் தெருவின் வழியே போக நேர்கின்றது. “என் தெருவில் நீ எப்படி வரலாம்?” என்று ஊர் நாய் கேட்கிறது. “உன் அப்பன் வீட்டுத் தெருவோ? பொதுச் சாலையில் போவதற்கு நீ என்ன கேட்கிறது?” என்று அசலூர் நாய் சொல்லுகிறது. இதிலிருந்து அவற்றுக்குள் விவாதம் எழுகிறது. “அட முட்டாள் நாய்களா?” என்று நாம் சொல்லுவோம்.

‘எந்த நாய் தெருவோடு போனால் எனக்கென்ன?’ என்று ஊர் நாய் சும்மா இருந்திருக்கலாம். ‘உன் தெருவும் ஆச்சு. உன் மூஞ்சியும் ஆச்சு’ என்று அயலூர் நாய் வேறு வழியாய்ப் போயிருக்கலாம்.

ஆகவே, ஆறறிவுடைய மனிதர்களாகிய நாம் விவாதம் தொடங்குவதற்கு முன்னால் விவாதிப்பதற்குரிய விஷயம் தக்க பெறுமானமுள்ளதா என்று பார்த்தல் அவசியம். விவாதம் என்பது அபிப்ராயத்துக்காகத்தான் எழுகின்றது என்று முன்னமே பார்த்தோம். எனவே, அபிப்ராயத்தின் பெறுமானம் என்ன வென்பதை ஆராய வேண்டும். இது விஷயமாக நான் தீவிர ஆராய்ச்சி நடத்தி, மனிதர்களுடைய அபிப்ராயத்தின் பெறுமானம் என்னவென்பதை ஐயந்திரிபறக் கண்டுபிடித்திருக்கிறேன்.

- ‘கல்கி களஞ்சியம்’ வானதி வெளியீடு

Comments

கேஆர்எஸ். சம்பத் says :

கல்கி அவர்களின் நகைச்சுவையோடு படித்து ரசித்தேன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :